
ஒரு பையன் எப்பொழுதும் எதையும் பேசவே மாட்டான். யாருடனும் சேர்ந்து விளையாட மாட்டான். தனிமையாகவே இருப்பான். ஆதலால், அவனை வீட்டில் எல்லோரும் கோமாளி என்று கூறி வந்தார்கள். நாளடைவில் அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு பேசி சிரிப்பது, விளையாடுவது, அவர்களைத் தூக்கிக் கொஞ்சுவது, அவர்களுடனே பொழுது போக்குவது என்று இருந்து, பிறகு அவன் மனநிலை மாறி இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவனை வித்தியாசமாக பார்த்தவர்கள் அனைவரும் அவனுடைய பழக்க வழக்கங்களைப் பார்த்து ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அந்தக் குழந்தையை கொஞ்சி விளையாடி அவன் கூடவே பாசமாக இருக்கும் அளவிற்கு செய்து விடுவான். அதுதான் அவனிடம் உள்ள மிகப்பெரிய நல்ல பண்பு.
பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது பிள்ளைகளின் விளையாட்டை நீங்கள் விரும்புவதை பிள்ளைக்கு உணர்த்த வேண்டும். அதை பிள்ளை அறிய வேண்டும். சில பிள்ளைகள் நிறைய பேருடன் சேர்ந்து விளையாடும்போது, சில பிள்ளைகள் தனித்து விளையாடுவதிலும் சந்தோஷப்படுவதுண்டு.
சில பிள்ளைகள் கீறி, கிறுக்கி விளையாடுவதும், சில பிள்ளைகள் ஓவியங்களை வரைவதிலும் சந்தோஷப்படுவார்கள். விருப்பு, வெறுப்புக்கள் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஒருவரின் விருப்பம் மற்றவருக்குப் பிடிக்காமல் அல்லது ஆர்வம் இல்லாமல் காணப்படுவார்கள். இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாக இருப்பதே.
குழந்தைகள் ஒவ்வொருவரது வித்தியாசங்களையும், தனித்துவங்களையும் ஏற்றுக் கொண்டு பாராட்டுங்கள். பாரபட்சம் பார்க்காதீர்கள். பிறரது தனித்துவங்களை பாராட்டுவதன் மூலம் நீங்கள் உயர்கிறீர்கள். அது மாத்திரமல்ல, உங்களை அறியாமல் பிறரையும் நேசிக்கும் சக்தி உங்களுக்குள் அதிகரிக்கிறது. உங்களுக்குள் அமைதி ஏற்படுவதற்கும் உலகத்தை அமைதியாகப் பார்ப்பதற்கும் வழி விடுகிறது.
குழந்தை தினமும் உங்களுடைய செயல்களையும், வீட்டில் நிகழும் நிகழ்வுகளையும் அவதானிக்கிறது. குழந்தைகளை பயம் இன்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ அல்லது பேசவோ அனுமதியுங்கள். அவர்களது தனித்துவம் வளரும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், வித்தியாசமானவர்கள் என்பதை குழந்தை வளர வளர அறிந்து கொள்ளும். சின்ன விஷயமானாலும் சரி, மிக எளிமையானதாக இருந்தாலும் சரி, குழந்தைகளை இது உன் வயதுக்கு உகந்தது அல்ல என்று தடுக்காதீர்கள். தன்னைப் பற்றிய எண்ணத்தில், தன்னைப் பற்றிய உணர்வு மிக முக்கியமானது. ‘சின்ன விஷயமானாலும் அதை நேசித்துச் செய்யுங்கள்’ என்கிறார் அன்னை தெரேசா.
பூரண சரி என்று ஒன்றும் இல்லை. எனவே, எந்த பெற்றோரோ எவருமோ அல்லது எந்த செயல்களோ பர்பெக்ட்டாக இருக்க முடியாது. ஆனால், பிள்ளைகளை பாராட்டவோ, அன்பு காட்டவோ, அரவணைக்கவும், அவர்களை நம்பவும் முடியும். அதைத் தொடர்ந்து செய்யுங்கள். குழந்தைகளின் செயல்களை ரசியுங்கள்.
இதனால் எந்த சூழ்நிலையில் வளரும் குழந்தையும் நல்ல குழந்தையாக வளர முடியும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்!