

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் உலகம் நான்கு சுவர்களுக்குள்ளும், அலைபேசித் திரை களுக்குள்ளும் சுருங்கிவிட்டது. ‘வெளியே போனால் அழுக்காகிவிடுவாய்’, ‘மண்ணைத் தொட்டால் கிருமி தொற்றிவிடும்’ என்று சொல்லிச் சொல்லியே நாம் குழந்தைகளை இயற்கையிலிருந்து பிரித்துவிட்டோம். ஆனால், உண்மையில் குழந்தைகளை மண்ணோடு விளையாட விடுவதுதான் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிகச்சிறந்த மருந்து. இதைத்தான் 'எர்த் தெரபி' என்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, மிகத் தூய்மையான சூழலில் வளரும் குழந்தைகளைவிட, மண்ணிலும் இயற்கையான சூழலில் விளையாடி, வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
மண்ணில் உள்ள சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலில் படும்போது, அவர்களின் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. இது பிற்காலத்தில் அவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. மண்ணைத் தொடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்புக் கவசமாக அமைகிறது.
புலன்களின் வளர்ச்சி:
குழந்தைகள் மண்ணைக் கைகளால் பிசைவது, ஈரமான மண்ணின் வாசனையை நுகர்வது, உதிர்ந்த சருகுகளின் சத்தத்தைக் கேட்பது என இயற்கையோடு இணையும்போது அவர்களின் ஐந்து புலன்களும் தூண்டப்படுகின்றன. இது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, களிமண்ணைக்கொண்டு பொம்மைகள் செய்வது குழந்தைகளின் விரல் தசைகளை வலிமையாக்குகிறது. இது பிற்காலத்தில் அவர்கள் எழுதுவதற்கும், கைவேலைப்பாடுகள் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
மன அழுத்தம் மற்றும் பிடிவாதம் குறையும்:
குழந்தைகளுக்கும் மன அழுத்தம் உண்டு. பாடச்சுமை, வீட்டுப்பாடம், அதிக மார்க் எடுக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரும் அழுத்தம், போட்டி நிறைந்த சூழல் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும், வெறும் காலால் மண்ணில் நடப்பதும் குழந்தைகளின் மனதில் இருக்கும் படபடப்பைக் குறைக்கும். மண்ணில் விளையாடும்போது சுரக்கும் 'செரோடோனின்' ஹார்மோன் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதனால் குழந்தைகளின் பிடிவாதம் குறைந்து, அவர்கள் அமைதியான மனநிலையைப் பெறுவார்கள்.
கவனிப்புத்திறன் மற்றும் ஆர்வம்:
டி.வி, செல்போன் திரையில் ஓடும் வீடியோக்களைப் பார்ப்பது குழந்தைகளின் கவனிப்புத் திறனைச் சிதைக்கும். ஆனால், ஒரு செடி வளர்வதைப் பார்ப்பது அவர்களின் கவனிப்புத் திறனை அதிகரிக்கும். ஒரு விதை எப்படி முளைக்கிறது? புழுக்கள் எப்படி நகர்கின்றன? பூக்கள் ஏன் விரிகின்றன? போன்ற கேள்விகள் அவர்களின் தேடல் உணர்வைத்தூண்டும். இது அவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தராத ஒரு நேரடி அனுபவக் கல்வியைத்தரும்.
பொறுமையும் கருணையும் வளரும்:
ஒரு செடியை நட்டு அது பூப் பூக்கும் வரை காத்திருப்பது குழந்தைகளுக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கும். செடி வாடினால் அதற்குத் தண்ணீர் ஊற்றுவதும், பறவைகளுக்குத் தானியம் வைப்பதும் மற்ற உயிரினங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் கருணையை வளர்க்கும். உணவின் மதிப்பை அவர்கள் உணர்வார்கள். ஒரு தக்காளியோ கத்தரிக்காயோ உருவாவதற்கு எவ்வளவு உழைப்பு தேவை என்பதை அவர்கள் கண்முன்னே பார்க்கும்போது, உணவை வீணாக்க மாட்டார்கள்.
குழந்தைகளுக்கான உயர்ந்த பரிசுகள்:
இந்தக் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு 'விலை உயர்ந்த வீடியோ கேம்களை' வாங்கிக் கொடுப்பதைவிட, சில தொட்டிசெடிகள், ஒரு சின்ன மண்வெட்டியையும், சில விதைகளையும் வாங்கிக்கொடுங்கள். அவர்களின் கைகள் அழுக்கானாலும் பரவாயில்லை, அவர்களின் மனமும் உடலும் ஆரோக்கியமாக வளரட்டும்.
இயற்கையைத் தொட்டு வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆரோக்கியமான மனிதர்களாக உருவெடுப்பார்கள். அழுக்காகும் உடைகள் துவைத்தால் மாறிவிடும், ஆனால் மண்ணோடு விளையாடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் அந்த அனுபவம் வாழ்நாள் முழுமைக்கும் மாறாத நன்மைகளைத்தரும்!