
‘மினிமலிசம்’ என்பது ஒரு வகை வாழ்வியல் முறை. இதைப் பின்பற்றுபவர்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் கூட சில நேரம் அதிகப்படியானதாகத் தோன்றும். எப்போதெல்லாம் அவர்கள் Adjust யோசிப்பதுண்டு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. வீட்டின் உள் அலங்காரத்திற்காக பலர் பல வகையான பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும்போது, மினிமலிஸ்ட், 'வீட்டிற்குள் குப்பை சேர்க்க மட்டுமே இப்பொருட்கள் பயன்படும்' எனக் கூறி அவற்றில் எதையுமே வாங்க மறுப்பர்.
2. சிலர் அணியும் ஆடையின் நிறத்திற்கு மேட்ச்சாகவும், ஃபேஷனுக்காகவும் என பல ஜோடி ஷூக்கள் மற்றும் செருப்புகள் வைத்திருப்பர். மினிமலிஸ்ட்கள், பழசாகி உபயோகமற்றுப் போனவற்றை தூக்கி எறிந்து விட்டு, மனதுக்குப் பிடித்த ஒன்றிரண்டை மட்டும் வைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துபவர்களாக இருப்பார்கள்.
3. பலர் தங்கள் வீட்டு அலமாரிகளில் ஒரு முறை படித்துவிட்ட புத்தகங்கள் மற்றும் சிடி பிளேயர்களை மலைபோல குவித்து வைத்து தூசி படிய விட்டிருப்பார்கள். விரல் நுனியில் நினைத்த பாடலைக் கேட்கவும், படத்தைப் பார்க்கவும், டிஜிட்டல் வழியில் புத்தகங்களைப் படிக்கவும் முடிகிற இந்தக் காலத்தில், மினிமலிஸ்ட்கள், அவற்றில் எதையுமே வாங்குவதுமில்லை, சேமிப்பதுமில்லை.
4. ஒரே உபகரணத்தைப் பயன்படுத்தி ஒன்றிற்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்து முடிக்கும் வகையில் ஒரு கருவி சந்தைக்கு வந்திருக்குமாயின், இவர்கள் அதை வாங்க மாட்டார்கள். பழைய முறையை பின்பற்றி வேலையை செய்து முடித்துக்கொள்வர்.
5. சிலர் பிற்காலத் தேவைக்கு உதவுமென்று ஒரே பொருளை ஆறு ஏழு என்று வாங்கிக் குவிப்பதுண்டு. மினிமலிஸ்ட்கள் அப்போதைய தேவைக்கானதை மட்டுமே வாங்குவார்கள்.
6. சிலர், மார்க்கெட்டில் கிடைக்கும் பல வகையான சுத்திகரிப்பான்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்து உபயோகிப்பதுண்டு. மினிமலிஸ்ட்கள் பன்முகத்தன்மை உடைய ஒரு பொருளைப் பார்த்து வாங்கி, அதை கிச்சன் சிங்க், டாய்லெட், கண்ணாடி, ஸ்டவ், தரை போன்ற பலவற்றை சுத்தப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வர்.
7. விடுமுறையில் வெளியூர் பயணம் செல்லும்போது இவர்கள் அனாவசியமாக வீடியோக்கள், போட்டோக்கள் எடுப்பதைத் தவிர்த்து விடுவார்கள். அதேபோல, நினைவுச் சின்னங்களாக (souvenirs) வாங்கி பையை நிரப்பும் பழக்கமும் இவர்களுக்குக் கிடையாது.
8. ஷாப்பிங் செல்லும்போது, கண்ணில் காணும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கும் பழக்கம் இவர்களுக்குக் கிடையாது. இதனால் இவர்கள் பணமும் மிச்சமாகும்; வீடும் உபயோகமற்ற பொருட்களால் பொலிவற்று விளங்கவும் வாய்ப்புண்டாகாது.
9. மினிமலிஸ்ட்கள், பிறர் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும்போது, நன்கு யோசித்து அவர்களுக்கு நல்ல விதத்தில் உபயோகப்படும்படியான பொருளையே வாங்கிச் செல்வார்கள்.
10. இவர்கள், ஒரு முறை உபயோகித்து தூக்கி வீசக்கூடிய பேப்பர் டவல், வாட்டர் பாட்டில், பேப்பர் பிளேட் போன்றவற்றை வாங்குவதற்குப் பதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவக்கூடிய மற்றும் நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் வரக்கூடிய பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
கஞ்சத்தனமில்லாத மினிமலிசம் அனைவராலும் பின்பற்றப்படுவதில் தவறில்லை என்றே கூறலாம்.