
ஐஸ் பிரேக்கர் பேச்சு என்பது ஒரு அறிமுக உரையாகும். இது ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். ஐஸ் பிரேக்கர் உரையை சிறப்பாக செய்வதற்கு முதலில் நாம் ஒரு தலைப்பை தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதில் நம்முடைய தனிப்பட்ட அனுபவங்கள், பொழுதுபோக்குகள் அல்லது சுவாரசியமான நிகழ்வை பற்றி கூட பேசலாம். நம்முடைய பேச்சு கேட்பவருக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். ஈர்ப்புடையதாகவும் இருக்க வேண்டும்.
ஐஸ் பிரேக்கர் பேச்சில் பார்வையாளர்களை கவரும் வகையில் நடுவில் ஒரு கேள்வியைக் கூட கேட்கலாம் அல்லது சுவாரசியமான கதையுடன் கூட தொடங்கலாம். பார்வையாளர்களை சிந்திக்க வைக்க எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டு அவர்களை பேசச் சொல்லலாம் அல்லது கருத்து தெரிவிக்க அழைக்கலாம். இந்தப் பேச்சு எலிவேட்டர் ஸ்பீச்சை போல் 30 வினாடிகள் இல்லாமல் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை இருக்கலாம்.
நாம் பேசும் உரை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும், எதிராளியை அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும். பேச்சில் சிறிதளவு நகைச்சுவைகளை சேர்ப்பது, அதாவது நகைச்சுவையாக பேசுவது பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கும்.
ஐஸ் பிரேக்கர் பேச்சை பேசுவதற்கு முன்பு நாம் பேச வேண்டியதை பலமுறை பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மை நன்றாக அறிமுகப்படுத்தவும், மற்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுவதுடன், நம்முடைய பயத்தையும் போக்க உதவும். எந்த ஒரு உறவையும் பராமரிக்க தகவல் தொடர்பு என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு நம் திறமைகளை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுத்து பயிற்சி பெற வேண்டியது அவசியம்.
ஐஸ் பிரேக்கர் பேச்சில் முதலில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதும், சொல்ல விரும்பும் விஷயங்களை அல்லது தகவல்களை திட்டமிட்டு பேசவும், தேவையற்ற அல்லது பொருத்தமற்ற தகவல்களை ஒதுக்கி விடவும் வேண்டும். அத்துடன் நம்முடைய பேச்சானது எப்படி இருக்க வேண்டுமென்றால், சொல்ல விரும்பும் விஷயங்கள் நிறைய இருந்தாலும் அதை சுருக்கமாக ஐந்தாறு நிமிடங்களுக்குள் சொல்லி முடிக்க வேண்டும்.
ஒரு அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வைத்ததும் பேசுகின்ற பேச்சு ஒரு மேற்கோளுடனோ அல்லது நகைச்சுவை கலந்து சிறு நிகழ்வு போன்ற கவனத்தை ஈர்க்கும் சிறு குறிப்புடனோ இருக்க வேண்டும்.
உங்கள் அறிமுகம் போலவே முடிவுரையும் சுருக்கமாக இருக்க வேண்டும். முடிவுரையின்பொழுது முக்கியமான கருத்தை மீண்டும் சொல்லலாம். வீட்டிலேயே நன்கு பயிற்சி செய்யலாம். எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்கிறோமோ அவ்வளவுக்கு மற்றவர்கள் முன்னிலையில் அதை சொல்வதில் தயக்கமும், பயமும் இன்றி சௌகரியமாக இருக்கும். கண்ணாடி முன் நின்று பயிற்சி பெறலாம் அல்லது நண்பரின் முன்னிலையில் பேசி அவரின் கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஐஸ் பிரேக்கர் பேச்சு என்பது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், அடுத்து வரவிருக்கும் விஷயங்களுக்கு அவர்களை தயார்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் முக்கியமாக முதலில் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள மறக்க வேண்டாம். சிலர் பதற்றமாக இருக்கும்போது தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள மறந்து விடுகிறார்கள்.
பார்வையாளர்கள் நாம் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பார்வையாளர்களுக்கு நாம் யார் என்பதை முதலில் தெரிவித்து விட வேண்டும். இந்தப் பேச்சு நீண்டதாக இல்லாததால் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது என்பதை மனதில் கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பேச வேண்டும்.