
பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் முன் விவாதிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவர்களின் குழந்தையின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வளரும் பிராயத்தில் உள்ள அவர்களின் மனதில் தவறான எண்ணெங்கள் ஏற்பட விடாமல் தடுப்பது முக்கியமாகும். சில விஷயங்களை குழந்தைகளின் முன் விவாதிக்கக் கூடாது. அது அவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த விஷயங்களை பார்ப்போம்
பெற்றோர்கள் சண்டை:
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எப்போதும் முன்னுதாரணமாக இருப்பதால், அவர்கள் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் அன்போடு பழகவேண்டும். அதைப் பார்த்து குழந்தையும் மற்றவர்களோடு அன்போடு பழக வேண்டும் என்று நினைத்து வளரும். குழந்தைக்கு தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.
குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. அது குழந்தையின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.பெற்றோர்கள் எப்போதும் அன்புடன் வாழ்ந்தால், குழந்தையும் படிப்பில் கவனத்தை செலுத்தும். இல்லாவிட்டால் குழந்தைகள் பள்ளியில் தன் பெற்றோர்களின் சண்டையை நினைத்து மனதளவில் பாதித்து, அதனால் கல்விகளில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். இதுதான் குழந்தைகள் மனதை பாதிக்கும் முதல் காரணியாகும்.
எதிர்மறை உரையாடல்:
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது எப்போதும் நேர்மறையாக பேசவும், ஒரு விஷயத்தைப் பற்றி தவறாக பேச வேண்டாம்.சில நேரங்களில் பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைக்கு எதிர்மறை விஷயங்களை
சொல்கிறார்கள், அவை குழந்தையின் மனதிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு செயல்களிலும் நேர்மறையான வெற்றி கிடைப்பது பற்றி அடிக்கடி விவாதிக்கவும் எப்போதும் வெற்றியை பற்றிய சிந்தனைகளை வளர்க்குமாறு பேசுவும்.
குழந்தைகளை அடிக்கடி உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் செயல்களுக்கு ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் அது சரியாக நடக்காது, அது வெற்றி பெறாது, அது தோல்வியைத் தரும் என்ற எதிர்மறை பேச்சுகளை தவிர்க்கவும். இல்லாவிட்டால் அவர்கள் மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களும் தோல்வியை பற்றிய சிந்தனைகளும் இருக்கும்.அவர்கள் எதிர்காலத்தில் வெற்றிகரமான மனிதர்களாக உருவாக மாட்டார்கள்.
ஒப்பீடு:
உங்கள் குழந்தையை ஒருபோதும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறன்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே கல்வி கற்பதிலும் மற்ற திறன்களிலும் தனித்துவமான பண்பு உள்ளது. ஒருவர் சிறந்து விளங்கினால் அது அவரின் தனிப்பட்ட திறமையாகும். அதற்காக உங்களின் குழந்தைகளை அவருடன் ஒப்பிட்டு பேசினால், அந்த குழந்தையின் மீது பொறாமை வருமே தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்காது.
அந்த குழந்தையின் மீது சிறு வயதிலேயே உங்களின் குழந்தைக்கு பகை உணர்வை நீங்கள் ஏற்படுத்தி உள்ளீர்கள்.இது எதிர்காலத்தில் ஒரு எதிரியை தான் உருவாக்கும். உங்கள் குழந்தையின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்றால் , அவர்களின் சிறு முயற்சியையும் பாராட்டி வளருங்கள்.
மற்றவர் மீதான விமர்சனம்:
குழந்தையின் முன் ஒருவரை விமர்சிப்பது அவருக்குள் அந்த நபர் மீது வெறுப்பு உணர்வை உருவாக்கும்.எனவே, ஒருவர் பற்றி பேசும்போது எப்போதும் அவரின் நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
மூடநம்பிக்கைகள் :
குழந்தையின் முன் பேய்கள் அல்லது மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசுவது பயத்தை உருவாக்கும். இதனால் குழந்தை சிறு வயதில் இருந்தே பயந்த சுபாவத்தோடு வளரலாம். இவர்கள் எதிர்காலத்தில் எதையும் சமாளிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம்.