எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் என்பதை தற்போது உள்ள தலைமுறை பின்பற்றுவது இல்லை என்று கூறலாம். ஆனால், எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி அவர்களுக்கு நாம் எடுத்துக் கூறி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு அன்றைய தினத்தில் நாம் சில விஷயங்களைக் கடைப்பிடித்தால்தான் அந்த எண்ணெயை குளியலுக்கான முழு பயனையும் நாம் பெற முடியும்.
எண்ணெய் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணெய். இதை நாம் காலை சூரிய உதயத்திற்கு பின் இளம் வெயிலாக இருக்கும்போது தேய்த்து அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கவும். இப்படி நாம் வாரம் ஒரு முறை செய்து வந்தால் உடலில் வெப்பம் தணியும்.
வைட்டமின் டி மற்றும் கால்சியம் நம் உடலுக்குக் கிடைக்கும். இது நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், கண்ணிற்கு குளிர்ச்சி தரும். கண் சூடு, கண் எரிதல் போன்றவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். தலைமுடியின் வேர் கால்களுக்கு நல்ல ஊட்டம் அளிக்கும்.
அதேபோல், செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.
எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது இளநீர், மோர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை அன்று உண்ணக் கூடாது. எண்ணெய் குளியல் எடுத்த பிறகு நல்ல தூக்கம் வரும். ஆனால், அன்று பகலில் நாம் தூங்கக் கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பம் முழுவதும் கண் வழியாகத்தான் வெளியேறும். நாம் தூங்கிவிட்டால் அந்த வெப்பம் முழுவதும் நம் உடலுக்குள்ளேயே தங்கிவிடும்.
அமாவாசை, பௌர்ணமி, பிறந்த நாள் போன்ற நாட்களிலும் ஞாயிறு, திங்கள் போன்ற கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவை குளிர்ச்சியான நாட்களாகும். குளிர்ச்சியான நாட்களில் நாம் எண்ணெய் தேய்த்து மீண்டும் குளிர்ச்சியை கூட்டினால் அது நம் உடலுக்கு பல பக்கவிளைவுகளை உண்டுபண்ணும்.
குளிர்ந்த உடல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்க்கும் முன் பாதத்திலிருந்து தொடங்கி உச்சிக்கு வர வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து குளிக்கவும். வெப்ப உடல் உள்ளவர்கள் முதலில் உச்சியில் தொடங்கி பிறகு பாதம் வரை தேய்க்க வேண்டும். இவ்வாறு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சளி பிடிக்காமல் இருக்கும். இனி எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்து எண்ணெய் குளியலுக்கான முழு பலன்களையும் அடைவோம்.