
வீட்டின் அத்தியாவசியத் தேவைக்கு ஒரு பைக் என்பது இன்றைய காலத்தில் மிகவும் அவசியம்தான். அப்படி ஒரு புதிய பைக்கை வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ளவேண்டிய அல்லது சரிபார்க்க வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நோக்கத்தை தீர்மானிக்கவும்: முதலில் நாம் ஏன் பைக் வாங்க வேண்டும்? தினசரி பயணத்திற்கா? நீண்ட தூர பயணத்திற்காக? சாகசங்களுக்கா அல்லது விரைவான வேலைகளுக்காக வாங்குகிறோமா என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். 'ஸ்போர்ட்ஸ் பைக்குகள்' வேகம் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்துகின்றன. தினசரி பயன்பாட்டிற்கு 'பயணிகள் பைக்குகள்' ஏற்றவை மற்றும் எரிபொருள் திறன் கொண்டவை. 'குரூஸர் பைக்குகள்' நீண்ட தூர வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 'சாகச பைக்குகள்' ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை. எனவே, முதலில் நம் நோக்கத்தை தீர்மானித்துக் கொண்டு பைக்கை வாங்க வேண்டும்.
2. பட்ஜெட்டை தீர்மானிக்கவும்: விருப்பங்களை ஆராய்வதற்கு முன்பு, தெளிவான பட்ஜெட்டை அமைக்கவும். இது நம் தேர்வுகளை குறைக்கவும், அதிக செலவுகளை தடுக்கவும் உதவும். காப்பீடு, பதிவு கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற கூடுதல் செலவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. சோதனை ஓட்டம் அவசியம்: ஆக்சிலரேட்டர், என்ஜின், கிளட்ச் மற்றும் பிரேக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சரி பார்க்கவும், சஸ்பென்ஷன் மிகவும் மென்மையாகவோ அல்லது கடினமாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் பைக்கை ஒரு சோதனை சவாரிக்கு எடுத்துச் செல்வது அவசியம்.
4. மின் கூறுகள்: ஹெட்லைட், டெயில் லைட், இன்டிகேட்டர்கள் போன்ற அனைத்து விளக்குகளும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதுடன் ஹாரன் மற்றும் பேட்டரி சரியாக செயல்படுகிறதா என்பதையும் சரி பார்க்கவும்.
5. எரிபொருள் செயல்திறனை மதிப்பிடுவது: எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் பெரும்பாலானவர்களுக்கு எரிபொருள் திறன் ஒரு முக்கிய காரணியாகும். இயக்க செலவுகளை குறைப்பதற்கு அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகளை தேர்ந்தெடுக்கவும். பிராண்டுகள் பெரும்பாலும் எரிபொருள் திறன் மதிப்பீடுகளை வழங்குகின்றன. ஆனால், உண்மையான மைலேஜ் சவாரி பழக்கம் மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடலாம்.
6. பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும் வசதி: மலிவு பராமரிப்பு மற்றும் பரவலாகக் கிடைக்கும் உதிரி பாகங்கள் கொண்ட பைக்குகளை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், பராமரிப்பு என்பது தொடர்ச்சியான செலவாகும். இதைப் பலர் வாங்கும்பொழுது கவனிக்கத் தவறி விடுகிறார்கள். பிரபலமான பிராண்டைத் தேர்ந்தெடுப்பது, சர்வீசிங் மையங்கள் மற்றும் உதிரிபாகங்களை எளிதில் அணுகக் கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது.
7. என்ஜின் திறனை தீர்மானிப்பது: எஞ்சின் திறன் பைக்கின் செயல்திறனை தீர்மானிக்கிறது. அதிக சிசி என்பது பொதுவாக அதிக சக்தியைக் குறிக்கும். ஆனால், குறைந்த எரிபொருள் செயல்திறனை ஏற்படுத்தக் கூடும். நகரப் பயணத்திற்கு 100 சிசி முதல் 150 சிசி வரையிலான பைக்குகளே போதுமானது. அதுவே சாகசம் அல்லது வேகத்தை தேடுபவர்களுக்கு 200 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட பைக்குகள் அவசியமாகிறது.
8. பாதுகாப்பு முன்னுரிமை: புதிய பைக்கை வாங்கும்போது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். வாங்கும் பைக்கில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் திடீர் பிரேக்கிங்கின்போது சக்கரம் பூட்டப்படுவதைத் தடுக்கும் அம்சம் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். டிரம் பிரேக்குகளுடன் ஒப்பிடும்போது சிறந்த நிறுத்த சக்தியை வழங்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிறந்த டயர்களைத் தேடுவது அவசியம்.
9. தேர்வு செய்வது: மின்சார வாகனங்கள் தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீண்ட காலத்திற்கு செலவு குறைந்த 'மின்சார பைக்' வாங்குவதா அல்லது பரவலாகக் கிடைக்கும், அதேசமயம் எரிபொருள் நிரப்ப எளிதான 'பெட்ரோல் பைக்குகள்' வாங்குவது சிறந்ததா? 'ஹைபிரிட் பைக்குகள்' எனப்படும் பெட்ரோல் மற்றும் மின்சார சக்தியை இணைத்து வழங்கும் பைக்குகளை தேர்ந்தெடுப்பதா என்பதை நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாங்குவது நல்லது.
10. உத்திரவாதம் மற்றும் காப்பீடு சரி பார்ப்பது: இந்தியாவில் பைக் காப்பீடு கட்டாயமானது. ஆனால், எல்லா பாலிசிகளும் ஒரே மாதிரியான காப்பீட்டை வழங்குவதில்லை. எனவே, காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்வதும், உத்தரவாத காலம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை கருத்தில் கொண்டும் பைக்குகளை வாங்குவது அவசியம்.