

நம்முடன் பழகும் நபர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வது அவசியம். நட்புடன் பழகிக் கொண்டே நமது ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்கிறார்களா என்பதை கவனிப்பதும் அவசியம். வாழ்க்கையில் சற்றே விலக்கி வைக்க வேண்டிய 9 நபர்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1.தேவைப்படும்போது மட்டும் அழைப்பவர்கள்: சில நபர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும்போது மட்டும் உங்களை அழைப்பார்கள். மற்ற நேரங்களில் உங்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இவர்கள் உங்களை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு இவர்களை சற்று தள்ளியே வைக்க வேண்டும்.
2. ஒரு பக்க நட்பு உறவு: உறவோ நட்போ இரு தரப்பிலிருந்தும் கட்டப்பட வேண்டிய ஒரு பாலமாகும். ஆனால், குறுஞ்செய்தி அனுப்புவதில் இருந்து சந்திப்புகளை திட்டமிடுவது போன்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் செயல்படாமல் நீங்கள் மட்டுமே ஒரு பக்கமாக நின்று செயல்படுகிறீர்கள் என்றால் அவர்களது நட்பை, உறவை குறைத்துக் கொள்ளலாம். நீங்கள் தொடர்பு கொள்ளாதபோது அவர்கள் உங்களைத் தேடவும் மாட்டார்கள், அழைக்கவும் மாட்டார்கள்.
3. கனவுகளை சிறுமைப்படுத்துபவர்கள்: வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டிய லட்சியங்கள் அல்லது இலக்குகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது ‘அது நடக்காது, உன்னால் அதை செய்ய முடியாது, உனக்கெல்லாம் இதுபோன்ற வீண் ஆசை ஏன்?’ என்று கனவுகளை சிதைத்து சிறுமைப்படுத்துவார்கள். நீங்கள் முன்னேறுவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படிப்பட்ட நபர்களை தள்ளியே வைக்க வேண்டும்.
4. உங்கள் வெற்றியைக் கொண்டாடுவதில்லை: நீங்கள் வெற்றி பெறும்போது அதை உங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவரே உண்மையான நண்பர். நல்ல செய்தியை நீங்கள் பகிர்ந்து கொண்டால் அவர்கள் மனதார வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். மறைமுகமாக தங்கள் பொறாமையைக் காட்டுவார்கள் உங்கள் வெற்றியை அவர்கள் தங்கள் தோல்வியாகக் கருதுவார்கள்.
5. தேவையற்ற பேச்சுகள்: ஆழமான, அர்த்தமுள்ள, வளர்ச்சி சார்ந்த உரையாடல்களுக்கு பதிலாக தேவையில்லாத கிசுகிசுக்கள், பிறர் பற்றிய புகார்கள், அர்த்தமற்ற பேச்சுகளால் நேரத்தை வீணடிப்பார்கள். இது மன அமைதியை வீணடித்து முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தடுக்கிறது.
6. பழி போடுதல்: அவர்கள் தவறு செய்திருந்தால் கூட அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று தவறை உங்கள் மேல் சுமத்தி பழி போடுவார்கள். மனமுதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
7. ஆதரவில்லை, போட்டி மட்டுமே: நீங்கள் வெற்றி பெறும்போது உங்களை அவர்கள் போட்டியாளர்களைப் போல நடத்துகிறார்கள். நீங்கள் ஏதாவது புதிதாக பொருள் வாங்கினால் கூட உடனே போட்டி போட்டுக் கொண்டு தானும் அதுபோல வாங்குவார்கள். உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் மனதிற்குள் மகிழ்வார்கள். தங்கள் வாழ்க்கையை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார்கள். ஒரு விரோதமான சூழலை உருவாக்குகிறார்கள்.
8. புறம் பேசுதல்: உண்மையான நண்பர்கள் உங்களைப் பற்றி புறம் பேச மாட்டார்கள். ஆனால், பொய்யாக நடிக்கும் மனிதர்கள் உங்களைப் பற்றி பிறரிடம் எதிர்மறையாக பேசி, உங்கள் தனிப்பட்ட ரகசியங்களைக் கூட பிறரிடம் பகிர்ந்து மகிழ்வார்கள்.
9. நெருக்கடிகளில் மறைந்து விடுவார்கள்: நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது கூட சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்வார்கள். ஆனால், உங்களுக்கு முக்கியமான நெருக்கடியான நேரங்களில் திடீரென மறைந்து போவார்கள். உங்களுக்கு நோய், இழப்பு, நிதிப்போராட்டம் போன்றவற்றின்போது திடீரென்று தொலைபேசியில் கூட பதில் அளிக்காமல் பிஸியாகி விடுவார்கள். இது போன்ற நபர்களை வாழ்க்கையில் இருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியமாகும்.