
சக மனிதர்களை உருவ கேலி செய்தல் என்பது இன்றல்ல நேற்றல்ல, பல நூறாண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. உடலையும் நிறத்தையும் அடிப்படையாக வைத்து உருவ கேலி செய்வது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. உருவ கேலிக்கு ஆளாகும் நபர் படும் மனவேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவிப்பவர்களுக்கே அது புரியும் (என் பள்ளிப்பருவத்தில் நானும் உருவ கேலிக்கு ஆளாகியிருக்கிறேன்). உடல் காயம் உடனே ஆறிவிடும். ஆனால் மன காயம் வாழ்நாள் முழுவதும் ஆறவே ஆறாது. உருவ கேலியை ஒருவித வன்முறை என்று கூறினாலும் தவறில்லை.
வறுமையின் காரணமாக கிழிந்து போன டிரவுசரை அணிந்து வரும் மாணவரை “போஸ்ட்பாக்ஸ்” என்று கேலி செய்வது, குண்டாக இருப்பவரைப் பார்த்து “எந்த கடையிலே நீ அரிசி வாங்குறே” என்று ஏளனமாகக் கேட்டு கேலி செய்வது, கறுப்பாக இருப்பவரை கேலி செய்வது, உயரமாக இருப்பவரையும் குள்ளமாக இருப்பவரையும் பார்த்து கேலி செய்வது,
முகப்பரு உள்ளவர்களை கேலி செய்வது, வயதானவர்களைப் பார்த்து 'பெரிசு' என்று கேலியும் கிண்டலும் செய்வது என இன்னும் பலப்பல உருவ கேலிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. சொல்லப்போனால் தொண்ணூறு சதவிகித மனிதர்கள் உருவ கேலிக்கு ஆளானவர்களாகத்தான் இருப்பார்கள்.
உருவ கேலி செய்து பிறரை வேதனைக்குள்ளாக்கி மகிழ்தல் என்பது மிகவும் கேவலமான செயல் என்பதை உணர வேண்டும். பிறர் நம்மை கேலி செய்தால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுவோமா என்பதை கேலி செய்பவர் முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். பிறரை உருவ கேலி செய்து அவருடைய முன்னேற்றத்தை முடக்கி அவருடைய நட்பை இழப்பதால் நமக்கு என்ன பயன் என்பதை உருவ கேலி செய்பவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பல தமிழ்த் திரைப்படங்களில் உருவ கேலிகள் தொடர்பான காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் இன்றளவும் இடம் பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. நகைச்சுவை என்பது பிறருடைய மனதைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும். வார்த்தைகளால் பிறருடைய மனதை நாம் ஏன் காயப்படுத்த வேண்டும். அதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டிய தருணம் இது. பிறருடைய உருவத்தை கேலி செய்தவதால் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு மகிழ்ச்சியா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை வரை சென்றவர்களும் உள்ளனர். உருவ கேலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயல்பாகவே ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. இத்தகையவர்கள் உருவ கேலிக்கு பயந்து சமூகத்தில் பிறருடன் பழகுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். பெரும் திறமை படைத்தவர்கள் கூட உருவ கேலியால் பாதிப்படைந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் முடங்கிப் போய்விடுகிறார்கள்.
சிறுவயதில் உருவ கேலிக்கு ஆளானவர்களின் மனதில் அத்தகைய கேலிப் பேச்சுகள் பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. அது அவர்களின் மனதிற்குள் அவ்வப்போது தோன்றி அவர்களை மனதளவில் பாதித்து அவர்களின் செயல்களையும் திறமைகளையும் முடக்கிப் போட்டு விடுகிறது. இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை எதிர்காலத்தைப் பற்றிய ஒருவித பயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஆகவே சகமனிதர்களே! உருவ கேலி செய்பவர்களைக் கண்டு ஒதுங்காதீர்கள். பயப்படாதீர்கள். முடங்கிப் போகாதீர்கள். மனதளவில் உடைந்து போகாதீர்கள். அத்தகையவர்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அவர்களின் கேலிப்பேச்சுகளை மனதாலும் ஏற்காதீர்கள். நாம் ஒவ்வொருவரும் தனித்திறமை மிக்க மகத்தான பிறவிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதித்து அத்தகைய மனிதர்களுக்கு உங்கள் சாதனைகளைப் பரிசாக அளியுங்கள்.