
குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. அதுவும் அவர்களை மகிழ்ச்சியாக வளர்ப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் டச்சு பெற்றோர்களின் செயல்முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வெளியில் விளையாட அனுமதி: குழந்தை வயது முதலே டச்சுக் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் விளையாட்டு பூங்காக்களில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, காடுகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதால் அவர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் அடைந்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சுதந்திரத்தை வளர்த்தல்: குழந்தையாக இருக்கும்பொழுதே தங்களின் வேலைகளைச் செய்து கொள்ள அனுமதிப்பது, அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்க அவர்களது பெற்றோர்கள் அனுமதிப்பதால் குழந்தைகளுக்கு சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சமமான வாழ்க்கை முறை: டச்சுக் குழந்தைகளுக்கு பள்ளி, விளையாட்டு மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்றவற்றை சம அளவில் பகிர்ந்து அளிப்பதோடு, ஓய்வெடுப்பதற்கும் பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
திறந்த உரையாடல்: குழந்தைகளின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்த டச்சு பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் மறைக்காமல் கூறுவதோடு திறம்பட சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
கலாசாரம்: டச்சு குழந்தைகளுக்கு பல்வேறு கலாசாரங்களை, பல்வேறு மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதால் குழந்தைகள் அனுபவம் மிக்கவர்களாகவும் சகிப்புத்தன்மை நிறைந்தவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது: குடும்பத்துடன் ஒன்றாக உணவு உண்பது, வார இறுதி நாட்களில் ஒன்றாக வெளியே சென்று பொழுதுபோக்குவது போன்றவற்றை பெற்றோர்கள் செய்வதால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு மற்றும் பிணைப்பு ஏற்பட்டு மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.
கல்வி: பள்ளிப் பாடத்தில் முன்னேறுவதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வங்களை வளர்த்தெடுக்கவும்,கிரிட்டிகல் சிந்தனையை வளர்க்கவும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதால் குழந்தைகள் நிறைவான வாழ்வு வாழ்கிறார்கள்.
பணி - வாழ்க்கை சமநிலை: வாழ்க்கை மற்றும் பணி இரண்டையும் சமமாகப் பிரித்து பெற்றோர்கள் டச்சு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதால் பல மணி நேரம் வேலை செய்தாலும் அவர்கள் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்கின்றனர்.
குறைந்தபட்ச வாழ்வு: குறைந்தபட்ச வாழ்வியல் முறையை வாழ நினைக்கும் டச்சு பெற்றோர்கள் பொருட்களை உடைமையாக்கி கொள்வதை விட, அனுபவங்களை பெற நினைப்பதால் குழந்தைகளை சிறிய விஷயத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
கிரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கிறார்கள்: டச்சு பெற்றோர்கள் குழந்தைகளின் கலை கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் என குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிப்பதால் அவர்கள் பெருமளவு மகிழ்ச்சி அடைகின்றனர்.
உணர்வு நுண்ணறிவு: குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை இனம் கண்டு அதைக் கையாள பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகள் நிம்மதி அடைகின்றனர்.
தோல்வியை தழுவ அனுமதிக்கிறார்கள்: தோல்விகளே வளர்ச்சிக்கான வாய்ப்பு என குழந்தைகளை ஊக்கப்படுத்துவதால் அவர்களின் விடா முயற்சி, நேர்மறை எண்ணங்கள், சவால்களை சந்திக்கும் திறன் அதிகரித்து வலிமையடைகின்றனர்.
விளையாட்டு நேரம்: குழந்தைகளை டச்சு பெற்றோர்கள் நாள் முழுவதும் விளையாட அனுமதிப்பதால் அவர்களின் கற்பனைத் திறன் வளர்ந்து பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவைப்படாமல் வளர்ந்து விடுகிறார்கள்.
இயற்கை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை எனக் கூறும் பெற்றோர்கள், இயற்கையின் மீதான ஆர்வத்தைத் தூண்டி விடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
டச்சு பெற்றோர்கள் மேற்கண்ட செயல்களைச் செய்வதால் அவர்களது குழந்தைகள் தனித்திறமையாகவும் மகிழ்ச்சியுடனும் வளர்கிறார்கள்.