
வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து கட்டுவதால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும். வடகிழக்கு ஈசானிய மூலை, தென்கிழக்கு அக்னி மூலை, தென்மேற்கு குபேர மூலை மற்றும் வடமேற்கு வாயு மூலை என்று வாஸ்து பார்த்து கட்டுவது நல்லது. வாஸ்து முறையில் வீடு கட்டுவது குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துவதுடன் செல்வ வளம் கூடும். வீடு கட்ட வேண்டிய நிலத்தின் அமைப்பு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வீட்டு மனை சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது சிறப்பு.
தலைவாசல்:
பிரதான கதவு அதாவது தலைவாசல் கிழக்கு நோக்கி இருந்தால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்களைக் கொண்டு வரும் சூரியனின் கதிர்களை வெளிப் படுத்துவதால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். வீடு வடக்கு நோக்கி இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் அதிக நேரம் இருக்கும் ஹாலில் புற ஊதா கதிர்களின் தீங்கு குறைக்கப்படும். சூரிய ஒளியிலிருந்து இயற்கையான வெளிச்சம் பயன்படுத்தும் வகையில் ஜன்னல்கள் வைப்பதும், அவற்றை முடிந்தவரை நல்ல குறுக்கு காற்றோட்டத்துடன் வைப்பதும் அவசியம்.
சமையலறை:
பொதுவாக வீடு கட்டும்போது வாஸ்து பார்த்துதான் கட்டுவார்கள். இது பண வருமானத்திற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். அக்னி மூலை என்று அழைக்கப்படும் வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சமையலறை அமைவதும், நாம் கிழக்கு நோக்கி நின்று சமைப்பதும் வாஸ்து படி மிகவும் நல்லது.
காலையில் நாம் செயல்பட துவங்கும் முதல் அறை சமையலறைதான். சூரியனின் கதிர்கள் உணவின் மீது விழுந்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்களால் அதை வளப்படுத்தும். சூரிய ஒளியிலிருந்து இயற்கையான வெளிச்சம் பயன்படுத்தும் வகையில் ஜன்னல்கள் வைப்பது நல்ல காற்றோட்டத்தையும், வெளிச்சத்தையும் வழங்கும்.
பூஜை அறை:
வீட்டின் பூஜையறை வடகிழக்கு பகுதியில் இருக்கவேண்டும். சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கை கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. துளசி மாடத்தினை வீட்டின் முன்பக்கத்தில் வைப்பது நல்லது. அதுவும் துளசி மாடம் கிழக்கு திசை நோக்கி இருப்பது அவசியம். இவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியவை. கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய பால்கனிகள் கொண்ட வீடு வாஸ்துபடி சிறப்பான அமைப்பாகும்.
படுக்கை அறைகள்:
படுக்கை அறைகள் வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருப்பது சிறந்தது. தலையை கிழக்கு நோக்கி வைத்து தூங்க மாணவர்களுக்கு நேர்மறை ஆற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். வீட்டிலுள்ள யாருமே தெற்கு திசை நோக்கி தலை வைத்து உறங்கக் கூடாது. கிழக்கு அல்லது மேற்கு திசையில் தலை வைத்து உறங்கலாம். வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது. வடக்கில் தலை வைத்து படுத்தால் நோய், கனவுத் தொல்லைகள், தூக்கமின்மை ஆகியவை ஏற்பட்டு மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
குளியலறை மற்றும் கழிப்பறைகள்:
கழிவு நீர் தொட்டி வாயு மூலையான வடமேற்கு பகுதியில் அமைப்பது நல்லது. தென்மேற்கு அதாவது அக்னி மூலையில் டாய்லெட், பாத்ரூம் அமைக்கக் கூடாது. இவை மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். வடமேற்கு பகுதியில் டாய்லெட், பாத்ரூம் அமைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் கழிப்பறை மற்றும் குளியலறை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் காற்றின் திசையானது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக இருக்கும். வடகிழக்கில் கழிப்பறையை வைத்தால் கழிவறையைக் கடந்ததும் காற்று அறைக்குள் நுழையும். அதனால் மாசுபாடும், குளியலறையிலிருந்து துர்நாற்றமும் வீசும் இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மொத்தத்தில் சூரிய ஒளியையும் வெளிச்சத்தையும் தரக்கூடிய காற்றோட்டமான அறைகளும், கழிவுநீர் தேங்காமல் வெளியேற்றும் வசதியும், அதிகப்படியான வெப்பத்தையும், குளிரையும் குறைக்கக் கூடிய வகையில் வீட்டை அமைப்பதும் சிறந்தது.