
மிருகங்கள், பறவைகள் பற்றிய கதைகளை குழந்தைகளுக்குக் கூறுவதன் காரணம் அவர்களின் ரசனையைத் தூண்டி விடுவதற்காகத்தான். மிருகங்கள், பறவைகள் பேசுமா? என்பவற்றையெல்லாம் அது கதைதான். கதை என்றால் அப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் புரிந்து கொண்டு அதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சில குழந்தைகள் அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருப்பதுண்டு. அக்கா தவறு செய்யும் இடத்தில் அதை கவனித்துக் கொண்டிருந்த குழந்தை கடகடவென்று கூறி விடுவதைப் பார்க்கலாம். அதேபோல், வரைவது, கூறும் கதைகளைக் கேட்பது, படம் பார்ப்பது, படத்தைப் பார்த்து கதை சொல்வது போன்றவற்றையும் குழந்தைகள் விரும்பி செய்வார்கள். அப்படிச் செய்யும்பொழுது நாம் அருகில் இருந்து அவற்றை அவதானிக்க வேண்டும்.
நாம் சிறுவர்களாக இருக்கும்பொழுது நம் அக்கா, அண்ணா போன்றோரிடம், ‘உங்கள் புத்தகத்தைக் கொடுங்கள். நான் படம் பார்த்து விட்டுத் தருகிறேன்’ என்று கூறுவோம். அவர்களும் கொடுப்பார்கள். அதில் வரைந்திருக்கும் படங்களைப் பார்த்து கதை சொல்லுவோம். நாமாகக் கற்பனை கதை சொல்லும்பொழுது அதை வீட்டில் உள்ளவர்கள் கேட்டு ரசிப்பது உண்டு. அது போல்தான், நம் வீட்டு குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நம் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகத்தை விரித்து அவர்களின் முன்னிலையில் சரியான நேரத்தில் வாசிக்கலாம். குழந்தைகள் கண்ணால் பார்க்கிறது. காதால் கேட்கிறது. வாய் அசைத்து சொற்களை உச்சரித்தலை கவனிக்கிறது.
பிள்ளைகளின் புத்தகங்கள் மூலம் அவர்களைத் தொடர வேண்டும். நூல் நிலையம் சென்று சிறுவர் பிரிவில் பிள்ளையுடன் நேரத்தைக் கழிக்கலாம். அது அந்தப் பிள்ளைக்கு பாடசாலையில் படித்தலுக்கு, வாசித்தலுக்கு, கற்றலுக்கு சுலபமாக அமையும். படங்கள் உள்ள புத்தகங்கள் பிள்ளைகளைக் கவருகின்றன, படிக்கத் தூண்டுகின்றன. பக்கங்களைத் திறந்து பார்த்து படிக்க முயற்சி ஆரம்பம் ஆகும். அதற்கு உடன் இருப்பவர்களும் சேர்ந்து படிக்கலாம். பிள்ளைகளுக்கு ஏற்ற புத்தகங்களை அவர்களுடன் சென்று அவர்களையே தெரிவு செய்து வாங்க பழக்கலாம். குழந்தை புத்தகத்தை என்ன செய்கிறது என்பதை அவதானிக்கலாம்.
ஒரே பக்கத்தை நீண்ட நேரம் பார்த்தால், ஏன் அந்தப் பக்கம் அந்தக் குழந்தையை கவர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். பிள்ளைக்குத் தெரிந்த கதை சித்திரம் மூலம் விளக்கி இருந்தால், அக்கதையைக் கூறும்படி கேட்டு கதை சொல்லப் பழக்கலாம். சித்திரங்களைப் பார்த்ததும் அந்தச் சித்திரங்கள் சித்தரிப்பதையும், அவை கூறும் கதைகள், சம்பவங்கள் பற்றியும் கூறும்படி குழந்தையைக் கேட்கலாம். பின்பு கதையை வாசித்துக் காட்டி விளக்கம் இல்லாத இடத்தில் காத்திருந்து விளக்கப்படுத்தி குழந்தையை அந்தச் சம்பவத்தை திரும்பக் கூறத் தூண்டலாம். அதனால் அத்துடன் தொடர்பான சம்பவங்களை நினைவு கூறச் சொல்லி, குழந்தையை சிந்திக்கப் பழக்கலாம்.
குழந்தையுடன் சேர்ந்து பாயில் படுத்திருந்தாலும், மடியில் உட்கார வைத்திருந்தாலும் அதற்கு அருகில் இருந்து கதை கூறலாம். இவ்வாறு கதை கூறும்போது குழந்தையின் சௌகரியமும், முகத்தை முகம் பார்த்தலும், கண்ணும் கண்ணும் பார்த்தலும் (Eye contact) மிகவும் முக்கியம்.
குழந்தைகளை மையப்படுத்தி குதூகலமான கற்பனைக் கதைகள் கூறலாம். குழந்தைகளின் ரசனையைத் தூண்டி விடலாம். அக்கதைகளில் வன்முறை, ஏமாற்று, வஞ்சனை, அத்துமீறல்கள் எதுவும் இடம் தராது கவனமாக விழுமியங்கள் கலந்து (Ethical values) கூற வேண்டியது அவசியம்.
பாட்டி வடை சுட்ட கதையைக் கூறினால், பாட்டிக்கு காகம் விறகுகளை எடுத்துக் கொடுத்து உதவியது. இதனைப் பார்த்த பாட்டி சந்தோஷப்பட்டு இரண்டு வடைகளை உதவி செய்த காக்கைக்கு கொடுத்தார் என்று கூறி முடிக்கலாம். அதுபோல், நாமும் உதவி செய்ய வேண்டும் என்ற நீதியை குழந்தை கற்றுக் கொள்ளும். குந்தி தனது பிள்ளை கர்ணனை பெட்டியில் வைத்து ஓடையில் விட்டது சிசு வதை கதை. ஆதலால் இதுபோன்ற கதைகளை குழந்தைகளுக்குக் கூறாமல் இருப்பது நல்லது. கதைகள் மூலமாக விழுமியங்கள் பிள்ளைகளின் மனதுக்குள் பயணித்தால் வாழ்வு வளம் பெற அவை உதவும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே!