

உங்கள் குழந்தை வளர்ந்து பள்ளி சென்று வரும் வயதில் வேறு சில குழந்தைகளுடன் பழக நேரிடும். அவர்கள் மூலம் விடுமுறையில் வீட்டை விட்டு குடும்பத்தோடு வெளியே சென்று ஒன்றிரண்டு தினங்கள் தங்கி வருவது, விலை உயர்ந்த கார் மற்றும் பொம்மைகள் வைத்திருப்பது போன்ற ஆடம்பரமான வாழ்வியல் முறைகளைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்கிறது. பின்னர் உங்களிடம் தனக்குப் பிடித்த ஏதாவதொரு பொருளை வாங்கித் தரும்படி அல்லது விடுமுறையில் குறிப்பிட்டதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கவும் செய்யும்.
குழந்தைகள் கேட்பது நீச்சல் குளம் உள்ள ஒரு வீடு வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். உங்களால் அதன் விருப்பத்தை நிறைவேற்றித் தர இயலாத சூழ்நிலையில் உடனே 'நோ' என்பீர்கள். உடனே குழந்தை, ‘ஏன்’ என்ற கேள்வியை முன்வைக்கும். அதற்கு நீங்கள் கூறும் பதில், ‘இப்போ அதற்கெல்லாம் செலவு செய்ய வாய்ப்பில்லை (we can't afford it)’ என்பதாகவே இருக்கும். அந்த நிமிடம் உங்கள் இயலாமைக்காக மனதிற்குள் வருத்தமும் கூடவே ஒரு எரிச்சல் உணர்வும் உண்டாகும்.
மேலே கூறிய பதிலை, அதாவது we can't afford it என்ற வார்த்தைகளை குழந்தையுடனான உங்கள் உரையாடலில் தவிர்த்து விடுதல் நல்லது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு பதில், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் இன்னொரு வேலையில் சேர்ந்து கடினமாக உழைத்தல் போன்ற வழிகளில் கூடுதலாக சம்பாதித்து, அதன் மூலம் நம் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றலாம்.
‘இப்ப அதற்கு வாய்ப்பில்லை’ என்ற வார்த்தைகளைக் கேட்டே வளரும் குழந்தையின் மனதில் பணத் தட்டுப்பாடு என்ற உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும். சிறு வயதில் ஒரு சர்க்கரை மிட்டாய் (Candy) கூட வாங்கி சாப்பிட முடியாத குழந்தை பதினெட்டு வயதானதும், கிரெடிட் கார்ட், ஸ்டூடென்ட் லோன் போன்றவற்றைப் பெற்று, இஷ்டம் போல் ஸ்வீட் வாங்கி சாப்பிடுவது, கிரெடிட் கார்டை அதிகப்பிரசங்கித்தனமாக பயன்படுத்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்நாள் முழுக்க நிதிநிலை பற்றிய மன அழுத்தம் குறையாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும்.
உங்கள் குழந்தை அதிக விலை மதிப்புள்ள ஒரு பொருளைக் கேட்கும்போது நீங்கள் அதனிடம் விளக்கிக் கூற வேண்டிய விஷயங்கள் ஐந்து உள்ளன. அவை:
1. உங்கள் பட்ஜெட்டில் சில வகையான செலவுகள் சேர்க்கப்படாததற்கான காரணங்கள்.
2. நீங்கள் சேமிக்கும் பணம் எந்த செலவுக்குப் பயன்படப்போகிறது என்பதன் விளக்கம்.
3. சமீப கால செலவை விட்டுவிட்டு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் அடையப்போகும் இலக்கிற்கு முன்னுரிமை கொடுப்பதன் காரணம்.
4. கார், சொந்த வீடு, பயணம் போன்றவற்றில் செலவிடும் பணம் நிதிநிலையில் ஏற்படுத்தும் இடையூறுகள்.
5. தாமதமாகக் கிடைத்தாலும், பெறக்கூடிய மன மகிழ்ச்சியின் முக்கியத்துவம்.
உங்கள் குழந்தை கரீபியன் கடலுக்கு நடுவிலிருக்கும் ஒரு தீவு வேண்டுமென்று கேட்டாலும் அவர்களின் ஆர்வத்தை முடக்கி விடாமல், ‘பெரிய பெரிய பணக்காரர்களும் தொழிலதிபர்களும் வாங்கக் கூடியது அது. நீயும் கடினமாக உழைத்து, முயற்சி செய்தால் வாங்கி விடலாம்’ என்று அவர்களை ஊக்கமூட்டுவது அவசியம்.
பணத்தை சிறந்த முறையில் கையாளும் வகையில் உங்கள் குழந்தை உருவாக வேண்டும்மெனில், சிறு வயதில் அவர்கள் கோரிக்கைகளை கண்ணை மூடிக்கொண்டு, ‘we can't afford it’ என்று கூறி நிராகரித்து விடாதீர்கள். அதற்கு பதில், ஒளிவு மறைவின்றி, ‘இப்போது நம்மிடம் உள்ள பணம் இந்த காரணத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று உண்மையைக் கூறுங்கள். கடனை அடைப்பது, வீடு வாங்குவது, ஓய்வு கால பயன்பாட்டிற்கு என எந்த காரணமாக இருந்தாலும் தெளிவுபடுத்தி விடுங்கள்.
பணத்தின் அருமையறிந்து சிக்கனமாக செலவு செய்தால் வாழ்க்கையை சிறப்பாக நடத்தவும் எளிதில் இலக்கை அடையவும் முடியும் என்பதை குழந்தைக்கு விளக்குங்கள்.