
நவீன உலகில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் குறைந்த விலை மற்றும் நீண்ட உழைக்கும் தன்மை காரணமாக, உணவு சேமிப்பு முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. குறிப்பாக நம் அன்றாட சமையலறையில் பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில்கள் என அதன் பயன்பாடு மிக அதிகம். ஆனால், இந்த மலிவான பிளாஸ்டிக் நம் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதயத்திற்கு பெரும் ஆபத்தாக முடியலாம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பிளாஸ்டிக் பொருட்களை உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை செயற்கை இரசாயனங்கள் 'தாலேட்டுகள்' (phthalates) என அழைக்கப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் நம் உடலில் சேரும்போது, இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என ஓர் புதிய ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களான ஷாம்பூ, உணவு சேமிப்புப் பெட்டிகள் அல்லது ஒப்பனைப் பொருட்கள் எனப் பலவற்றில் இந்த தாலேட்டுகள் கலந்திருக்கலாம் என்ற தகவல் நம்மைச் சூழவுள்ள ஆபத்தை உணர்த்துகிறது.
2018 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, உலக அளவில் 55 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் இதய நோயால் நிகழ்ந்த இறப்புகளில் பத்து சதவிகிதத்திற்கும் மேல் இந்த பிளாஸ்டிக் இரசாயனங்களின் தாக்கம் இருந்திருக்கலாம் என்று அந்த ஆய்வு மதிப்பிடுகிறது. இந்த தாலேட்டுகள் இதய இரத்தக் குழாய்களில் வீக்கத்தைத் தூண்டி, அது உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நிலையை மேலும் மோசமாக்கி, துயரமான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.
இதய நோய்கள் மட்டுமின்றி, இந்த தாலேட்டுகள் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் சவாலாக அமைகின்றன. அவை டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, பிறப்புறுப்பு குறைபாடுகள் மற்றும் விந்தணு எண்ணிக்கைக் குறைவு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாகலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், ஆஸ்துமா, குழந்தைப் பருவ உடல் பருமன் மற்றும் புற்றுநோய் போன்ற பிற கடுமையான நோய்களுடனும் இந்த இரசாயனங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, நம் சமையலறையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது புத்திசாலித்தனம். கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறுவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். இந்த இரசாயன ஆபத்துகளைப் புரிந்துகொண்டு, நமது வாழ்விலிருந்து பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்போம்.