ஆடம்பர வாழ்க்கை ஆனந்தம் தருமா?

luxury life
luxury life
Published on

ஆடம்பரம் - இன்றைக்கு நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்கள்  விரும்பும் ஒரு வாழ்க்கை வழி. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் ஆடம்பரம் என்றால் அது பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமான ஒரு விஷயம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு அது நடுத்தரவர்க்கத்துக்கும் சொந்தமானது என்ற நிலை உருவாகிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையினால் நமக்கு ஏதேனும் நன்மை விளையுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

நமது அண்டை வீடுகளில் ஏதாவது ஒரு புதிய ஆடம்பரப் பொருளை வாங்கிவிட்டால் அவற்றை எப்பாடுபட்டாவது நாமும் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தற்போது பலரிடையே மிகுந்து காணப்படுகிறது. இல்லாவிட்டால் நம்மைச் சுற்றி உள்ளவர்கள்  நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற ஒரு தவறான  கருத்தும் நிலவி வருகிறது.   

அண்டைவீட்டு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கக்கூடும்.  நம்முடைய பொருளாதார நிலையினை கொஞ்சம்  யோசித்துப் பார்க்க வேண்டும்.   தற்பெருமையாலும் வறட்டு கௌவரத்தாலும் கடன் வாங்கி ஆடம்பரப் பொருட்களை வாங்கி நம்முடைய நிம்மதியை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது.  நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் நமக்குத் அவசியம் தேவைதானா என்று ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஆடம்பர பொருட்களுக்காக பெரும் தொகையை செலவு செய்வதைக் காட்டிலும் அந்த தொகையை நல்ல முறையில் சேமித்து வைத்தால் அது பிற்காலத்தில் பெண்ணின் திருமணத்திற்கோ பையனின் படிப்பிற்கோ நிச்சயம் உதவும். 

பணக்காரர்கள் அனைவரும் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்று நாம் தப்புக்கணக்கு போடுகிறோம். ஆனால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து பணக்காரராய் ஆனவர்கள் அனைவருமே பணத்தின் அருமையைத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.  இத்தகையவர்கள் ஆடம்பர வாழ்க்கையினை ஒருபோதும் விரும்புவதில்லை. இதனாலேயே அவர்களிடத்தில் மேலும் மேலும் பணம் சேர்ந்து அவர்களை கோட்டீஸ்வரர்களாய் ஆக்குகிறது.     

மிகப்பெரிய பணக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையினால் அனைத்தையும் தொலைத்து பரம ஏழைகளாய் ஆன கதையும் உண்டு. சாதாரண மனிதர்கள் பலர் கடினமாக உழைத்து சம்பாதித்து சிக்கனமாய் வாழ்ந்து பெரும் பணக்காரர்களான கதையும் உண்டு.  வரவிற்கு தகுந்த செலவு செய்ய நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.    மாதந்தோறும் வரும் வருமானத்தில் பத்து சதவிகித தொகையினை சேமிக்கும் பழக்கத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஆடம்பரமாக வாழ்ந்தால் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்ற எண்ணம் இன்று பலரிடையே மிகுந்து காணப்படுகிறது. நாம் செய்யும் நல்ல செயல்களும் எளிமையான அணுகுமுறையும் மட்டுமே நமக்கு சமுதாயத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும். ஆடம்பரமும் தற்பெருமையும் நீண்ட நாட்கள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. 

இதையும் படியுங்கள்:
‘Gaslighting’ நம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!
luxury life

நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் வாழ்வேன். என் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவு செய்ய வேண்டும்.

உலகம் நம்மைப் புகழவும் வேண்டாம். அது நம்மை இகழவும் வேண்டாம். எப்போதும் எளிமையாக வாழப் பழகிக் கொள்ளுவோம். நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் நமக்கு நிரந்தரப் புகழையும் பெருமையினையும் பெற்றுத்தருமே தவிர நாம் வாழும் ஆடம்பர வாழ்க்கை அல்ல என்பதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.  

இதையும் படியுங்கள்:
கை தட்டினால் பறந்துபோகும் நோய்கள்!
luxury life

ஆடம்பரம், தற்பெருமை, வறட்டு கௌரவம் இவை அனைத்தும் நமக்கு துன்பத்தையே பரிசாகத் தரும். உங்கள் வாழ்க்கையிலிருந்து ஆடம்பரத்தை அகற்றுங்கள். எளிமையுடன் கைகோர்த்துக் கொண்டு  தலை நிமிர்ந்து வாழப் பழகுங்கள். எளிமை நிச்சயமாக உங்களுக்கு நிம்மதியை பரிசாகத் தரும். எளிமையே வலிமை. எளிமையே நிம்மதி. எளிமையே சிறப்பு. எளிமையாக வாழ்ந்து பாருங்கள்.  அதன் மூலம் கிடைக்கும் சுகமே அலாதியானது. அதன் மூலம் கிடைக்கும் இன்பம் நிரந்தரமானது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com