பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்போதும் தங்களுடன் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். ஆனால், சில சமயம் பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
சூழ்நிலை காரணங்கள்: சில ஊர்களில் நல்ல பள்ளியோ, கல்லூரி வசதியோ இல்லாதபொழுது ஹாஸ்டலில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. சில வீடுகளில் பிள்ளைகள் வளர சரியான சூழல் இல்லாமல் போகலாம். தந்தை அதிகம் குடிப்பவராகவோ, பெற்றோரில் ஒருவர் இல்லாமல், அதாவது கவனித்துக்கொள்ள ஆளில்லாமல் இருப்பவர்களாகவோ இருந்தால் ஹாஸ்டலில் சேர்க்கப்படுகிறார்கள்.
பிற காரணங்கள்: வெளிநாடு அல்லது வெளியூரில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்காக ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகளை அதிகம் கவனிக்க முடியாத நிலையில் ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். இப்படித் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் பெற்றோர்களின் முடிவு பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.
பெற்றோரின் கவனிப்பு அவசியம்: தவிர்க்கவே முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்ப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால், எந்தவித காரணங்களும் இல்லாமல் குழந்தைகளை விடுதியில் சேர்ப்பது சரியான முடிவு அல்ல. குழந்தைகள் வீட்டில் வளர்வதுதான் சரி. பெற்றோர்களின் உரிய கவனிப்பு பிள்ளைகளுக்குத் தேவை. குழந்தைகளை நம்முடன் வைத்து வளர்ப்பதுதான் சரியான வழி. பெற்றோர்களின் கூடுதல் கவனம் பிள்ளைகளுக்குத் தேவை.
வீட்டில் வளர்வதால் ஏற்படும் பண்புகள்: வீட்டில் வளரும் பிள்ளைகள் நம் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு வளருவார்கள். பெற்றோரைப் பார்த்து தங்களுடைய ஆளுமையை வளர்த்துக்கொள்வார்கள். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளை பாதுகாப்பாக உணர வைக்கும். வளரும் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. கல்வி என்பது முக்கியமானதுதான். அது ஒருவரை பண்படுத்தும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமையே. பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சரி செய்ய பெற்றோரின் அருகாமை அவசியம். விடுதியில் வளரும் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
கட்டுப்பாடுகள்: வீட்டில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபொழுது பெற்றோரின் அன்பும் அக்கறையும் கிடைக்கும். விடுதியிலோ அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அவர்கள் தங்களுடைய வேலைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள சுதந்திரம் விடுதியில் கிடைக்காது. கட்டுப்பாடுகளுடன் வளரும் குழந்தைகளுக்கு பின் நாட்களில் ஆளுமை குறைபாடுகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
பிணைப்பு ஏற்படுதல்: பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் அன்பும் அக்கறையும் தேவைப்படும் பருவம் இது. பெற்றோர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற உணர்வு குழந்தைகளுக்கு இருக்கும். பெற்றோருடன் இருந்தால் அடிக்கடி வெளியே செல்வதும், மனம் விட்டுப் பேசுவதும், அம்மா கொடுக்கும் உணவுகளை ருசித்து சாப்பிடுவதும், சின்னச் சின்ன சண்டைகள் போடுவதும் என பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்ல பிணைப்பு இருக்கும். குடும்பத்துடன் இருப்பதால் வாழ்க்கை நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.