
உங்க Better half போடற ஒவ்வொரு சண்டையும் இந்த மூனுல அடங்கிடுதா பாருங்க.. அப்போ ஈஸியா சமாளிக்கலாமே...
பெற்றவர்களும் உடன்பிறந்தவர்களும் ரத்த சொந்தங்களும் நம்மை நேசிப்பதும் சகிப்பதும் இயற்கையான ஒன்று. நட்புகளை உறவு லிஸ்டில் சேர்க்க முடியாது. அது முற்றிலும் வேறொரு அழகான விஷயம்.
திருமண பந்தத்தில் நம்மோடு இணையும் நபர், அவரோடு நாம் வளர்க்கும் உறவு, முழுக்க முழுக்க நம் சொந்த முயற்சி. இது மிகவும் சிக்கலானது.
உறவு செய்ய அன்பு தான் அடித்தளம். ரத்த பந்தம் இருப்பவர்களுக்கு இந்த அன்பெனும் அடித்தளம் தானாக அமைந்துவிடும். அதன்மேல் உறவென்ற கட்டடத்தை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.
ஆனால் கணவன் அல்லது மனைவி என்ற உறவில் அன்பெனும் அடித்தளத்தையே நாம் தான் அமைக்க வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால் உறவு செய்துகொண்டு தான் அன்பை வளர்க்க முடியும். அதாவது கட்டடத்தைக் கட்டிக்கொண்டே அடித்தளத்தை அமைப்பது எவ்வளவு சிக்கலோ அவ்வளவு சிக்கல்.
உறவு செய்யும் முறை சரியாய் இருந்தால் அடித்தளம் ஆழ்ந்து அகன்று உறுதியடையும். இல்லாவிட்டால் அஸ்திவாரம் ஆட்டம் காணும்.
பூசல்கள், பிணக்குகள், வருத்தங்கள், அதிருப்திகள், வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள், சண்டைகள், கைகலப்புகள் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது. கணவன் மனைவி ஆனாலும் இருவேறு மனிதர்கள், இருவேறு ஆளுமைகள், இருவேறு மூளைகள் தானே..
இருவேறு திசைகளில் இருந்து இருவேறு சூழல்களில் இருந்து வளர்ந்து வந்திருக்கும் இருவரின் வாழ்வுகள் குறுக்கிட்டு இணையும் போது ஆர்பரிப்புகள் இன்றி அமைதியாய்த் தொடர்வது எப்படிச் சாத்தியம்? அந்த ஆர்பரிப்புகளைக் கையாண்டு ஒரு பொதுவெளிக்கு வந்துவிட இருவரும் கற்றுக்கொண்டுவிட்டால் ஓரளவுக்குச் சமாளிக்கலாம் தானே..
பொதுவாக கணவன் மனைவி உறவில் சண்டைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆயிரம் சண்டைகளானாலும் அவை அத்தனையும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுக்குள் வந்துவிடும்.
1. அக்கறை மற்றும் நெருக்கம் (Care and Closeness)
இருவரில் ஒருவர் அக்கறைக்கும் நெருக்கத்துக்கும் ஏங்கிக்கொண்டிருந்தால் அது மறுக்கப்படும் போதோ தவிர்க்கப்படும் போதோ சண்டை நிச்சயம். என் மேல் அக்கறை காட்டு, என்னோடு மனதாலும் உடலாலும் நெருக்கமாய் இரு என்று வெளிப்படையாய் ஆணும் சரி பெண்ணும் சரி பெரும்பாலும் கேட்பதில்லை. அக்கறைக்கும் நெருக்கத்துக்கும் ஏங்குவதுதான் உங்கள் பார்ட்னர் போடும் சண்டையின் உள்ளர்த்தமா என்று நீங்கள் தான் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
2. மரியாதை மற்றும் அங்கீகாரம் (Respect and Recognition)
உங்கள் உழைப்பும் நற்குணமும் திறமைகளும் மதிக்கப்பட வேண்டும்; அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்பது இயல்பான ஒன்று. இதே எதிர்பார்ப்பு அந்தப்பக்கமும் இருக்குமல்லவா.. இதற்காகத்தான் இந்தச் சண்டையா என்று கொஞ்சம் யோசித்தால் புரிந்துகொண்டுவிடலாம். அங்கீகாரத்துக்கும் மரியாதைக்கும் வரும் சண்டைகள் பெரும்பாலும் அதை மூன்றாம் ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் போது படார் என்று வெடித்துவிடும். உங்கள் மனைவியை / கணவரை மரியாதையுடன் நடத்தி அங்கீகரித்துவிட்டுப் போங்களேன்.
3. அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு (Power and Control)
பிறந்தவீட்டில் தானே அனைத்தும் செய்து வளர்ந்த பெண்ணொருத்தி, மணமான பின்பு சாப்பிட்ட தட்டைக் கழுவிவையென்று கணவனிடம் சொல்லும் போது “முடியாது! நீயே செய்” என்று கணவனிடம் இருந்து பதில் வந்தால் சண்டை வரும் தான். இதில் தட்டைக் கழுவுவது அல்ல பிரச்சினை. மனைவி எதிர்பார்ப்பது கணவனின் அக்கறையை; கணவன் கைப்பற்ற நினைப்பது அதிகாரத்தை.
இப்படி, இருவருக்குள் நடக்கும் அத்தனை சண்டைகளுமே நிச்சியமாக இந்த மூன்றில் ஒன்றுக்குள் சிக்கிவிடும். சிந்தித்துச் செயல்பட்டால் தவிர்க்கலாம். குறைக்கலாம். உறவு உடையாமல் காக்கலாம்.
ஹலோ பிரெண்ட்ஸ்... சற்று முன்னால் நடந்த சண்டையைப் பற்றித்தானே யோசிக்கிறீர்கள்! கண்டின்யூ கண்டின்யூ… மூன்றில் எதற்கான சண்டை அது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா.. காரணத்தைக் கண்டுகொண்டால் தீர்வு கையருகில் தானே..