

நம்மில் அநேகரது வீடுகளிலும் காலை நேரப் பரபரப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடுகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெற்றோர், 7 முதல் 10 வயதிற்குள் இருக்கும் தங்கள் குழந்தைகளை காலை நேர வேலைகளில் பங்கேற்கக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகள் மனதில் சுதந்திர உணர்வையும் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அறிந்துகொள்ள உதவும். காலை நேரப் பரபரப்பில் அவர்கள் செய்யக்கூடிய 8 வகையான வேலைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. படுக்கை விரிப்பை சரி செய்தல்: இது ஒரு சிறிய வேலைதான் என்றாலும், காலையில் எழுந்தவுடன் தான் பயன்படுத்திய படுக்கையை சுருக்கமின்றி சரி பண்ணி வைத்துவிட்டு வரும்போது குழந்தை மனதில் கடமையை சரிவர செய்து முடித்த திருப்தியும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
2. பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையில் புத்தகங்களை சரிபார்த்து எடுத்து வைத்தல்: இந்த வேலையை குழந்தையிடம் ஒப்படைத்தால் அது திட்டமிட்டு பொறுப்புகளை நிறைவேற்றும் பண்பை குழந்தைக்குக் கற்றுத்தரும்.
3. காலை உணவுக்காக டைனிங் டேபிளை தயார் பண்ணுதல்: டைனிங் டேபிளில் பிளேட்கள் மற்றும் வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்து வைப்பது போன்ற வேலைகளை குழந்தையை செய்யச் சொல்லலாம். இது டீம் ஒர்க்கின் மதிப்பை உணரச் செய்யும். ஒவ்வொரு நபரும் வேலையில் தங்கள் பங்களிப்பை செலுத்துவதைப் பார்க்கும் குழந்தை தானும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும்.
4. சாப்பிட்ட இடத்தை சுத்தப்படுத்துதல்: சாப்பிட்டு முடித்ததும் சாப்பிட்ட தட்டுகளை கழுவுமிடத்தில் கொண்டு வைப்பது, டேபிளில் சிதறிய உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தி, ஈரத் துணியால் துடைப்பது போன்ற வேலைகளை குழந்தை செய்யும்போது, ஆரம்பித்த வேலையை கச்சிதமாக முடிக்கவும் அது கற்றுக்கொள்ளும்.
5. செல்லப்பிராணிக்கு உணவு வைப்பது: வீட்டில் செல்லப்பிராணி இருக்குமானால், அதற்கு உணவு வைக்க குழந்தையிடம் கூறலாம். இது குழந்தை மனதில் பச்சாதாபம் மற்றும் இரக்க குணத்தை உண்டுபண்ண உதவும். தொடர்ந்து இதை செய்யும்போது குழந்தையின் பொறுப்புணர்வு கூடும்.
6. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல்: வீட்டில் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் செய்வது, குழந்தைக்கு தோட்டக்கலை பற்றிய அடிப்படை அறிவு, கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி போன்ற நற்குணங்கள் பெற உதவும். செடிகளிலிருந்து பெறப்படும் பூ, காய் போன்றவற்றைப் பார்க்கும்போது இயற்கை தரும் கொடையின் மதிப்பையும் குழந்தையால் உணர முடியும்.
7. உடன் பிறந்த தம்பி, தங்கையுடன் நேரம் செலவழித்தல்: கூடப் பிறந்த இளைய தங்கை அல்லது தம்பியுடன் விளையாடுதல் பொறுப்புணர்வு மற்றும் பொறுமையை கற்றுத் தரும். பிற்காலத்தில் பிறரைப் புரிந்து கொள்ளவும் அக்கறையுடன் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் துணிவைப் பெறவும் இது உதவும்.
8. தினசரி வேலைகளைத் திட்டமிட்டு அட்டவணைப்படுத்திக் கொள்ளுதல்: குழந்தை தினசரி தான் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டால், அதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கி, விழிப்புணர்வுடன் அனைத்தையும் செய்து முடிக்க முடியும். அடுத்து என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளும் குழந்தை, எந்தவித கவலையுமின்றி முன்னுரிமை தர வேண்டிய வேலைகளை முதலில் செய்து முடித்து நல்லொழுக்கத்துடன் வாழப் பழகிக்கொள்ளும்.
தற்காலத்தில் சம்பாதிப்பது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என அனைத்திலும் ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நியதி நிலவுவதால், சிறு வயதிலேயே எல்லா வேலைகளையும் எல்லோரும் கற்றுக்கொள்ளுதல் இறுதிவரை வாழ்க்கை சிறக்க உதவும்.