
நாம் சிறுவர்களாக பள்ளிப் பருவத்தில் படிக்கும்பொழுது மயிலிறகுகளை புத்தகத்தின் நடுவில் வைத்து தினமும் அது குட்டி போடுகிறதா என்று திறந்து திறந்து பார்ப்போம் அல்லவா! சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மயிலிறகின் வசீகரிக்கும் அதன் அழகில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட மயிலிறகுகளை வீட்டில் வைத்திருப்பது பல நன்மைகளைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
பல கலாசாரங்களில் மயில்கள் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மயிலின் இறகுகள் அழகு, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஞானம் ஆகியவற்றை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்து மதத்தில் மயில்கள் தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கிருஷ்ணரின் அருள் நிரம்பியதாகவும் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படியும், மயிலிறகுகள் எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் தடுத்து வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதாகவும், அதிர்ஷ்டத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஜோதிடத்தில் மயில் இறகுகளின் துடிப்பான வண்ணங்கள் எதிர்மறை சக்திகளை விரட்டி, வீட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் சக்தியை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
வீட்டில் மயிலிறகுகள் வைப்பதால் அதிர்ஷ்டம், பணம், நேர்மறை ஆற்றல் மற்றும் அழகு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அலுவலகத்தில் அமரும் இடத்தில் மயிலிறகுகளை வைத்தால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும், வீட்டில் மயிலிறகுகளை வைப்பது பொருளாதார நிலையை மேம்படுத்தும் என்றும், எதிர்மறை சக்திகளை விரட்டும் என்றும் நம்பப்படுகிறது. மயிலிறகுகள் அலங்காரப் பொருளாக பல வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மயிலிறகுகள் படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்துடன் தொடர்புடையவை. சிக்கலான வடிவங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்கள் கற்பனையைத் தூண்டும் மற்றும் கலை வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெரிய மற்றும் வண்ணமயமான மயில்கள் ஃபெசண்ட் குடும்பத்தை சேர்ந்தவை. மயில்களில் மூன்று இனங்கள் உள்ளன. பொதுவாக மற்றும் பரவலாகக் காணப்படும் இந்திய மயில்கள் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது. தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பச்சை மயில் மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் காங்கோ மயில். இவை பூச்சிகள், சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் தாவரப் பொருட்கள் போன்றவற்றை உணவுகளாக உட்கொள்கின்றன. இவை பெரும்பாலும் அவற்றின் அழகுக்காக சிறைபிடிக்கப்படுகின்றன. சில சமயங்களில் அவற்றின் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
புத்த பாரம்பரியத்தில் மயில் தூய்மையை குறிக்கிறது மற்றும் அதன் நூறு கண்கள் கொண்ட வால் எல்லையற்ற விழிப்புணர்வைக் குறிக்கிறது. புத்த மதத்தில் வெள்ளை மயில்கள் நிர்வாணத்தை குறிப்பதாகவும், அவற்றை பார்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்றும் நம்புகின்றனர். மயிலிறகுகள் ஆன்மிக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வுடன் தொடர்புடையவை. இவை உள்ளுணர்வு, நுண்ணறிவு மற்றும் ஞானத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இறகுகளின் அமைதியான ஆற்றல் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைப் போக்கி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியும் மேம்படுத்தும். வாஸ்து தோஷம் நீங்க வீட்டின் பிரதான வாசலில் மயில் தோகைகளை வைக்கலாம். அதிர்ஷ்டத்தின் அடையாளமாக நம்பப்படும் மயிலிறகை படுக்கையறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்க நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் விரைவில் முடிந்து விடும். அலுவலகத்தில் தென்கிழக்கு திசையில் மயிலிறகுகளை வைக்க பணத்தட்டுப்பாடு இல்லாமலும், நிலுவையில் உள்ள பணமும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.