
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். அந்த விருப்பத்தை அவரவருக்குத் தெரிந்த வழிகளில் சென்று நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால், வாழ்க்கையில் கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பேசும் முன் கேட்க வேண்டும். எழுதும் முன் யோசிக்க வேண்டும். செலவழிக்கும் முன் சம்பாதிக்க வேண்டும். சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாகவே இருக்கும். யாரிடம் கற்கிறோமோ அவர்தான் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். நாம் சொல்வது தவறாக இருந்தாலும் ‘சரி’ என்று தலை அசைக்கும் நண்பன் எப்போதும் தேவையே இல்லை.
நோயை விட பயமே அதிக ஆபத்து. ஒரு துளி பேனா மை 10 லட்சம் பேரை சிந்திக்க வைக்கும். நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒன்றைப் பற்றி நிச்சயமாக நம்ப எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால், பழகிக்கொள்ள வேண்டும். நல்லவர்களோடு நட்பாயிருந்தால் நல்லவனாக முடியும். கோபத்திற்கான காரணம் நல்லதாய் இருப்பதில்லை. ‘இவர்கள் ஏன் இப்படி?’ என்பதை விட, ‘இவர்கள் இப்படித்தான்’ என எண்ண வேண்டும்.
யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்! ஒருமுறை முடிவெடுக்க ஆயிரம் முறை சிந்தியுங்கள். பயத்தை பயமுறுத்தி உதற வேண்டும். நியாயத்திற்காக வெளிப்படையாக விவாதிப்பது சிறப்பாகும். உண்மை புறப்படும் முன்பே பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும். உண்மை தனியாகவே செல்லும். பொய் துணையில்லாமல் செல்லாது. வாழ்வதையும் வாழ விடுவதையும் நமது வாழ்க்கை தத்துவங்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தன்னை யாராலும் ஏமாற்ற முடியாது என்று நினைப்பவன்தான் ஏமாந்து போகிறான்.
உலகம் ஒரு நாடக மேடையாக இருப்பதால் ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு நடிக்கிறார்கள். எப்போதும் வேலை செய்துகொண்டே இருந்தால்தான் முன்னேற முடியும். அன்பும் ஆற்றலும் வெளிப்படுத்துபவரே ஆர்வத்துடன் பணிபுரிவார். வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி ஆள்பவன் இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான். தோல்வி அடுத்த செயலை கவனமாக செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம். இன்றே செய்ய முடியும் ஒரு செயலை நாளை வரை தள்ளிப்போடக் கூடாது. இவற்றையெல்லாம் நாம் வாழ்வில் கடைபிடிக்க ஆரம்பித்தால் முழுமையான வாழ்க்கையை உணர முடியும்.