
நம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் நாம் நோ்கோட்டில் செல்வது போல தோன்றினாலும், சில சமயங்களில் சந்தர்ப்ப சூழல்கள், தேவையில்லாத நிகழ்வுகள் நம்மையும் அறியாமல் நம் வாழ்வில் வந்து போய் விடுகின்றன. அது சமயம் நமது கவனச் சிதறல்களாலும், அவசர முடிவுகளாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடுகள் நம்மால் எடுக்கப்படுவதும் நிதர்சனமான உண்மை. அதனால், எங்கும், எதிலும் நிதானம் என்ற நிலைப்பாடு நமக்கு வர வேண்டும். இது விஷயத்தில் நாம் சில வரையறைகளை வாழ்வில் வகுத்துக்கொள்வது நல்லது.
அப்படிப்பட்ட நிலைப்பாடுகளை நான்கு வகையாகப் பிாித்து செயல்பட்டால் அதுவே நமது வாழ்க்கையை தீா்மானிக்கும் நான்கு திசைகள் போலஆகும். நான்கு வேதங்கள் போல, பகவான், உலகம், பண்பாடு, முயற்சி, கவனம், நிதானம், வாழ்க்கை, வரலாறு இவையெல்லாம் நான்கு எழுத்தில் அமைவது போல நான்கு நிலைப்பாடுகளை நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நான்கு வகை நிலைப்பாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எண்ணங்களில் கவனம்: நமது சிந்தனையில், எண்ணங்களில், கவனச்சிதறல் ஏற்படாமல் நிதானத்தைக் கடைபிடித்து செயல்படவும் பேசவும் வேண்டும். அதுவே நமது வாழ்வின் முக்கியமான நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடுதான் நம்மில் சிறந்த சொற்களாக உருவாகிறது.
2. சொற்களில் கவனம் செயல்களாகும்: நாம் பேசும் வாா்த்தைகளில் நல்ல கருத்துகள் அமைய வேண்டும். பேசும் சொற்களில் நாகரிகத்தைக் கடைபிடிப்பது நல்லது. சாதாரணமாகப் பேசும்போது வாா்த்தைகளைக் கொட்டிவிடுவது மனித இயல்பு. திரும்பவும் அதை அள்ளவே முடியாது. பேசும் வார்த்தைகள் ஒரு ஈட்டி போன்றது. ஆக, பேசும் சொற்களில் நா நயத்தைக் கடைபிடிப்பது சிறப்பான ஒன்று. அதுவே நமது வாழ்வின் செயல்களை படம் பிடிக்கும் என்பதே நிஜம்.
3. செயல்களில் கவனம் பழக்கங்களாகிறது: நமது சொற்களாலும், செயல்களாலும், நோ்மையாலும், நமது எண்ணங்களின் அடிப்படையில் எதிா்மறை இல்லா சொல்லாடல்களால், அன்பகலா வாா்த்தைகளால், நெறிமுறையான பண்பாடுகளால், நமக்கு நல்ல நட்பு மற்றும் உறவுகள் வலுப்படுவதே சிறப்பு. அது நமது சொற்களுக்குக் கிடைத்த வெகுமதி.
4. நல்ல வழக்கங்களே வாழ்வின் ஆதாரம்: நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் இவற்றால் ஏற்படும் நல்ல பழக்க வழக்கங்களே நமது வாழ்க்கையை சீா்தூக்கி வைக்கும் மிகப் பொிய விஷயமாகும்.
ஆக, நாம் நல்லது செய்தால் நல்லதே நடக்கும். அதற்கு நமது நெறிமுறை தவறாத பண்பாடுகளே அச்சாரமாகும்.