
செல்லப் பிராணிகள் நமது நெருங்கிய நண்பர்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் முதலிடம் பிடிப்பவை இந்த நாய்கள் தான். நாய்கள் நன்றி உணர்வு, நம்பிக்கை, பாசம், பக்தி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
* நாய்கள் நம்பமுடியாத அளவிற்கு, வழக்கமான பழக்கவழக்கங்களுடன் ஒத்துப்போகின்றன. அவற்றால் தினசரி நடைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுக்கான நேரம் போன்றவற்றை அடையாளம் காண முடியும். வெளியில் அழைத்து செல்வது, உணவு பரிமாறுவது, விளையாடுவது போன்ற நேரங்களை நாய்கள் கவனத்தில் வைத்திருக்கும். நீங்கள் அந்த நேரத்தை மறந்தாலும் அவை உங்ளுக்கு ஞாபகப்படுத்தும். நாய்கள் வலி அல்லது துன்பத்தில் இருக்கும்போது அல்லது தனிமையாக உணரும்போது அழுகின்றன.
* நாய்களின் மூக்கு மனிதர்களை விட 10,000 முதல் 100,000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டது. நாய்கள் புதிய மற்றும் சுவாரஸ்யமான, மிகவும் வலுவான வாசனை உணர்வுகளால் ஈர்க்கப்படுகின்றன. சில மதிப்பீடுகள் ஒரு நாயின் வாசனை உணர்வு மனிதனை விட ஆயிரக்கணக்கான மடங்கு சிறந்தது என்று கூறுகின்றன. நாய்களின் மூளை, வாசனையை செயலாக்கும் பகுதி, மனிதர்களின் மூளையை விட 40 மடங்கு அதிகம். நாய்கள், உணவு விருப்பத்தேர்வுகள், பாலினம் போன்றவற்றை வாசனையிலிருந்து கண்டறியும். மனிதர்களுடன் ஒப்பிடும்போது நாய்களின் மூக்கில் அதிக எண்ணிக்கையிலான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் உள்ளன; அவை அதிகளவிலான வாசனையை அறிய உதவுகின்றன.
* உங்கள் நாய், தூக்கத்தில் உடல் துடிப்பதை, பாதங்கள் இழுப்பதை அல்லது மெதுவாக குரைப்பதை எப்போதாவது கவனித்தீர்களா? நாய்கள் REM (rapid eye movement) தூக்க சுழற்சிகளை அனுபவிக்கின்றன. ஆம், நாய்களும் மனிதர்களைப் போலவே கனவு காண்கின்றன.
* ஒரு நாயின் வால் அசைவு பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். நாய்கள் வால் அசைவை வைத்து அதன் உற்சாகம் முதல் பதட்டம் வரையிலான உணர்ச்சிகளை அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, வேகமான அசைவு அதிக உற்சாகத்தைக் குறிக்கும்.
* நாய்கள் தங்கள் பாதங்களில் வியர்வை சுரப்பிகளைக் கொண்டுள்ளன. நாய்கள் தங்கள் பாதங்கள் மூலம் வியர்வையை வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்றன.
* நாய்கள் மனித உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன, நோய்களைக் கண்டறிகின்றன. மேலும் அவற்றின் உயர்ந்த புலன்கள் மற்றும் உள்ளுணர்வு காரணமாக பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளைக் கூட கணிக்கின்றன. நாய்கள் தங்கள் உரிமையாளர் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும்.
* ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாய்கள் மனித வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. 30,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் நாய்களை வளர்த்ததாக தொல்பொருள் சான்றுகள் தெரிவிக்கின்றன.
* நாய் இனங்களுக்கு இடையே புத்திசாலித்தனம் மாறுபடும், பெரும்பாலான நாய்களால் முறையான பயிற்சியின் மூலம் 165 வார்த்தைகள் அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் புரிந்துகொள்ள முடியும். சில நாய்கள் 250 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ளும். Border collies, German shepherds, and poodles நாய்களால் 1,000 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்.