வாழைப்பழம் சாப்பிடுவது அதிக நன்மை தரும் என்பதால், நம்மில் பலர் அதை தினமும் சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலைக் குப்பையில் போடுவதும் உண்டு. ஆனால் வாழைப்பழத்தை போல் அதன் தோல்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தோல்களில் உள்ள நன்மைகள் பற்றி அறியாமல், சிலர் பழங்களில் உள்ள தோல்களை தூக்கி வீசி விடுவர். ஆனால் பல பழங்களின் தோல்களில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. அதை தெரிந்துக்கொண்டால், தோல்களை குப்பையில் போடாமல் நம் தேவைக்கு பயன்படுத்தலாம்.
வாழைப்பழத் தோலை இவ்வாறு பயன்படுத்துங்க!
இயற்கை உரமாக
வாழைப்பழத்தை விட அதன் தோலில் தான் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தினால், தாவரங்கள் நன்கு வளர்வதோடு, பூச்செடிகளில் நன்கு பூக்கள் பூக்கும்.
ஷூ பாலிஷ்
வாழைப்பழத் தோலின் உட்பகுதியை, ஷூவின் மேல்பகுதியில் தேய்த்து, பின்னர் துணியை வைத்து துடைத்தால் ஷூ பாலிஷ் போட்டது போல் பிரகாசிக்கும்.
பளபளக்கும் வெள்ளி பொருட்கள்
வெள்ளி பொருட்கள் பளபளக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோலை நன்கு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்து, வெள்ளி பொருட்கள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து, கழுவினால் வெள்ளி பொருட்கள் பளபளப்பாக மாறிவிடும்.
பற்கள் வெண்மைக்கு
வாழைப்பழத் தோலின் உட்பகுதியை பற்களில் வைத்து சில நிமிடங்கள் தேய்க்கலாம். இவ்வாறு அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்கள் வெண்மை நிறமாக மாறுவதை உங்களால் பார்க்க முடியும்.
முகப்பருக்கள் நீங்க
வாழைப்பழ தோலின் உட்புறத்தை முகப்பரு உள்ள பகுதியில் தேய்த்தால் பருக்கள் குறைந்து மறைந்து விடும். மேலும் வாழைப்பழத் தோலில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல், அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டது.
சருமத்திற்கு மாய்ஸ்ரைசர்
வறண்ட சருமத்தில் வாழைப்பழத் தோலின் உட்பகுதியை தேய்த்து வர, சருமம் மிருதுவாவதுடன் ஈரப்பதமாகவும் இருக்கும்.
மருவை போக்க
இரவு உறங்க செல்லும் முன் சிறிதளவு வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மரு உள்ள பகுதியில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். வாழைப்பழத் தோலில் உள்ள என்சைம்கள் மருவை நீக்க உதவியாக இருப்பதால் மரு எளிதில் மறைந்து விடும்.