பொதுவாக, முதியவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அது வயோதிகத்தின் காரணமாகவோ அல்லது நோய்களின் விளைவாகவோ இருக்கலாம். அவர்கள் உறங்கும் மெத்தை சரியான விதத்தில் இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். முதியவர்களுக்கேற்ற மெத்தையை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதியவர்களுக்கான மெத்தையில் இருக்க வேண்டிய அம்சங்கள்: முதியவர்கள் உறங்கும் மெத்தை நடுத்தர சைசில் உறுதியாக இருக்க வேண்டும். இது முதுகெலும்பு சீரமைப்பை பராமரிக்க உதவுகிறது. நீடித்த வசதியையும் 8 முதல் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதத்துடன் வரும் மெத்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
படுக்கையில் இருந்து எளிதாக ஏறி இறங்குவதற்கும், படுப்பதற்கு ஏற்ற வகையில் வசதியான உயரத்தில் இருக்க வேண்டும். அதிக குஷன் உள்ள மெத்தைகள் அவர்களுக்கு சரிப்படாது. அவர்களது முதுகுக்கு ஏற்றவாறு சௌகரியமாக மென்மையாக இருக்க வேண்டும். முதுகுத் தண்டை ஆதரிக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக கீழ் முதுகு, இடுப்பு மற்றும் தோள்பட்டை போன்ற பகுதிகளுக்கு ஆதரவு தரும் வகையில் இருக்க வேண்டும்.
பல முதியவர்கள் இரவில் வெயில் காலத்தில் கடுமையான வியர்வையை அனுபவிக்கிறார்கள். எனவே, குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் கூடிய மெத்தைகள் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. அது போன்ற மெத்தைகளை வாங்க வேண்டும். தோள்கள் இடுப்பு மற்றும் கீழ் முதுகு போன்ற பகுதி உணர்திறன் உள்ள பகுதிகளைச் சுற்றி நல்ல அழுத்த நிவாரணம் அளிக்கும் மெத்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப்போல மெத்தைகள் வலுவான விளிம்பு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் முதியவர்கள் படுக்கையில் இருந்து கீழே விழுமாறு ஆகிவிடும். குறைந்த பராமரிப்பு தேவைப்படும் மெத்தைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மெத்தை வகைகள்:
1. நினைவக நுரை மெத்தைகள் (Memory foam Mattress): முதன்முதலில் 1960களில் நாசா விண்கல இருக்கைகள் மற்றும் சீட் பெல்ட்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது. அதிர்ச்சி - உறிஞ்சும், அழுத்தத்தைக் குறைக்கும் நினைவக நுரை ஹெல்மெட் மற்றும் ஷூக்களில் குஷனிங்காகவும், செயற்கை மற்றும் சக்கர நாற்காலி சீட்டிங் பேட்களிலும் பயன்படுத்தப்பட்டது. முதியவர்களுக்கேற்ற சிறந்த ஆதரவையும் அழுத்த நிவாரணத்தையும் வழங்குகிறது. உறுதியான நடுத்தர அளவிலான நினைவக நுரை மெத்தைகள் நல்லது. மூட்டு வலி அல்லது கீழ் வாதம் உள்ளவர்களுக்கு ஏற்ற மெத்தை வகையாகும்.
2. ஹைபிரிட் மெத்தைகள் (Hybrid Mattress): ஹைபிரிட் எனப்படும் கலப்பின மெத்தையானது இரண்டு முக்கியக் கூறுகளை இணைக்கும் ஒரு வகை மெத்தையாகும். இதனுடைய மேல் அடுக்கு நுரை மெத்தையாகவும் கீழ் அடுக்கு ஸ்ப்ரிங் மெத்தையாகவும் இருக்கிறது. இந்த ஸ்ப்ரிங் அமைப்பு முதுகெலும்பை சீராக வைக்க உதவுகிறது. சிறந்த காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. தூங்கும்போது குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் மேலே உள்ள நுரை மெத்தை மென்மையாக இருக்கும். உடலுக்கு ஏற்ற விதத்தில் சௌகரியமாக இருக்கும். மொத்தத்தில் சீரான தூக்க அனுபவத்தைத் தரும்.
3. லே டெக்ஸ் மெத்தைகள் (Latex Mattress): இவை முதுகுக்கு ஆதரவான அமைப்பை வழங்கக்கூடியவை. வயதானவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். உறுதியாகவும் மென்மையாகவும் இருக்கும். இது பருத்தி மற்றும் கம்பளி போன்ற பொருட்களுடன் இணைந்து இரண்டு அடுக்குகளாக மூன்று அடுக்குகளாக இருக்கும்.
4. பாலி நுரை மெத்தை (Poly foam Mattress): இது பாலியூரித்தீன் நுரை அடுக்குகளில் இருந்து கட்டமைக்கப்படுகிறது. இது பல்வேறு அடர்த்திகளைக் கொண்டுள்ளது. நீடித்த நிலைப்புத் தன்மைக்காக உறுதியான கட்டமைப்பில் உள்ளது. இதை அதிக விலை இல்லாமல் நடுத்தர பட்ஜெட்டில் வாங்கலாம்.