பொதுவாக, நமது உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அதற்கு போதிய உடற்பயிற்சியும் தேவையான ஓய்வும் அவசியமாகும். இந்த இரண்டும் நமது உடலுக்குக் கிடைக்காதபோது பலவிதமான நோய்கள் நம்மை சுலபமாக நெருங்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நோயே சர்கோபீனியாவாகும். இந்த பதிவில் சர்கோபீனியா (Sarcopenia) எனும் தசை இழப்பு நோயைப் பற்றிப் புரிந்து கொள்ளுவோம்.
சர்கோபீனியா என்பது வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கும் ஒரு தசை இழப்பு குறைபாடாகும். சர்கோபீனியா என்பது ஒரு கிரேக்க வார்த்தையாகும். ‘சார்க்ஸ்’ என்பது தசையைக் (Muscle) குறிக்கும். ‘பெனியா’ என்பது இழப்பு என்பதைக் குறிக்கும். அதாவது, இந்த கிரேக்க வார்த்தைக்கு ‘தசை இழப்பு’ என்று பொருள். உடலில் உள்ள தசைகள் படிப்படியாக சில பல காரணங்களால் பலவீனம் அடைந்து அதனால் ஏற்படும் பிரச்னைகளே ‘சர்கோபீனியா’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் குறைபாடு உடலில் உள்ள தசைகள் வலுவினை இழக்கத் தொடங்கி அதனால் ஏற்படும் பல பிரச்னைகளை உள்ளடக்கியது. சர்கோபீனியா பொதுவாக நாற்பது வயதில் தொடங்கி, அறுபது வயதில் தீவிரமடைகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்களை இது அதிக அளவில் பாதிக்கிறது.
தசைகள் ஆரோக்கியமாகத் தொடர்ந்து இயங்க புரதச்சத்து அவசியம் தேவை. புரதச்சத்து போதிய அளவில் கிடைக்கப்பெறாத நிலையில் ஹார்மோன்களில் ஏற்படும் சில மாற்றங்களால் தசை நார்கள் பாதிப்படையத் தொடங்குகின்றன. நமது அன்றாட வேலைகளைச் சரிவரச் செய்வதில் சிக்கல் ஏற்படுதல், உடல் சோர்வு, வேகமாக நடக்க இயலாத நிலைமை, படிகளில் ஏறுவதில் அதிக சிரமம், கீழே விழுவது போன்ற ஒருவித மாயை இவையெல்லாம் சர்கோபீனியாவின் அறிகுறிகளாகும். இவை ஏற்பட்டால் உடனே ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும். மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட்டால் இதை நீங்கள் சுலபமாக சரிசெய்து இயல்பு வாழ்க்கையை அடையலாம்.
சர்கோபீனியாவைத் தவிர்க்கும் சில பொதுவான எளிய வழிமுறைகளை இனி தெரிந்து கொள்ளலாம். இளம் வயதிலிருந்தே தினமும் நடைப்பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி முதலானவற்றைச் செய்து வருபவர்கள் சர்கோபீனியாவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சிகளின் காரணமாக தசைகள் வலுவடைந்து நன்றாக செயல்படத் துவங்கும் என்பதே இதன் அடிப்படை.
நமது உடலில் உள்ள தசைகள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்றால் அதற்கு போதிய புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. மீன், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்கள் முதலான புரத சத்துக்கள் உணவில் நிச்சயம் இடம் பெற வேண்டும். தசைகளின் சரியான செயல்பாடு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம்.
சூரிய ஒளியிலிருந்து இயற்கையாகவே நாம் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். மீன் எண்ணெய் மற்றும் சில தாவர எண்ணெய்களில் காணப்படும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இவை தசைகளைப் பாதுகாத்து அவை சரியாக இயங்க உதவுகின்றன.
தசையானது பாதிக்கப்படும்போது நமக்கு அதிக அளவில் ஓய்வு தேவைப்படும். எனவே, தினமும் குறைந்தபட்சமாக எட்டு மணி நேரம் கட்டாய ஓய்வும் தூக்கமும் அவசியமாகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு பணி செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அரை மணி நேரத்திற்கொருமுறை எழுந்து சிறிது தூரம் காலாற நடந்து சென்று திரும்பி வந்து மீண்டும் பணியைத் தொடரலாம். இது நல்ல பலன்களை அளிக்கும்.