
ஓரிடத்திலிருக்கும் பொருட்களை மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு, மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம் போன்ற சில விலங்கினங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். பனிமலை மற்றும் பனிபடர்ந்த இடங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு, சக்கரம் இல்லாத அடிப்பலகைகளைக் கொண்ட 'சிலெட்' எனப்படும் பனி ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பனி ஊர்திகளை இழுத்துச் செல்லும் நாய்களை ‘சிலெட் நாய்’ (Sled dog) என்கின்றனர். தமிழில் இதனை இழுநாய் என்று சொல்லலாம். இந்நாய்களின் உடலில் பட்டைகள் கட்டப்பட்டு, அவை பனியூர்தியுடன் பூட்டப்பட்டிருக்கும். பல நாய்கள் இவ்வாறு ஓர் ஊர்தியுடன் பூட்டப்பட்டு பாரங்களை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த நடுத்தர அளவுள்ள நாய்கள் இழுநாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுந்தொலைவு தளராது வண்டியிழுக்கும் திறனும், வேகமாகச் செல்வதும், இழுநாய்களாகப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத இரண்டு முதன்மையான குணங்கள் எனலாம். இந்நாய்கள் ஒருநாளில் ஐந்தில் இருந்து எண்பது மைல் தொலைவு வரை செல்லக்கூடிய திறனுடையவையாக இருக்க வேண்டும்.
கனடா, லாப்லாந்து, கிரீன்லாந்து, சைபீரியா, சுக்ச்சி மூவலந்தீவு, நார்வே, பின்லாந்து, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் இழுநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. கனடாவின் இனுவிக் பகுதியில் ஏறும் வெள்ளை அசுக்கி வகை இழுநாய்கள் அதிக அளவில் பயன்பாட்டிலிருக்கின்றன.
இந்த இழுநாய்களில், தோகோ அல்லது டோகோ எனும் பெயருடைய நாய் இன்றும் சாதனை நாயாக நினைவில் கொள்ளப்படுகிறது. இந்த நாயானது, இலெனர்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியைத் தலைமையேற்று, அந்த அணியை முன் நடத்திச் சென்ற நாய் ஆகும்.
இந்த நாய்களின் அணியானது 1925 ஆம் ஆண்டின் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டது. டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க, அந்நோய்க்கு எதிரான மருந்தை, அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான அலாஸ்காவின் நோம் நகரத்தில் இருந்து ஆங்கரேசு எனும் நகரத்திற்குக் கொண்டு சென்றது.
அப்போது இந்த நாய்க்கு வயது 12 ஆக இருந்தது. சைபீரிய அசுக்கி (Siberian Husky) வகை நாயான இந்நாய்க்கு, இரசிய - ஜப்பானியப் போரில் பங்கு கொண்ட அய்காச்சிரோ தோகோ என்னும் தளபதியின் நினைவாக தோகோ என்று பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது இயந்திரமாக்கல் பயன்பாடு அதிகமான பின்பு, இந்த இழுநாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டன.