சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
https://www.stnnews.net
Published on

ம் வாழ்வில் ஏதேனும் சிக்கல் நேரும்பொழுது அன்று வரை முட்டாளாக இருந்தவர் கூட சிறிய சிந்தனையின் மூலம் பெரிய சிக்கலிலிருந்து விடுபட்டு வருவார்கள். அதைக் கண்டு நாமே சில நேரங்களில் ஆச்சரியப்பட்டிருப்போம். அதேபோல் இங்கு ஒரு சாமானியனின் சிந்தனை எப்படிச் செயல்பட்டுப் பல பரிசுகளைப் பெறச் செய்தது என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒரு நாள் மீனவன் ஒருவன் மிகவும் பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே 100 பொற்காசுகள் பரிசு அளிக்குமாறு கட்டளையிட்டான்.

பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை. அரசனைப் பார்த்து, “நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் நீங்கள் வழக்கம்போல் 100 பொற்காசுகள் பரிசு அளிக்கலாம். ஆனால், பரிசு பெறுபவர், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால் அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள்.

“நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?” என்று அரசன் கேட்டான். “அந்த மீன் ஆணா அல்லது பெண்ணா என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள் என்றாள் அரசி.”

அரசனுக்குத் தனது மனைவியின் அறிவுரை மிகவும் நல்லதாகவே பட்டது. மீனவனைக் கண்டு, “நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா? பெண் மீனா?' என்று கேட்டான். அதற்கு அந்த மீனவன் பணிவாக, “அரசே இது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. பொதுவான மீன்” என்றார். மீனவனிடம் இருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்ட அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் 100 பொற்காசுகளைத் தரும்படி கட்டளையிட்டான்.

“ஐயோ 100 பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் 100 பொற்காசுகள் தந்துவிட்டீர்களே” என்று கோபத்துடன் சொன்னாள் அரசி. “நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் 100 பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சி அடைந்ததால் அவனுக்குப் பரிசு தந்தேன்” என்றான் அரசன். இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், அரசனை வணங்கி விடைபெற்றான் பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச் செல்லும்போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன், அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்து பையில் போட்டுக் கொண்டான்.

இதையும் படியுங்கள்:
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 
சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

இதை அரசனும் அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர். உடனே அரசி, “நீங்கள் அவனுக்கு 200 பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஒரு பொற்காசு கீழே விழுந்தால் என்ன? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணம் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள். அரசனுக்கும் தனது மனைவி சொன்னது சரி என்றே பட்டது. மீனவனை அழைத்து, “கீழே விழுந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டு தேடினாய். 200 பொற்காசுகள் கொடுத்தது உனக்கு நிறைவில்லையா?” என்று கோபத்துடன் கேட்டான் அரசன்.

மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், “அரசே அந்த ஒரு பொற்காசுக்காகத் தேடவில்லை. இந்தப் பொற்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும் மற்றொரு பக்கத்தில் நம் அரசின் சின்னமும் இருந்தது. யார் காலிலும் இக்காசு பட்டுவிட்டால், பெருமை மிகுந்த தங்களை அது அவமதிப்பதாக ஆகும் அல்லவா? அதனால்தான் தேடினேன் அரசே” என்று பதில் சொன்னான். சாமர்த்தியமாகப் பதில் அளித்த மீனவனுக்கு மேலும் 100 பொற்காசுகள் அளித்து மகிழ்ந்தான் மன்னன்.

இதைப் பார்த்த அரசி, ‘மேலும் ஏதாவது யோசனை கூறினால் இன்னும் நூறு பொற்காசுகளைக் கொடுக்க வேண்டி இருக்கும். இதோடு போகட்டும்” என்று விட்டு விட்டாள்.

தெளிந்து யோசிக்கும் திறன் மட்டும் இருந்து விட்டால், மூளையை வைத்து மூலதனம் பெறும் முடி சூடா மன்னர்களாக வலம் வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com