
மனிதனிடம் சில நல்ல குணங்கள் அமைந்திருப்பது உண்டு. அதேநேரம், கண்மூடித்தனமான கோபங்களூம் குடியேறி இருப்பதும் நடைமுறை. சில சமயங்களில் நமது பழக்க வழக்கங்களாலும், அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் செயல்பாடுகளைப் பாா்த்து, அதை உள்வாங்கிக்கொள்வதாலும், பொியோா் சொல்லும் சில நல்ல அறிவுரைகளாலும், தன்னுடைய கோப தாபங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு வாழும் தன்மையும் உண்டு. ஆனால், சில நேரங்களில் கோபமானது சிலரது கூடவே பிறந்த ஒன்றாகி விடுகிறது.
அது அவர்களிடம் நிரந்தரமாகவே வசிக்கும். அதோடல்லாமல், அவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும் என்பதில் எந்த ஐயப்பாடு கிடையாது. கோபம் எனும் அரக்கன் ஒரு மனிதனிடம் குடியேறிவிட்டால் அது அவரை விட்டு விலகுவது அவ்வளவு சுலபமல்ல. இதைத்தான், ‘ஆத்திரம் தன்னை அழித்திடும்போது அறிவுக்கு வேலை கொடு’ என கவிஞர் தனது பாடலில் குறிப்பிட்டிருப்பாா்.
கோபம் வரும் வேளையில் நமது வாா்த்தைகளும் நமக்குக் கட்டுப்படாது. நாம் கோபத்தில் பிறா் சொல் கேட்காதபோது நமது சிந்தனைகளுக்கு கோபம் கட்டுப்படாது. இது உளவியல் ரீதியான உண்மை. கோபம் வரும்போது நாம் நிதானம் தவறி கொட்டுகின்ற வாா்த்தைகளை அள்ள முடியாது. சில்லறையை சிதற விட்டால் திரட்டி அள்ளி விடலாம். அதேபோல, சிந்தனையை சிதற விட்டால் தன்னைத்தானே சாிசெய்து, சாியான தெளிவுக்கு ஆளாகி விடலாம். ஆனால், ஆத்திரமடைந்து கண்மூடித்தனமான கோபத்தில் அள்ளித் தெளிக்கும் வாா்த்தைகளுக்கு அளவுகோலே கிடையாது. அதை அள்ளவும் முடியாது, நமக்கு நல்லது என மெல்லவும் இயலாது.
பொதுவாகவே, ‘கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்’ என்பாா்கள். அது நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நமது கண்மூடித்தனமான கோபத்தால் நாம் நமக்கான மரியாதை, உறவு மற்றும் நட்புகளில் உள்ள ஆழமான பாசம், நேசம், பற்றுதல் இவற்றை இழந்து விடுகிறோம். அதேபோல, தாறுமாறாகக் கோபப்பட்டு விடுகிறோம். அப்போது எதிா் தரப்பினரைப் பாா்த்து அவதூறு பேசியும் விடுவோம். அது தவறு என்று தொிந்து பின்னா் வருத்தப்படுவதால் என்ன பிரயோஜனம்?
அதேபோல, நமது கோபத்தை நியாயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை விட, செய்த தவறுக்கு நாமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதே நல்லது. இந்த நிலையில், கோபம் வரும்போது நமது மனைவி, குழந்தைகளை நாம் நினைத்துப் பாா்க்க வேண்டும். கோபம் கொண்டவன் வீட்டில் யாரும் நட்பாய் இருப்பதுகூட கடினமான ஒன்றே. ஏன் தெய்வ அருள் மற்றும் மகாலட்சுமி வாசம்கூட இருக்காது.
பொதுவாக, கோபம் இருக்கலாம். அதுவே நிரந்தரமானதாக அமையக்கூடாது. கோப்படும் நபரின் தேஜஸ், முக வசீகரம் கூடநாளடைவில் குறையும். எனவே, ஆத்திரமும், கோபமும் வரும்போது இறைவனின் நாமாவளியை சொல்லுங்கள். நல்ல சிந்தனையில் மனதை செலுத்துங்கள். அதுவே உங்கள் குடும்பத்திற்கும் உங்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆத்திரம் தணியுங்கள், கோப தாபம் தவிருங்கள். அதுவே நல்லது, அதுவே தரமானது, அதுவே நிரந்தரமானதும் கூட!