
குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஆனால், சண்டைக்குப் பிறகு எப்படி சமாதானமாவது என்பதில்தான் பலரும் கோட்டை விடுகிறோம். சண்டைக்குப் பிறகு எப்படி சமாதானம் ஆவது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
அமைதியாக இருங்கள்: கோபமாக இருக்கும்பொழுது சமாதானம் செய்ய மனம் வராது. எனவே, முதலில் நம் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அதற்கு இருவருமே அமைதியாக இருப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது அவசியம். அப்பொழுதுதான் கோபம் தணிந்து பிரச்னையை நிதானமாக யோசித்து யார் மீது தவறு, ஏன் இப்படி நடந்து கொண்டோம், இப்படிப் பேசி இருக்க வேண்டாமே, இப்பொழுது என்ன செய்யலாம் என்று நிதானமாக யோசிக்க முடியும்.
மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள்: தவறு யார் செய்திருந்தாலும் ஒருவருக்கொருவர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது உறவை நன்கு பலப்படுத்த உதவும். எனவே, மன்னிப்பு கேட்பதற்கு முன்வாருங்கள். ‘ஏதோ கோபத்தில் அப்படிப் பேசி விட்டேன், அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று வெறும் மேல் பேச்சாக மன்னிப்பு இல்லாமல் அர்த்தம் பொதிந்த உண்மையான மன்னிப்புகளே அன்பையும், உறவையும் காப்பாற்றும். சிலருக்கு ஒரு தடவை மன்னித்துவிடு என்று சொன்னாலே சமாதானம் ஆகி விடுவார்கள். இன்னும் சிலரோ எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்ன செய்தால் சரியாகும் என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுங்கள்: அமைதியாக யோசிக்கும்போதுதான் எதனால் இந்த வாக்குவாதம், சண்டை வந்தது என்பதை யோசித்து இருவரும் வெளிப்படையாகப் பேச நேரம் ஒதுக்க முடியும். இது ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும். மேலும், சண்டை நீடிக்காமல் இருப்பதற்கும் உதவும். எனவே, ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது மிகவும் அவசியம். யார் முதலில் பேசுவது என்று ஈகோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருவரில் யார் வேண்டுமானாலும் மனம் திறந்து பேசலாம். அப்பொழுதுதான் மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
சமாதானம் செய்யுங்கள்: இனிமேல் இதுபோன்ற தேவையற்ற சண்டைகள் வராமல் இருப்பதற்கு இருவரும் மனம் விட்டுப் பேசி சமாதானம் அடைவதுடன், ஒரு முடிவுக்கும் வர வேண்டும். அதாவது, சண்டைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை அடுத்த முறை வராமல் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சமாதானம் என்பது ஒரு உறவினுடைய முக்கியமான பகுதியாகும். யார் மீது தவறு இருந்தாலும் கோபத்தை மறந்து சமாதானமாகப் போவது உறவை நீடிக்க வைக்கும். முதலில் யார் பேசுவதென்று காத்திருக்க வேண்டாம். உங்களுக்குக் கோபம் போய்விட்டால் உடனே சமாதானமாகப் பேசிவிடலாம். காலம் அதிகரிக்க அதிகரிக்க சமாதானம் ஆவதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீண்டும் சண்டை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்: பெரும்பாலும் சண்டைகள் வருவது ஈகோ காரணமாகத்தான். எனவே, ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வதும், தான் சொல்வதுதான் சரி என்று வாதிடுவதையும் தவிர்க்கலாம். சண்டையை மறந்து நேர்மறையான எண்ணங்களுடன் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யலாம். இருவருமே ஒருவருக்கொருவர் எதிரியல்ல என்பதை உணர்ந்து, விட்டுக்கொடுத்து வாழ குடும்பத்தில் என்றும் அமைதியும் சந்தோஷமும் நிலைத்து நிற்கும்.