

எந்த நாட்டிற்குச் சென்றாலும் பெரும்பாலான சாலைகள் கருப்பு நிறத்தில் இருப்பதைக் காணலாம். இந்த கருப்பு நிற சாலைகளுக்குப் பின்னால் சில அறிவியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த காரணங்கள் ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சாலைகள் கருப்பு அல்லது அடர் நிறத்தில் இருப்பதற்கான முக்கிய காரணம் சாலைகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருள்தான்.
பெரும்பாலான சாலைகள் நிலக்கீல் (Bitumen) மூலம் தயாரிக்கப்படுகின்றன. நிலக்கீல் இயற்கையாகவே கருப்பு நிறத்தில் இருக்கும் பொருளாகும். இது எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையின் துணை விளைப் பொருளாகும். குறைந்த விலை, ஆனால், வலிமை மிக்கது. எளிதில் கிடைக்கும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை காரணமாக இது சாலை கட்டுமானத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிலக்கீல் மூலம் அமைக்கப்படும் சாலைகள் நீண்ட காலம் உழைப்பதுடன், வாகனங்களின் எடையைத் தாங்கும் திறனையும் கொண்டது. அத்துடன் இதை பழுது பார்ப்பதும் எளிது. பொதுவாக கருப்பு நிறம் அதிக சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் மழைக்குப் பிறகு சாலையில் தண்ணீர் தேங்காமல் விரைவாக ஆவியாகிவிடும். இப்படி நீண்ட நேரம் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உடனே ஆவியாகி விடுவதால் சாலைகளின் வழுக்கும் தன்மை குறைவதுடன், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் வெகுவாக குறைகிறது.
இரவில் வாகன ஹெட்லைட்களின் ஒளி கருப்பு நிற சாலையில் தெளிவாக பிரதிபலிக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்டதால்தான் சாலைகள் கருப்பு நிறத்தில் சாலைகள் போடப்படுகின்றன. சாலை அடையாளங்கள், அடையாளப் பலகைகள் மற்றும் மற்ற வாகனங்கள் ஓட்டுநர்களுக்கு எளிதாகத் தெரியும். அதிக போக்குவரத்து மிக்க பகுதிகளில் கூட இந்த சாலைகள் எளிதில் சேதம் அடைவதில்லை.
பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் சாலைகளில் கூட இந்த கருப்பு நிற சாலைகள் எளிதில் சேதம் அடையாமல் நீடித்து நிற்கின்றன. அத்துடன் சாலையில் சேதம் ஏற்பட்டாலும் அதை எளிதாகவும், குறைந்த செலவிலும் பழுது பார்க்க முடியும். பராமரிப்பு செலவும் குறைவாக இருப்பதால் பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக உள்ளது.
பாதுகாப்பு ரீதியாகவும் கருப்பு நிற சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரவு நேரங்களில் வாகனங்களின் ஹெட் லைட்களில் இருந்து வரும் ஒளி, கருப்பு நிற சாலையின் மேற்பரப்பில் தெளிவாக பிரதிபலிக்கும். இதனால் சாலை அடையாளக் கோடுகள், வழிகாட்டி குறியீடுகள், வேகத்தடைகள் மற்றும் முன் செல்லும் வாகனங்கள் ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும். இதனால் இது இரவுப் பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்குகிறது. அத்துடன் குளிரான பகுதிகளில் கருப்பு நிற சாலைகள் சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, பனியை விரைவாக உருகச் செய்ய உதவும். இதனால் போக்குவரத்துத் தடை குறைக்கப்படுகிறது.