
இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு ஆன்மா உண்டு. அந்த ஆன்மாவிற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான சக்தியும் தேஜஸும் உண்டு. பிறரிடம் அவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களின் ஆன்மா அழகான ஒளிரும் தன்மை கொண்டதா அல்லது தனிமையை விரும்பும் சாதாரணமானதொன்றா என்பதைக் கண்டுகொள்ளலாம்.
சில ஆன்மாக்கள் தீய எண்ணம் கொண்டதாயிருக்கும். வேறு சில, வெண்மையான தூயமனதை பிரதிபலிப்பதாக இருக்கும். தூய ஆன்மாக்கள் பிறருக்கு நன்மை செய்யவும், பிறரை ஊக்குவிக்கவும் செய்யும். ஒரு நபர் தூய ஆன்மா கொண்டவரா என்பதைக் கண்டுகொள்ள உதவும் ஏழு அறிகுறிகளை இப்பதிவில் காணலாம்.
1. நிபந்தனையற்ற அன்பு: தூய ஆன்மா உடையவர்கள் பிறரிடம் நிபந்தனையற்ற அன்பை செலுத்துபவராய் இருப்பர். முன் பின் அறியாதவர்களிடம் கூட தங்களின் இதயபூர்வமான அன்பையும் இரக்கத்தையும் காட்டத் தவற மாட்டார்கள். 'ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே உள்ளது. அவர்களுக்காக நாம் செய்யக்கூடியது அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது மட்டுமே' என்பது அவர்களின் கொள்கையாக இருக்கும்.
2. பச்சாதாபம் உடையவராயிருத்தல்: பொதுவாக இரக்கம் காட்டும் குணம் எல்லோரிடமும் காணப்படும். ஆனால் தூய ஆன்மா கொண்டவர்கள் மட்டுமே பிறரின் துன்பங்களின் நியாய அநியாயங்களை ஆராய்ந்து கொண்டிராமல் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும் ஆறுதல்களையும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, வழங்கத் தயாராக இருப்பார்கள். அமைதியின்றித் தவிப்பவர்களிடம் பொறுமையுடன் குறைகளைக் கேட்டறிந்து தேவையான உதவிகளைச் செய்வர்.
3. ஆன்மிகத்தில் நாட்டம்: தூய ஆன்மா உடையவர்கள் தங்களின் உள் மனசக்தியை தங்களின் மனஅமைதிக்கு மட்டுமின்றி பிறருக்காகவும் உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள். அவர்கள், மெடிட்டேஷன், மனத் தெளிவு, ஆன்மிக மந்திரம், இரக்க குணம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுகொண்டு முழுமையாக கற்றுத் தெளிய விரும்புவார்கள். அவற்றை கற்றுக்கொள்வதோடு நிற்காமல் தான் கற்றதை பிறருக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைப் பயணமும் இனிதாக அமைய உதவி புரிவார்கள்.
4. சுயநலமின்மை: சுயநலமின்மை என்பது தூய ஆன்மா உடையவர்களின் ஒரு சிறந்த குணமாகும். அவர்கள் ஒரு போதும் தாம் பிறருக்கு செய்யும் உதவிகளுக்கு எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்ப்பதில்லை. மற்றவர்களுக்கு மனமுவந்து உதவி புரிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடுவதே அவர்களின் குறிக்கோளாயிருக்கும். மற்றவர்களுக்கு தன்னுடைய நேரம், உடல் உழைப்பு, பொருள் என எதையும் பாகுபாடின்றி கொடுத்து உதவுவதில் இன்பம் காண்பவர்கள் அவர்கள்.
5. மற்றவர்களை ஈர்க்கும் தூய்மையான தேஜஸ்: அவர்களிடம் உள்ள தூய சக்தியும் தேஜஸும் அனைவரையும் அமைதி கொள்ளச் செய்யும். அவர்களிடம் பழகும்போது ஒருவர் தனது சொந்த வீட்டில் இருப்பது போலவும், தான் ஒரு மதிப்பு மிக்கவராகவும் உணர முடியும். அவர்களிடமுள்ள நேர்மறை எண்ணங்கள் மற்ற அனைவரையும் பகைமை பாராட்டாமல் ஒருவருக்கொருவர் நட்புடனும் அன்புடனும் பழகுவதற்கு உதவி புரியும்.
6. ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு: வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரின் வாழ்க்கையிலும் உயர்வு தாழ்வு ஏற்படுவது சகஜம். வேலையில் பதவி உயர்வு, மன சஞ்சலம், துக்கம் போன்றவற்றை அனைவருமே உணர்ந்திருப்போம். வருத்தமான சூழல்களில் மற்றவர்கள் மனமுடைந்து அமைதியின்றி காணப்படுவர்.
ஆனால் தூய ஆன்மா உடையவர்கள் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என அனைத்தையும் சம நிலையில் வைத்துப் பாவிக்கக் கூடிய குணமுடையவர்களாக இருப்பார்கள்.
7. பிறரின் செயலை நியாயப்படுத்த முயலாத குணம்: மற்றவர்களுக்குப் பயந்தோ அல்லது தான் உயர்ந்தவன் என்ற நினைப்பிலோ சிலர் பிறரின் நிலைக்கு நியாயம் கற்பிக்கவோ விமர்சிக்கவோ செய்வதுண்டு. தூய ஆன்மா உடையவர்கள், ஒவ்வொருவரின் பிரச்னையும் தனித்துவம் கொண்டது. அதில் தலையிட்டு நியாயம் கூற எவருக்கும் தகுதியில்லை என்றெண்ணி ஒதுங்கியிருந்து விடுவர்.