
பல்லி அனைவர் வீடுகளிலும் வாழும் ஒரு ஜீவன். அது விஷத்தன்மை உடையது என்பதால், சிலர் பல்லியை வீட்டிலிருந்து அடித்து விரட்டுவதும் உண்டு. சர்வ சாதாரணமாக சுவற்றில் மற்றும் சீலிங்கில் அது ஊா்ந்து போய்க்கொண்டே இருக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். பல்லியின் சொல்லுக்கு பலவிதமான பலன்கள் உண்டு என நம்பப்படுகிறது.
பொதுவாகவே, நமது மூதாதையர் காலத்திலிருந்தே பல்லி சொல்லும் பலன்கள் தொன்று தொட்டு நடக்கும் நிகழ்வாக உள்ளது. இதை சிலர் நம்புவாா்கள், சிலர் மூடநம்பிக்கை எனவும் சொல்லுவதுண்டு. அதே நேரம், பல்லி சொல்லும் திசையைப் பொருத்தும் ஒவ்வொருவருக்கும் அதன் பலன்கள் வேறுபடுவதுண்டு.
நாம் ஒரு காாியத்தை நினைத்திருக்கும்போது பல்லி கத்தினால், அப்போது அது கத்தும்ம் திசையைப் பொறுத்து அதன் பலாபலன்கள் அமையும். அப்போது, ‘பல்லியே சொல்லிவிட்டது’ என கூறுவதும் நடைமுறையே. பல்லி சொல்லும் பலன்களைப் போலவே நம் மீது பல்லி விழும் செய்கைகளுக்கும் பலன்கள் உண்டு. நம் மீது பல்லிகள் விழும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பல்லி ஒருவரின் தலை மீது விழுந்தால் கலகம் உண்டாகும். அதே, முகம் மீது விழுந்தால் பந்துக்கள் தரிசனம் ஏற்படும். புருவத்தின் மீது விழுந்தால் சமமான பலன்கள் நிகழும். மேலும், அரசாங்க அனுகூலம் ஏற்படலாம்.
மேல் உதட்டின் மீது பல்லி விழுந்தால் தன விரயம் ஏற்படும். அதேபோல், கீழ் உதட்டின் மீது விழுந்தால் தன லாபம் ஏற்படும். மூக்கு மீது விழுந்தால் வியாதி உண்டாகும். வலது செவியின் மீது விழுந்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.
பல்லி இடது செவியின் மீது விழுந்தால் வியாபார லாபம் உண்டாகும். பல்லி ஒருவரின் வாயின் மீது விழுந்தால் பயமுண்டாகலாம். வலது புஜத்தின் மீது விழுந்தால் ஆரோக்கியம் ஏற்படும்.
கையின் வலது மணிக்கட்டு மீது பல்லி விழுந்தால் பீடை உண்டாகும். அதேபோல், இடது மணிக்கட்டு மீது விழுந்தால் கீா்த்தி மற்றும் புகழ் ஏற்படும். பல்லி வயிற்றின் மீது விழுந்தால் தான்ய லாபம் உண்டாகும். மாா்பின் மீது விழ, தன லாபம் ஏற்படும். முழங்கால் மீது விழ, சுகம் உண்டாகும்.
கணுக்கால் மீது பல்லி விழ சுபம் உண்டாகும். நகங்கள் மீது விழ தன நாசம் ஏற்படும். இப்படி நம் உடம்பின்மீது பல்லி விழுவதன் பலன்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.