
ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் சரிசமம் என்ற விழிப்புணர்வு தற்போது பெருகியுள்ளது. அன்றைய காலத்தில் ஆண் என்றால் அலுவலக அறையும், பெண் என்றால் சமையல் அறையும் மட்டும்தான் என்பது போல ஒரு உருவகத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
பெண் கல்வி கற்று முன்னேற்றம் அடைந்தவுடன் இந்த உருவகத்தின் மீதான கண்ணோட்டங்கள் மாறுபட ஆரம்பித்தது. பெண்ணின் எதிர் கேள்விகள் ஆண்களின் நடவடிக்கைகளில் சற்று மாற்றத்தை கொண்டு வந்தது. இருவரும் பணிக்குச் சென்றால்தான் ஒரு குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலைதான் தற்போது.
ஆயினும், சில குடும்பங்களில் இன்றும் ஆண் பிள்ளைகளுக்கு தனி முன்னுரிமை தரத்தான் செய்கிறார்கள். இதனால் அவர்கள் இழக்கப்போவது எதிர்கால நிம்மதியை என்று அறியாமல் இருக்கிறார்கள். ஆம். திருமணத்துக்கு பிறகான வாழ்வில் சில விஷயங்கள் தெரியாமல் போனால் நிச்சயம் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்பு நிறையவே உண்டு.
சரி, ஆண் பிள்ளைகள் வளரும் பருவத்தில் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும், எதைக் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருவது இயல்பானது. ஆனால், ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் பழக அனுமதியுங்கள். ஏனெனில், சைக்கிளும் நீச்சலும் உடலை சமநிலைக்குக் கொண்டு வந்து ஆரோக்கியம் தரும். எதையும் சமாளிக்கும் திறனைத் தரும். இதனால் அசந்தர்ப்பமான சூழலில் தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும்.
2. பத்து வயதில் சுடுநீர் வைப்பதில் துவங்கி தோசை சுட, குக்கரில் சாதம் வைக்க, காய்கறி நறுக்கப் பழக்குங்கள். பின்பு தேங்காய், எலுமிச்சை, தக்காளி போன்ற கலவை சாதம் போன்ற எளிதாக செய்யக்கூடிய One Pot One Shot (OPOS) சமையல் முறையை அறிமுகப்படுத்துங்கள். ஆம்லெட், டோஸ்ட் பிரெட் போன்ற எளிய உணவுகளைத் தயாரிக்கச் சொல்லுங்கள்.
3. சமைக்க மட்டுமல்ல, முதலில் தான் சாப்பிட்ட தட்டை எடுத்து கழிவுகளை குப்பையில் போட்டு சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். பணியாளர்கள் இருந்தாலும் தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவும் பழக்கம் பின்னாளில் அவர்களுக்கு நிறைந்த பொறுமையைத் தரும். திருமணத்தின்போது பெண்களிடம் இந்த சமைத்தல், கழுவுதல் விஷயம் முன்னுரிமை கிடைக்க உதவும்.
4. ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பை மட்டும் திணிக்கமல், நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி வாசித்தல் என்ற போதைக்கு அடிமையாக்குங்கள். வேறு போதைக்கு செல்ல விடாமல் செய்யும் இந்த நல்ல பழக்கம். முடிந்தால் வீட்டில் ஒரு நூலகம் அமைக்கவும் உதவலாம்.
5. படிக்கும்போதே பணத்தின் அருமையைப் புரிய வையுங்கள். கேட்டபோதெல்லாம் பணம் அனுப்ப அப்பா, அம்மாவால் முடியாது என்று 15 வயதிலிருந்தே தனியே சேமிக்கச் சொல்லுங்கள். பணத் தேவைக்கு யாரையும் சார்ந்து இல்லாமல் தனது வருமானத்தில் வாழும் நம்பிக்கையை விதையுங்கள்.
6. பாலியல் தொல்லைகள் ஆண் பிள்ளைகளையும் விட்டு வைக்காத காலம் இது என்பதை புரிய வையுங்கள். முக்கியமாக, இவையெல்லாம் ஹார்மோன்கள் செய்யும் கோளாறு என்பதை அவர்களுக்கு சொல்லித் தாருங்கள்.
7. கோபம் வந்தால், எதிராளியின் தாயை, தமக்கையின் மானத்தை குறிக்கும் வசைச் சொற்களைப் பயன்படுத்துவது இழுக்கு என்று சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, பெற்றோரான நீங்கள் குடும்பத்தில் வசைச்சொற்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுவே, திருமண வாழ்க்கையில் அதிருப்தி தர அடிப்படையாக அமையலாம். மரியாதை தந்து மரியாதை பெறுவதே சுயமரியாதையை தக்க வைக்கும். இதனுடன் பெண்களின் உணர்வுகளை மதித்து நடக்கத் தெரிந்திருந்தால் ஆண்கள் மண வாழ்வில் நிம்மதி காணலாம்.