

கணவன், மனைவி உறவை பலப்படுத்துவது எது என எவரைக் கேட்டாலும் 'லவ்' ((love) என்று உடனடியாக பதில் வந்துவிடும். ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் 'லவ்' ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு உண்டாக உதவி இருக்கலாம். வருடங்கள் செல்லச் செல்ல, அன்பும் அக்கறையும் குறைந்துவிட்ட போதும் இருவருக்கும் இடையேயான பிணைப்பு இறுகுகிறதென்றல் அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் ஒன்றே என்கின்றன ஆராய்ச்சிகள்.
‘லவ்’ என்பது ஓர் உணர்ச்சி. நம் தினசரி வாழ்க்கையை சிறப்பானதாக அல்லது சீரற்ற ஒன்றாக உருவாக்குவதில், நம் உடல் நலம், உறக்கம், மன அழுத்தம் போன்ற நூற்றுக்கணக்கான உணர்வுபூர்வமான விஷயங்களின் தாக்கம் கண்டிப்பாக உண்டு. மற்ற உணர்ச்சிகள் போல், அன்பின் வெளிப்பாடும் தினமும் கூடவோ குறையவோ செய்யும். ஒருவர் தனது துணையை ஆழமாக நேசித்தபோதும், சில நேரங்களில் துணையிடம் வெறுப்பு, எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிகளைக் காட்டி காயப்படுத்தச் செய்யும் சந்தர்ப்பங்கள் உருவாகவே செய்யும்.
அந்த நேரங்களில், உங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு கூற ‘லவ்’ உதவாது. ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோடிகள் கூட, சில நேரம் பிரச்னை என்று வரும்போது கடுமையான வார்த்தைகளை உபயோகித்து வாக்குவாதம் செய்வதுண்டு. 'லவ்' செய்யத் தவறுவதை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக சிறந்த முறையில் செய்து முடிக்கும். இறுக்கமான பிணைப்பு கொண்ட இருவருக்கும் இந்த சூட்சுமம் நன்றாகவே தெரியும்.
'விட்டுக்கொடுத்தல்' (Compromise) என்பதின் அர்த்தம்: ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் விருப்பம் ஒன்றாகவும் உங்கள் துணையின் விருப்பம் வேறொன்றாகவும் இருக்கும்போது, நீங்கள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, உங்கள் இருவரின் உறவு நீடிக்க எது சிறந்தது என்பதை முடிவு செய்வதே விட்டுக்கொடுத்தல். கணவன், மனைவி இருவரின் பழக்க வழக்கங்கள், அனுபவங்கள், மதிப்பு மரியாதை என அனைத்துமே வெவ்வேறானவை. அவை எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது செயற்கைத்தனம். ஆரோக்கியமான உறவை விரும்பும் ஜோடி எப்பொழுதும், ‘என் வழி’ + ‘உன் வழி’ = ‘நம் வழி’ என்ற விதிமுறையைப் பின்பற்றுபவர்களாகவே இருப்பர்.
அடிப்படையில் இதற்குத் தேவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. நான், நீ என்று பிரித்துப் பார்க்கும் மனோபாவம் இல்லாமல் 'நாம்' என்ற நினைப்பு இருவர் மனதிலும் ஆழமாக வேரூன்றி இருந்தாலொழிய விட்டுக்கொடுத்தல் என்பது சாத்தியப்படாது. கருத்துக்களை காது கொடுத்துக் கேட்பது, உரிய மரியாதை அளிப்பது, தான் சொல்வதுதான் சரி, தான்தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமலிருப்பது ஆகிய குணங்கள் பரஸ்பரம் தம்பதியர் இருவரிடமும் இருக்க வேண்டியது அவசியம்.
விட்டுக்கொடுப்பதில் நிறைய தியாகம் பண்ண வேண்டிய அவசியமெல்லாம் இருக்காது. வார இறுதி நாள் ஒன்றில் ஒருவருக்குப் பிடித்த மாதிரி சினிமாவுக்கு செல்வது, அடுத்த வாரம் மற்றவருக்குப் பிடித்தமான பீச்சுக்கு செல்வது, மாதம் ஒரு முறை அம்மா வீட்டுக்கும், மாமியார் வீட்டுக்கும் மாறி மாறி செல்வது என இருவரும் பேசி முடிவெடுத்து செயல்பட்டால் இல்லறம் என்றும் இனிக்கும்.