
நாய்கள் மனிதர்களுக்கு வேட்டை சமூகமாக இருந்த காலத்திலிருந்தே உதவியாக இருந்திருக்கின்றன. அதனாலேயே அவை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதில் முதன்மையானதாக இருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும், தெருவில் இருக்கும் நாய்களும் சில சமயங்களில் மனிதர்களைக் கடித்து விடுவது சமீப காலங்களில் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நாய்களின் நடத்தைக் குறித்தும், அவை நம்மைத் துரத்தினால் செய்ய வேண்டியது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
முறையான உணவு, சுதந்திரமான நடமாட்டம் மற்றும் உயிரியல் தேவைகள் என நாய்களுக்கு சில முக்கியத் தேவைகள் உள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த உணவு வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்குக் கிடைத்து விடும். ஆனால், அதற்கு நடமாடுவதற்கான சுதந்திரமோ, உயிரியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளோ இருக்காது என்பதால் சில நேரங்களில் அவை ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன.
சுதந்திர நடமாட்டம், உயிரியல் தேவைகள் பூர்த்தி அடைதல் போன்றவை தெரு நாய்களுக்குக் கிடைத்தாலும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் பற்றாக்குறையாக இருப்பதால் தெரு நாய்கள் முதலில் குழந்தைகளைத்தான் குறி வைக்கின்றன. பெரியவர்களைத் துரத்தும்போது அவர்கள் சற்று குரல் எழுப்பினாலோ அல்லது தாக்குவது போன்ற செயல்கள் செய்தாலோ உடனடியாக தெரு நாய்கள் பின்வாங்கும். ஆனால், குழந்தைகளால் உடனடியாக திருப்பித் தாக்கவோ எதிர்வினையாற்றவோ முடியாது என்பதால் குழந்தைகளை முதலில் நாய்கள் குறிவைக்கின்றன.
வளர்ப்பு நாய்கள் மீது அதன் உரிமையாளர்கள் அக்கறை செலுத்துவதுபோல் தெரு நாய்களிடம் யாரேனும் பரிவுடன் நடந்து கொண்டால் அவர்களை தெரு நாய்கள் பெரும்பாலும் தாக்குவதில்லை. தெரு நாய்கள் சில நேரங்களில் பசிக்காக மட்டுமல்ல, ஏக்கத்தினாலும் வழிப்போக்கர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. பருவ மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பது கடினம் என்பதால் அவை அச்சத்தில் இருக்கும்போது, மனிதர்களைத் தாக்குவது அல்லது துரத்துவது அதிகமாக இருக்கும். குழு மனப்பான்மை, அதாவது உணவு தேடுவது, உலவுவது போன்றவற்றின்போது தெரு நாய்கள் ஒன்றாகக் குழுவாக இருக்கும்போது கூடுதல் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும்.
ஒரு இடத்தில் தொடர்ச்சியாக, தடையின்றி உணவு கிடைக்கிறது என்றால் அங்கேயே தங்கிக்கொள்ளும் தெரு நாய்கள், உணவு கிடைப்பது நின்றுவிட்டால் வேறு இடம் நோக்கிச் செல்லும்போது அந்த இடத்தில் தெரு நாய்களுக்கு நேர்மறையான அனுபவங்கள் இருப்பதில்லை. யாராவது ஒருவர் கல் எறிந்து இருந்தால், அந்த நாய் மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதோடு, ஒரு நாய் அல்லது குழுவில் இருக்கும் வேறு நாய் மீது வாகனம் மோதியிருந்தால் அந்த நாய்கள் வாகனங்களைக் கண்டால் துரத்தும். ஒட்டுமொத்தமாக தெரு நாய்களின் நடத்தையும் இப்படித்தான் இருக்கும் எனக் கூறி விட முடியாது.
நாய்களின் உடல் மொழியை புரிந்துகொண்டு நாம் நடந்து கொள்ள வேண்டும். தங்களின் இடத்தில் ஒருவர் நுழைய முயற்சிக்கிறார் என உணர்ந்தால் நாய்கள் அவர்களைத் துரத்தவோ, தாக்கவோ ஆக்ரோஷமாக முயற்சிக்கும்போது ஆரோக்கியமான இடைவெளியை கடைபிடிப்பது நல்லது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நாய் துரத்தினால் சற்று வேகமாகச் சென்றால் நாய் நின்றுவிடும். நடந்து செல்லும்போது கைவசம் குச்சியோ அல்லது ஏதேனும் ஒரு பொருளோடு சென்றாலும் பெரும்பாலான நாய்கள் தாக்காது. நாய்கள் அச்சத்தை உண்டாக்கப் பார்க்கும் என்பதால் நாம் சத்தம் எழுப்பினாலோ அல்லது ஏதாவது பொருளை எதிர்த்து காண்பித்தாலோ அவை பின்வாங்கி விடும். நாய் குரைப்பது, அவை இயல்பாக இல்லை என்பதற்கான முதல் அறிகுறி என்பதால் நாம் இருக்கின்ற இடத்தில் சூழ்நிலையை புரிந்துகொண்டு செயல்படுவதோடு, குழந்தைகளை தனியாக விடக் கூடாது.
தற்போதைய சூழ்நிலையில் நாய்கள் கடிப்பது அதிகரித்துள்ள நிலையில், மேற்கூறிய தகவல்களை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.