
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்பொழுது ஆளுக்கு ஒரு வேலையாக செய்வோம். அப்பொழுது எல்லோருக்கும் உடற்பயிற்சியுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைக்கும். சில நேரங்களில் கூட்டுக் குடும்பத்தில் தனிமையில் கிடைக்கும் சுதந்திரம் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
இடைப்பேச்சு வேண்டாம்: வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சில நேரங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம் அல்லது மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அப்பொழுது காரணம் இன்றி அனைவரையும் கோபித்துக் கொள்வார். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அவர்களின் பேச்சுக்கு எந்த எதிர் பேச்சும் பேசாமல் அமைதி காப்பது அவசியம். இல்லையென்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம். இதனால் பேசுபவரின் மனநிலையில் நல்ல மாற்றம் வரும். பேசுவதை நிறுத்திக் கொண்டு விடுவார். பிறகு, குடும்பம் சகஜ நிலைக்குத் திரும்பும். அதன் பிறகு அவர் பேசியதை நினைவுபடுத்தி கேட்காமல் இருந்தால் பிரச்னை வராது. பிறகு குழந்தைகளை அவர்களிடம் அனுப்பி விளையாட விடலாம். இதனால் குடும்பம் சகஜ நிலைக்குத் திரும்பும்.
உணர்ச்சிக்கு மதிப்பு: எப்பொழுதும் மனைவி அதிகமாக சமைப்பதை பார்க்கும் கணவர், ‘இன்று நான் சமைக்கிறேன். நீ சிறிது ஓய்வு எடுத்துக்கொள் அல்லது உனக்கு பிடித்தமான வேலையைச் செய்’ என்று கூறினால், மனைவியும் அதைக் கேட்டு சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இதனால் வீட்டில் அமைதி நிலவும். எல்லோரும் வித்தியாசமான ஒரு ரெசிபியை ருசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், கணவரை விட்டுவிட்டு மனைவி ஏதோ ஒரு வேலை நிமித்தம் பிறந்தகம் செல்ல வேண்டி இருந்தால், வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனித்து அவர்களுக்கு ஏற்றபடி சமைத்துத் தருவதற்கு கணவருக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு இது ஒரு வாய்ப்பு. இப்படித்தான் சமையலையும் பழக்கி விட வேண்டும். இதனால் கணவருக்கும் மனைவிக்கு சிறிது ஓய்வு அளித்த திருப்தி மற்றும் அவள் உணர்வை புரிந்து கொண்ட மகிழ்ச்சி கிடைக்கும்.
சிறப்புக்கு முதலிடம்: சில குடும்பங்களில் கணவர் வெளியூர் பயணம் கூட்டிச் செல்வது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது, பீஸ் கட்டுவது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். மனைவி மற்ற வீட்டு நிர்வாகங்களை அழகாக கவனித்து வருவார். அப்படிச் செய்யும் பொழுது கணவர் செய்யும் பணிகளை, அதை விட இன்னும் சிறப்பாக மனைவி செய்தால் அந்த வேலையை அவரிடம் ஒப்படைத்து விடலாம். மனைவி செய்யும் வேலையை கணவர் இன்னும் சிறப்பாகச் செய்கிறார் என்றால் சில நாட்களுக்கு அதை இவரிடம் ஒப்படைத்து விடலாம். இதனால் ‘நீயா நானா’ என்ற ஈகோ விடுபட்டு விடும். இருவரும் வேலையை சமமாகப் பிரித்துக் கொண்ட திருப்தி கிடைக்கும்.
பிறர் பேச்சைத் தள்ளுங்கள்: குடும்பம் மிகவும் ஒற்றுமையாக, அனுசரணையாக, நிதானமாக சென்று கொண்டிருக்கிறது என்றால் சிலருக்கு பொறாமையாகக் கூட இருக்கும். ஆதலால், ‘அவர் உங்களை இப்படிச் சொன்னார், இவர் உங்களை அப்படிச் சொன்னார்’ என்று யாராவது ஒருவர் மாற்றி ஒருவருக்கு குடும்பத்திலேயே உபதேசம் செய்ய ஆரம்பிப்பவர்களும் உண்டு. அவர்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு அவர்களின் பேச்சை விலக்கி விடுவது நல்லது. மேலும், என் குடும்பத்தார் ஒவ்வொருவரை பற்றியும் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும் என்று ஆணித்தரமாக கூறி விட்டால் கதம்பமான குடும்பத்தில் எப்பொழுதும் ஒற்றுமை நிலவும். இதைப் பார்த்துப் பேச வந்தவர்களும் வாய் பொத்தி விலகி விடுவார்கள்.
வித்தியாசமான சிந்தனை: கூட்டுக் குடும்பத்தில் பலர் இருக்கிறார்கள் என்றால் பலரும் பலவிதமான சிந்தனைகளை வைத்திருப்பார்கள். வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கலவையான செய்திகள் கிடைக்கும். அறிவு வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம். எல்லோரும் ஒரேமாதிரி சிந்தித்தால் அது அறிவு வளர்ச்சிக்கு வித்திடாது. நாம் இருப்பது சாமியார் மடம் அல்ல. பிறகு ஏன் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று சில குடும்பங்களில் குழந்தைகள் கேட்பதைப் பார்க்கலாம். இங்கு நான்கு பேரும் நான்கு விதமான கருத்துக்கள் சொல்லும் பொழுதுதான் ஒவ்வொரு விஷயத்திலும் இவ்வளவு இருக்கிறதா என்று மேலும் சிந்திக்க முடியும். அதனால் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அறிவுபூர்வமாக செயல்படலாம். இது குடும்பம் ஒரு கதம்பமாக இருப்பதைத் தெளிவு படுத்திக் காட்டும்.