
மழைக்காலம் மற்ற காலங்களை விட சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில்தான் பல நோய்களும் நம்மைத் தாக்குகின்றன. இந்தக் காலத்தில் வைரஸ்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மழைக் காலங்களில் ரெப்ஜிரேட்டரை பயன்படுத்தும் முன் அவற்றை சுத்தம் செய்து தூசு மற்றும் பிற அழுக்குகள் வீட்டிற்குள் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பிரிஜ்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மின் விசிறிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கனமான திரைச்சீலைகள் மற்றும் தரை விரிப்புகளை அகற்றுவது நல்லது.
வாட்டர் பியூரிபையர்கள் மற்றும் சமையலறை மற்றும் குளியலறை போன்றவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியே செல்கையில் போர்வையை பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் சுத்தமான காற்றை சுவாசித்தல் நுரையீரலுக்கு நல்லது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வீட்டில் திரைச்சீலைகள், தரை விரிப்புகள், மெத்தை, தலையணை மற்றும் உடைகளில் தூசு படியாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.
சூப் மற்றும் எந்த விதமான உணவாக இருந்தாலும் சரி அவற்றை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். மழை காலத்தில் வெளி உணவுகளை முடிந்த மட்டும் தவிர்க்க வேண்டும். அதுவே அஜீரணக் கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது. மழைக் காலங்களில் அதிக வாசனையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல சாப்பிட்டவுடனே படுப்பதை தவிர்க்க வேண்டும். அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு நீச்சல் நல்ல உடற்பயிற்சி. ஆனால், ஜாக்கிங் போன்றவை பிரச்னைகளை ஏற்படுத்தும். அதேபோல் குளிர்ந்த காற்றில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் தொற்று பரவாமல் இருக்க வீட்டை மற்றும் வீட்டின் சுற்றுச்சூழல்களிலும் சுத்தம் பராமரிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோயில் மற்றும் கடைத் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது. வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை பயன்படுத்துவது நல்லது. ஷூ மற்றும் செருப்புகளை வீட்டின் வெளியே விட்டு விட்டு வர வேண்டும்.
குடி தண்ணீரை எப்போதும் காய்ச்சி ஆற வைத்து இளம் சூட்டில் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த வெளி உணவுகள் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டின் முன்பும்,சுற்றுப்புறத்திலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் முன் ஆட்டுக்கல், சிமெண்ட் தொட்டி மற்றும் பூந்தொட்டிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தில் பழைய பொருட்கள், குறிப்பாக டயர்கள் மற்றும் தேங்காய் சிரட்டை போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றி விட வேண்டும்.
மாலை நேரத்தில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். காரணம், அந்த நேரத்தில்தான் கொசுக்கள் வீட்டினுள் நுழைய முயற்சிக்கும். வீட்டில் கொசு வலை பயன்படுத்துவதும் நல்லது. மழை காலத்தில் குழந்தைகளுக்கு கை, கால்களை முழுவதும் மறைக்கும்படியான ஆடைகள் மற்றும் கால்களுக்கு பாதங்களை மூடும்படியான பருத்தி துணியிலான சாக்ஸ் அணிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை புளூ காய்ச்சல் பரவும் நேரம். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். பெரியவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. முட்டை, இறைச்சி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மழைக் காலங்களில் சில உணவுப் பொருட்களால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதில் கத்தரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, பூசணி, அகத்திக்கீரை போன்றவையும், பழங்களில் வாழை, கொய்யா, திராட்சை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் வரும் முக்கியமான பிரச்னை பாதங்களில் ஏற்படும் சேற்றுப்புண். இதற்குக் காரணம் மழை நீரில் அங்குமிங்கும் அலைவதுதான். இதனைத் தவிர்க்க மருதாணி அல்லது கடுக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை மஞ்சளுடன் கலந்து களிம்பு போல அரைத்து சேற்றுப் புண் மீது தடவி வர சரியாகும். மழைக்காலங்களில் வரும் மற்றொரு பிரச்னை ஜலதோஷம். இதனைத் தவிர்க்க வெங்காயத்தை மிளகுடன் இரவில் மென்று தின்று விட்டு சுடுநீர் பருகி விட்டு படுத்தால் சரியாகி விடும். இந்தக் குறிப்புகளை பின்பற்றினால் மழை காலங்களில் உடலை பாதுகாத்து சந்தோஷமாக மழைக்காலத்தைக் கொண்டாடலாம்.