
வெங்காயம் நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். ஆன்டி-பயாடிக், ஆன்டி-செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல் போன்ற பண்புகளைக் கொண்ட வெங்காயம், உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதுடன், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
இருப்பினும், வெங்காயத்தை நறுக்கி வைத்து மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பல வீடுகளில், தேவைக்கு அதிகமாக வெங்காயத்தை நறுக்கி, மீதத்தை குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது வெளியிலோ வைத்து மறுநாள் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
நறுக்கிய வெங்காயம் சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களை மிக வேகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. வெட்டப்பட்ட வெங்காயம் காற்றில் திறந்து வைக்கப்பட்டால், அதில் பாக்டீரியாக்கள் எளிதில் பெருகிவிடும். இப்படி பாக்டீரியாக்கள் நிறைந்த வெங்காயத்தை உட்கொள்வதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இது உணவு விஷமாகக்கூட மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால் தலைவலி போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
குளிர்சாதனப் பெட்டியில் நறுக்கிய வெங்காயத்தை வைப்பதும் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் பாக்டீரியா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, வெங்காயம் கெட்டுப் போவதோடு, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் துர்நாற்றம் மற்ற உணவுப் பொருட்களிலும் பரவி, அவற்றின் சுவையையும் மாற்றக்கூடும்.
எனவே, வெங்காயத்தை நறுக்கிய உடனேயே பயன்படுத்துவது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், நறுக்கிய வெங்காயத்தை சரியான முறையில் சேமித்து பயன்படுத்த வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம்.
காற்றுப் புகாத ஜிப் லாக் பைகளிலும் நறுக்கிய வெங்காயத்தை சேமிக்கலாம். வெங்காயம் காற்றுடன் தொடர்பில்லாமல் இருந்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
நறுக்கிய வெங்காயத்தை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, அவற்றை சரியான முறையில் சேமித்து அல்லது உடனடியாகப் பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாப்போம். ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றி நோயின்றி வாழ்வோம்.