
தங்கம் விலை ராக்கெட் போல் ஏறிக்கொண்டே போனாலும் நகைகளின் மீதான ஆசையும், மோகமும் குறைவதாக இல்லை. சுப காரியங்களுக்கும், விசேஷங்களுக்கும் நகை வாங்குவது என்பது நமக்கு வழக்கமாக உள்ளது. அவற்றை வாங்கினால் மட்டும் போதாது, பாதுகாக்கவும் வேண்டும். தங்க நகைகளை உபயோகப்படுத்தும் முறையும், அவற்றை பத்திரமாகப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
தங்க நகைகளைப் பாதுகாக்கும் முறை:
* தங்க நகைகளை வெள்ளி நகையோடு இணைத்து அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
* நகைகளை தனித்தனியாக பைகளில் அல்லது மரப்பெட்டிகளில் வைக்கலாம். கீறல்கள் ஏற்படாமல் இருக்க மென்மையான துணியால் போர்த்தி சுற்றி வைப்பது நல்லது.
* வெல்வெட்டினால் செய்த பெட்டியில் நகைகளை வைப்பதும், வெல்வெட் பாக்ஸில் நகைகளை வைத்து லாக்கரில் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
* லாக்கரில் நகைகளை வைக்கும்பொழுது வெள்ளை காட்டன் துணியில் அல்லது பனியன் வகைத் துணியில் சுற்றி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரிலும் சுற்றி வைக்கலாம்.
* தினமும் அணியும் நகைகளை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய, புது மெருகுடன் இருக்கும்.
* நகைகளை அணிந்து கொண்டு பின்பு வாசனை திரவியங்களை உபயோகிக்கக் கூடாது. இது நகையின் பளிச் தோற்றத்தை குறைத்து விடும். அன்றாடம் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்களை உபயோகித்த பின்பு கடைசியாக நகைகளை அணிவதுதான் சிறந்தது.
* தங்க நகைகளை வெள்ளியால் செய்த தாயத்து, டாலர், ஸ்படிகமணி மாலை இவற்றுடன் கலந்து அணிவதைத் தவிர்க்கவும்.
* தங்க நகைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்க அவற்றை தனித்தனியாக பைகளில் அல்லது பெட்டிகளில் போட்டு வைக்கவும். இப்படிச் செய்வதால் கீறல்கள் விழாமல் பாதுகாக்கலாம்.
* நகைகள் திருடு போகாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் லாக்கரிலோ அல்லது பீரோவிலோ வைப்பது அவசியம்.
சுத்தம் செய்தல்:
* வெதுவெதுப்பான சோப்பு நீரில் நகைகளை சிறிது நேரம் ஊற வைத்து மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை மெதுவாக தேய்க்கவும். பிறகு சுத்தமான நீரில் கழுவி மென்மையான உலர்ந்த காட்டன் துணியால் துடைத்து ஈரம் போக உலர விடவும். பின்பு இவற்றை பத்திரமாகப் பாதுகாப்பாக எடுத்து வைக்கவும்.
* தினமும் அணியக்கூடிய தோடு, மோதிரம், சங்கிலி, வளையல் போன்றவை அதிக பயன்பாட்டால் மங்கிப்போகும். அதற்கு பூந்திக்கொட்டையை ஊற வைத்து அந்த நீரில் போட்டு எடுத்து, மெல்லிய பிரஷ்ஷால் தேய்த்து பருத்தித் துணியில் துடைத்து வைக்க புதிது போல் ஜொலிக்கும்.
பராமரிப்பது:
* நகைகளை வாங்குவது பெரிதல்ல, அவற்றை முறையாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். அதற்குக் கடுமையான ரசாயனங்களைத் தவிர்க்கவும். தங்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட சுத்தம் செய்யும் திரவங்களை மட்டும் பயன்படுத்தவும்.
* கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனம் தேவை. நீல நிற பற்பசையை பயன்படுத்தி மென்மையாகத் தேய்த்து, நல்ல நீரில் கழுவி, சிறிது நேரம் நீராவியில் காண்பிப்பதன் மூலம் கற்களில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்கலாம்.
* தினமும் அணியும் நகைகளை மாதம் ஒரு முறை சுத்தம் செய்வதும், வெளியில் அணிந்து சென்று விட்டு வந்ததும் வியர்வையின் ஈரம் போக காட்டன் துணியால் துடைத்து நன்கு உலர்ந்ததும் சேமிப்பதும் சிறந்தது.
* வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க கற்பூரத்தை சிறிது போட்டு வைத்து மெல்லிய காட்டன் துணியால் சுற்றிவைக்க கருத்து விடாமல் பாதுகாக்கலாம்.
தினமும் அணியும் நகைகளைப் பாதுகாக்கும் முறை:
* பாத்திரங்கள் தேய்க்கும்போது வளையல்கள், மோதிரத்தை அணியாமல் இருப்பது நகைகள் தேயாமல் இருக்கவும், பளபளப்பு குறையாமல் இருக்கவும் உதவும்.
* ரசாயனம் மிகுந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்பொழுது நகைகளைக் கழற்றி வைப்பது நல்லது.
* உடற்பயிற்சிகள் செய்யும்பொழுதும், விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுதும் நகைகளை அணியாமல் கழற்றி வைப்பது கீறல்கள் விழாமல் பாதுகாக்க உதவும்.