உங்கள் ஆசைகளுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதீர்!

Don't jeopardize your children's future for your own desires!
Don't jeopardize your children's future for your own desires!
Published on

குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர், பொறியாளர் என்று தாமே என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர், ‘நான் மருத்துவராக ஆசைப்பட்டு முடியாமல் போய் விட்டது. எனவே, என் மகனை எப்படியாவது மருத்துவராக்கியே தீருவேன்’ என்று உறுதிமொழி ஏற்கிறார்கள்.

உண்மையிலேயே அந்தக் குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை மருத்துவராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதைப் பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்குத் தடையாகிப் போகும்.

குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையைத் திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர, தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதை எல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும் கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள் மற்றும் அதன் பயன்கள்!
Don't jeopardize your children's future for your own desires!

கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால், எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப் பாதையில் பயணிக்க அகச் சுதந்திரம் அவசியம் என்பதைப் பெற்றோர் மறந்து விடக்கூடாது. பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது, கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்தப் பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக்க விரும்புவது பொருளற்றது.

இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்தப் பாதையில் குழந்தையை பயணிக்க வைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே. குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக் கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

நம் முகக்கண்ணாடியை தனது பிள்ளைகள் முகத்தில் மாட்டிவிட்டால் பார்வை சரியாகி விடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா? பள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப் பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது? என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒருசில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ!, அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால், அதோடு குழந்தைகளின் உருவாக்கப் பயிற்சியில் குறிக்கோளை நிர்ணயித்தல், அவற்றிற்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோபப்படுவதற்கான காரணங்களும், அதனை கட்டுப்படுத்த எளிய தீர்வுகளும்!
Don't jeopardize your children's future for your own desires!

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்தத் திறமை அதிகமாக இருக்கும். அது எந்தத் துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்பு, அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் சமூகக் கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவைதான்.

ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் குறிக்கோள்களைக் கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் உறுதியாக குறிக்கோளான பாதையை அடைந்து வாழ்வில் வெற்றியடைவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com