தனியாக வாகனம் ஓட்டுவதற்கு பதிலாக நம்முடைய வாகனத்தில் உள்ள இருக்கைகளை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்வதைத்தான், ‘கார்பூலிங்’ என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பயணம் செய்பவர்கள் எரிபொருள் செலவுகளை மற்ற பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். பயணம் செய்பவர்கள் வழக்கமான போக்குவரத்து செலவை விட குறைவான கட்டணம் செலுத்தவும் முடியும்.
இந்த கார்பூலிங் சேவையானது பயண நேரத்தையும், செலவுகளையும் குறைக்க உதவுகிறது. போக்குவரத்து பிரச்னைக்கு ஒரே சரியான தீர்வான கார்பூலிங்குக்கு மாறுவதுதான் சிறந்தது. நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் கார்பூலிங் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கார்பூலிங் என்பது அலுவலகம் போன்ற இடங்களுக்கு ஒரே காரில் நான்கைந்து பேர் ஒன்றாகப் பயணம் செய்வதாகும். ஒரே இலக்கைக் கொண்ட பல நபர்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பயணமாகும் இது. மாசு கட்டுப்பாடு மற்றும் தினசரி போக்குவரத்திற்கு ஏற்றது. இது அலுவலகம் செல்லும் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. அத்துடன் இந்த கார்பூலிங் பிரபலமாகியும் வருகிறது.
இது தினசரி பயணத்தை எளிதாகவும், வசதியாகவும், வேகமாகவும் ஆக்குகிறது. கார்பூலிங் மற்றும் பைக்பூலிங் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
தினசரி பயணத்தை பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றியுள்ளது இந்த கார்பூலிங் வசதி. நெரிசலான பொது போக்குவரத்தில் கஷ்டப்பட்டு பயணம் செய்வதை விட, சக ஊழியர்கள் அல்லது அண்டை வீட்டாருடன் பணிக்குச் செல்வதும், திரும்புவதும் நம்பகமானது மட்டுமல்ல, வசதியானதும் கூட.
சாலையில் எப்பொழுதும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதிகமான வாகன மாசுபாடு ஊழியர்களின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. அதற்கு இந்த கார்பூலிங் வசதி சிறந்த மாற்றாக உள்ளது. கார்பூலிங்கில் 'பெண்கள் மட்டும் கார்பூலிங்' வசதியும் உள்ளது.
நான்கு பேர் நான்கு கார்களை ஓட்டுவதற்கு பதிலாக ஒரு காரை மற்ற மூன்று நபர்களுடன் பகிர்ந்து கொள்வது போக்குவரத்து நெரிசலை குறைப்பது மட்டுமில்லாமல், தீங்கு விளைவிக்கும் கார்பன் வெளியேற்றம் காரணமாக காற்றின் தரம் குறைந்து வருவதையும் தடுக்க உதவுகிறது.
பயண நேரத்தையும், செலவையும் குறைக்க உதவுகிறது. பயணத்தின்போது நல்ல நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். கார் உரிமையாளர் தன்னுடைய காரில் காலி இருக்கைகளுடன் தனியாக பயணம் செய்வதை விட, மற்றவர்களுடன் அதை பகிர்ந்து கொண்டால் எரிபொருள் செலவும் மிச்சப்படும்.