சிலர் தூங்கும்பொழுது செல்போனை விமான பயன்முறைக்கு மாற்றிய பின்னர் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இது உண்மையில் ஆபத்தானதா என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இரவில் படுத்துக்கொண்டே செல்போனை பார்த்து விட்டு தூக்கம் வந்ததும் அப்படியே ஏரோபிளேன் மோடிற்கு மாற்றி விட்டு தலைமாட்டிற்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. இப்படித் தூங்குவது பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காரணம், விமான பயன்முறை செல்லுலார், வைஃபை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் முடக்குவதால் இது எந்த ஒரு சாத்தியமான கதிர்வீச்சு வெளிப்பாட்டின் அபாயத்தையும் குறைக்கும் என்பதால் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள். இது முற்றிலும் தவறு. பாதுகாப்பானதும் அல்ல.
பொதுவாக, அலைபேசிகள் வெப்பத்தை உருவாக்கும். சார்ஜ் செய்யும் பொழுதும், அதிக நேரம் பயன்படுத்தும்போதும் அது சூடாவதை கவனிக்கலாம். அதேபோல், தலையணையின் கீழே வைப்பது வெப்பத்தை உண்டாக்கி தூக்கத்தைக் கெடுப்பதுடன் சில சமயம் சேதத்தையும் ஏற்படுத்தும். போன் அதிகம் சூடாகி தலையணையில் உள்ளவற்றைப் பொறுத்து தீப்பிடிக்கும் அபாயம் உண்டு. இது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
வெப்பத்தை உருவாக்கக்கூடிய பின்னணி செயல்முறைகளை குறைக்க சார்ஜ் செய்வதற்கு முன்பு தேவையற்ற பயன்பாடுகளை மூடிவிடவும். பழைய அல்லது பழுதடைந்த பேட்டரி சார்ஜ் செய்யும்பொழுது அதிக வெப்பமடையக் கூடும். எனவே, பேட்டரி நிலையை அடிக்கடி கண்காணிக்கவும்.
முக்கியமாக, செல்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை அல்லது அதற்கு சமமான சான்றளிக்கப்பட்ட சார்ஜரையே எப்பொழுதும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். சிறந்த காற்றோட்டம் மற்றும் வெப்பச் சிதறலை அனுமதிக்க சார்ஜ் செய்யும்பொழுது தொலைபேசியின் பாதுகாப்பு உறையை அகற்றுவது நல்லது. அத்துடன் அலைபேசியை பயன்படுத்தும்போது சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். செல்போனின் ஆயுளை நீடிக்க முழுவதும் சார்ஜ் செய்யாமல் (100%) 80 முதல் 90% சார்ஜ் செய்வது நல்லது.
செல்போனை தலையணைக்கு அருகிலோ, படுக்கையில் வைத்தோ சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது அதிக வெப்பத்தால் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க உதவும். போன் சார்ஜ் செய்யும்பொழுது காற்றோட்டத்தை அதிகரிக்க செல்போனை படுக்கை அல்லது சோபா போன்ற மென்மையான மேற்பரப்பில் வைக்காமல் மேஜை, நாற்காலி போன்ற தட்டையான மேற்பரப்பில் வைத்து சார்ஜ் செய்வது நல்லது.
கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைக்கவும், அசௌகரியத்தை தவிர்க்கவும் தலையணைக்கு அடியில் வைக்காமல் படுக்கை மேஜையில் வைக்கலாம். மெசேஜ்கள், நோட்டிபிகேஷன்கள் இரவில் நம் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் இருக்க விமான பயன்முறைக்கு மாற்றுவதுதான் சிறந்தது. குறைந்தது மூன்று அடி தொலைவில் செல்போனை வைத்திருப்பது எந்தவொரு மின்காந்த கதிர்வீச்சின் வெளிப்பாட்டை குறைக்க உதவும்.
தூங்குவதற்கு முன்பு தொலைபேசியை பயன்படுத்தினால் கண் அழுத்தத்தைக் குறைக்க நீல ஒளி வடிகட்டிகளை இயக்குவது சிறந்தது. அழைப்புகள் அல்லது செய்திகளிலிருந்து வரும் குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்கு சைலன்ட் மோடில் போடுவதும் சிறந்ததுதான்.
நல்ல தூக்கத்தைப் பெற படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாவது செல்போனை பயன்படுத்துவதை நிறுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.