
வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் இருப்பது மிகவும் அவசியம். சிலருக்கு பல உண்மையான நண்பர்கள் இருப்பார்கள். ஒரு சிலருக்கோ நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் தேவைப்படும் சமயத்தில் உதவாமல் ஒதுங்கி விடுவார்கள். சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே உண்மையான நண்பர்கள் கிடைப்பது இல்லை.
உண்மையான நண்பனின் அடையாளங்கள்:
கஷ்டத்தில் கை கொடுப்பது:
நம்முடைய நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் கூட நமக்கு ஆதரவாக இருப்பார்கள். துன்பம் வரும்பொழுது துணையாக இருப்பார்கள். ஆறுதல் தருவார்கள். எந்த சூழ்நிலையிலும் நம்முடன் இருந்து நமக்காக தன்னால் முடிந்ததை செய்வார்கள். மாறிவரும் காலத்திலும் உண்மையான நண்பர்கள் நம்மோடு இருப்பார்கள். எனவே உண்மையான நண்பரை அடையாளம் கண்டு கொண்டு அவருடன் நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்தவேண்டும்.
நட்பின் ஆழம்:
அன்பு, நம்பிக்கை, பாசம், ஆதரவு ஆகியவை நட்பின் ஆழத்தை உணர்த்தும். உண்மையான நண்பர்களை எவ்வளவு அதிகமாக மதிக்கின்றோமோ அவ்வளவுக்கு நம் நட்பு ஆழமாகும். கஷ்டம் வரும்போது ஓடிவந்து உதவ முன் வருபவர் உண்மையிலேயே நல்ல நண்பர்களாகத்தான் இருப்பார்கள். சவாலான நேரங்களில் ஆதரவாக இருப்பது நட்பின் அடையாளம்.
உண்மையான அக்கறை:
நம்முடைய வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளில் கூட இருப்பதுடன், நம் உயர்வில் உண்மையான ஆர்வத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள். நம் மீது அதிக அன்பும், உண்மையான அக்கறையும் கொண்டு உற்ற துணையாக இருப்பார்கள். நல்ல வார்த்தைகள் பேசி இதமாக இருப்பார்கள். நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி நல்லவிதமாக கூறுவதுடன், பிறர் தவறாக பேசினாலும் அதை மறுத்து பேசுவதும், நம்மை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காது உண்மையான அக்கறையுடன் இருப்பார்கள்.
தவறு செய்யும்போது தட்டி கேட்கும் துணிவு:
நமக்கு உற்ற தோழனாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்கும் நண்பர்கள் நாம் தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்க தயங்குவதில்லை. அந்த தட்டி கேட்கும் துணிவே அவர்கள் நம் உண்மையான நண்பர்கள் என்பதை பறைசாற்றும்.
நேர்மையாக இருப்பது:
ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதும், நேர்மையாக நடந்து கொள்வதும் உண்மையான நட்பின் இலக்கணமாகும். உண்மையான நண்பர்கள் எப்போதும் நம்முடன் நேர்மையாக இருப்பார்கள். நம் மீது நம்பிக்கை வைத்து நமக்கு நல்லதையே செய்வார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை காட்டிக் கொடுக்காமல், விட்டுக் கொடுக்காமல் நட்பு பாராட்டுவார்கள்.
விட்டுக்கொடுத்து செல்லுதல்:
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அமைதியுடன் பேசி தீர்ப்பதும், கோபத்திற்கு இடம் கொடுக்காமல் சமாதானமாக செல்வதும், நிறை குறைகளை பெரிதுபடுத்தாமல் விட்டுக் கொடுப்பதும் என இருப்பார்கள்.
உண்மையான நட்பு என்பது வாழ்வின் மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்றாகும். அது நம்மை மகிழ்வாகவும் நிறைவாகவும் உணர வைக்கும். நண்பர்களை அதிகம் பாராட்டி ஆதரிப்பதன் மூலம் உறவை பேணி வளர்க்க முடியும். நண்பர்களுடன் இணக்கமான உறவை பேணுவதற்கு அவர்களை மதிக்கவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.