எந்த குடும்பமாக இருந்தாலும் கோபம் வருவதும் அதன் காரணமாக சண்டை வருவதும் மனவருத்தம் வருவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் சண்டைக்குப் பிறகு தங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்க ஈகோ பார்க்கிறார்கள். துணை மட்டுமல்ல பெற்றோர்கள், சகோதர சகோதரிகளிடமும் மன்னிப்பு கேட்க தயங்குகிறார்கள்.
வாழ்க்கை பயணத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. ஆனால், அந்த கருத்து வேறுபாடுகளையும் மனக்கசப்புகளையும் மறக்க வைக்க வேண்டும். குடும்பத்தில் நிகழும் வாதங்கள் உறவை மோசமாக்க மட்டுமே வேலை செய்கின்றன. ஒவ்வொரு சிறு பிரச்சனைக்கும் தீர்வு காணும் போது தான் அன்பு அதிகமாகிறது. சிறு கோவங்கள் இருவரும் எளிதில் மறக்கும், புரிதல் வரும் வரை அந்த உறவு ஆரோக்கியமாக இருக்காது.
மன்னிப்பு கேட்பது தோல்வியல்ல:
மனக்கசப்பு ஏற்பட்ட உடன் அந்த பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வேண்டும்.யார் மீது தவறு உள்ளது என்பதை ஆராய்வதை விட யாருக்கு அன்பு அதிகம் உள்ளது என்பதை காட்ட நீங்கள் மன்னிப்பு கேட்கலாம் . அவர் யாரோ மூன்றாவது நபர் அல்ல. உங்களின் வாழ்க்கை துணைவர் , அவரிடம் நீங்கள் தோற்கவில்லை விட்டுக் கொடுத்து சென்றுள்ளீர்கள் இது உங்களின் வெற்றியாகும்.
மன்னிப்பு ஏதோ கொலை குற்றத்திற்காக கேட்க வில்லை. அது சாதாரண சிறு ஊடலுக்காக கேட்பது. மன்னிப்பு கேட்பதை கற்பனையில் மண்டியிடுவதை போல நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு எல்லாம் கேட்க தேவையில்லை .மிக இயல்பாக அதை மகிழ்ச்சியாக , செல்லமாக மன்னிப்பை கேளுங்கள் .சிரித்த முகத்துடன் கெஞ்சுவதை போன்ற பாவனை செய்து கேட்டு பாருங்கள். இது ஒரு சமாதான போர் ,அதில் நீங்கள் தான் அரசர்/அரசி. எப்பாடு பட்டாவது அவரை சமாதானம் செய்வது தான் உங்களின் வெற்றி.அவர் சமாதானம் அடையும் வரை உங்கள் முயற்சியை தொடர வேண்டும். உங்கள் துணை உங்கள் சமாதான முயற்சியை ரசிப்பார்.
அதே வேளையில் இதை கடமைக்காக செய்யாதீர்கள். அது உங்கள் துணைக்கு எரிச்சலை உண்டாக்கலாம். ஒரு வேளை இந்த சமாதான முயற்சி தவறாக சென்றால் அப்படியே நிறுத்தி அமைதியாகி விடுங்கள்.தவறாக செல்லும் போது மேற்கொண்டு முயற்சி செய்வது பிரச்சனையை மேலும் அதிகமாக்கும்.
இது போன்ற சூழலில் வேறு விதத்தில் சமாதானத்தை மேற்கொள்ளலாம்.
உங்கள் முகத்தைப் பார்த்தாலே உங்கள் துணைக்கு கோபம் அல்லது அழுகை வரும் சூழ்நிலையில் வேறு விதமாக தான் அணுக வேண்டும். முழுக்க அமைதியாக இருந்து ஒரு அமைதிக்கான சூழலை முதலில் உருவாக்குங்கள் .உங்கள் அன்பை , சமாதானத்தை அழகாக ஒரு லெட்டரில் எழுதி அவரிடம் கொடுங்கள் .அதில் மன்னிப்பை விட அன்பு அதிகமாக இருக்கும் படி எழுதுங்கள்.போன் மெசேஜ் மூலம் கூட இந்த முறையை பின்பற்றலாம். அவர் கொஞ்சம் மனமாற்றம் அடைவார்.அவர் சமாதானத்துக்கு வந்ததை கொண்டாடுங்கள். அவருக்கு பிடித்ததை சமைத்து தாருங்கள் உங்கள் சமையல் வரும் என்றால் மட்டும்,இல்லா விட்டால் அவருக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
யாரிடம் பிரச்சனை என்பதை உடனடியாக ஆராயாதீர்கள். முடிந்த அளவு அன்று இரவு அவரிடம்,அதிக நேரம் அவருக்கு பிடித்த விஷயங்களை பேசுங்கள்.அவரை வெளியில் அழைத்து சென்று வாருங்கள்.உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை தெரிவியுங்கள். அவருடன் சந்தோஷமாக சில புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!