அன்பு என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய தனித்துவமான ஒரு பண்பு. ஆனால், நாம் வாழும் குடும்ப கட்டமைப்பில் அதனை யாருக்கு கொடுக்கிறோம், யாருக்கு கொடுக்க மறுக்கிறோம் என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. அதுவும் கணவன் மனைவியாக வாழும் ஒரு குடும்பத்தில் பெரும்பாலும் கணவன் கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தும் நபர் பல நேரங்களில் மனைவியாக தான் இருக்கிறார். சற்று நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கான மைய புள்ளியாக இருப்பதே குடும்பம் என்ற கட்டமைப்பு தான். இத்தகைய குடும்ப அமைப்பை மையமாக வைத்து நம்முடைய வாழ்க்கை சுழல்வதினாலோ என்னவோ பெரும்பாலும் நாம் அதில் இருக்கும் உறுப்பினர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இதனால் பல வேலை பல நேரங்களில் மன உளைச்சலுக்கு உள்ளாகி வாழ்வின் மீது ஒரு பெரும் பிடிப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு நாள் நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவர் கடவுளை காண்பதற்காக காட்டுப் பகுதியில் நெடுதூரம் நடந்து சென்றார். அங்கு ஓரிடத்தில் ஒரு கோவில் இருப்பதை பார்த்து அதன் அருகிலேயே அமர்ந்து விட்டார். சுற்றிலும் பார்த்தபோது அங்கே மற்றொரு நபரும் அமர்ந்து இருந்தார். கடவுளை தரிசிப்பதற்காக போன முதலாம் நபர் மனம் உருகி வேண்டிக் கொண்ட போது கடவுள் அவர் முன் தோன்றினார். கடவுளை பார்த்தவுடன் மற்றொருவரும் வந்து உடன் இணைந்து கொண்டார். கடவுள் அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே இருவரும் எங்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் வேண்டும் என்று கூறினர். அப்படியே ஆகட்டும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை, நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தினருடன் சென்றுவாழுங்கள். உங்களின் வாழ்க்கை முறையை பார்த்து நான் உங்களுக்கு வேண்டியதை கொடுப்பேன் என்று கூறி கடவுள் மறைந்து விட்டார்.
இருவரும் மீண்டும் வந்து தமது குடும்பத்தினருடன் வாழ ஆரம்பித்தனர். முதல் நபர் எப்பொழுதும் கடவுளை நினைத்து ஆழ்ந்த தியானங்களை செய்வதும் கடவுளை பூஜிப்பதுமாகவே தனது பெரும்பாலான நேரங்களை கழித்து வந்தார். இரண்டாம் நபரோ தனது குடும்பத்து உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் பொறுமையாக கவனித்து கிடைக்கும் நேரத்தில் கடவுளை மனம் உருக வேண்டிக் கொண்டார். சிறிது காலத்தில் இரண்டாவது நபர் வாழ்வில் பெரும் செல்வந்தனாக மாறிவிட்டார். ஆனால், முதலாம் நபரோ தன்னிடம் இருந்த கொஞ்ச பட்ச செல்வத்தையும் தொலைத்து நிம்மதி இழந்து இருப்பதை விட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இப்படியான நேரத்தில் கடவுள் மீண்டும் ஒரு முறை முதலாம் நபர் முன் தோன்றினார். எப்படி இருக்கிறாய் என்று கேட்டார், நான் நன்றாக இல்லை உங்களுக்கு தான் எதையும் சரியாக கவனிக்கும் ஆற்றல் இல்லை, அதனால் தான் என்னுடைய நிலை இப்படி இருக்கிறது என்று கூறி மிகவும் வருத்தப்பட்டு கொண்டார். ஏன் அப்படி கூறுகிறாய்? என்று கடவுள் கேட்கவே நான் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை தங்களுக்கு இறை பணி செய்தே கழித்து வருகிறேன். ஆனால், நீங்களோ என்னுடைய தேவைகளை நிறைவேற்றவே இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார். அதற்கு கடவுளோ, உன் பக்தியை கண்டு நான் மனம் மகிழ்ந்தேன் அது உண்மைதான். ஆனால், உன்னுடைய செயல்பாடுகளால் நான் மிகவும் மனம் நொந்து விட்டேன். அதனால் நீ கேட்ட எத்தகைய வரத்தையும் என்னால் கொடுக்க முடியவில்லை என்று கூறினார்.
நான் என்ன செய்தேன் என்று அந்த நபர் கேட்கவோ என்னிடம் நீ காட்டிய அன்பில் ஒரு பகுதியை கூட உன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் காட்டவில்லை. உன்னுடைய வருத்தம், துக்கம், பாரம், வலிகள் அனைத்தையும் அவர்களிடமே நீ காட்டினாய். உண்மையான கடவுள் பக்தி என்பது உன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு செலுத்துவது தானே! எனவே தான் நீ எனக்கு எவ்வளவு பூஜைகள் செய்தும் நீ கேட்டதை நான் கொடுக்கவில்லை என்று கூறினார்.
அப்படியானால் இரண்டாம் நபருக்கு ஏன் அவ்வளவு செல்வங்களை கொடுத்தாய் என்றார் முதலாம் நபர். இரண்டாம் நபர் எனக்கு செலவழித்த நேரங்களை விட அவரது குடும்பத்தினருக்கு செலவழித்த நேரமே அதிகம். அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் நான் உண்மையான அன்பையும் பாசத்தையும் கண்டேன். அதனால்தான் ஏற்கனவே உயர்வோடு வாழ்ந்த அவரது செல்வ வளத்தையும் ஆரோக்கியத்தையும் நான் மென்மேலும் பெருக்கினேன் என்று கூறினார் கடவுள். உண்மையான கடவுள் பக்தி எது? என்பதை அறிந்து கொண்ட முதலாம் நபர் மனம் திருந்தி மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தார்.
இன்று நம்மில் பலரும் கூட இத்தகைய செயல்பாடுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அதிகமாக அன்பும் அக்கறையும் செலுத்த வேண்டிய இடம் நம்முடைய குடும்பம் தான். எப்படி நாம் வெளியிலிருந்து வீட்டிற்குள் செல்லும்போது கால்களை கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே செல்கிறோமோ, அதைப்போலவே நம்முடைய மனதில் உள்ள அழுக்குகளையும், வலிகளையும், வெறுப்புகளையும் தண்ணீரோடு கரைத்து விட்டு உள்ளே சென்றோமானால் குடும்பம் எனும் நந்தவனம் தினமும் புத்தம் புதிதாய் பூத்துக் குலுங்கும்!