துரித உணவு கலாச்சாரமும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்!

துரித உணவு கலாச்சாரமும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்!
Published on

வீட்டுச் சமையலில் நாட்டமின்மை:

முந்தைய தலைமுறை பெண்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று சமையலறையிலேயே நேரத்தை செலவழித்தனர். தற்போது தனிக்குடித்தனம், மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சமைக்க போதிய நேரம் கிடைக்காதது, கிடைத்தாலும் பாரம்பரிய சமையல் உணவுகளை செய்வதில் விருப்பமின்மை, குடும்பத்தில் மிகக் குறைவான உறுப்பினர்கள் இருப்பதால் ரெடிமேடு சிற்றுண்டி வகைகளை வாங்கி உபயோகப்படுத்துதல் போன்றவையே காரணங்கள். மேலும் சமையலில் அதிக நேரம் செலவழிப்பது, அதற்கான பொருள்களை வாங்க வெளியே செல்லுதல், சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்தல், என்ற மெனக்கெடல்களை  அவர்கள் விரும்புவதில்லை. முன்பு மிளகாய்ப்பொடி மசாலாப் பொடி அரைக்கத் தேவையான பொருட்களை வாங்கி பதமாக வெயிலில் காய வைத்து வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து ஒரு வருடம் வரை வைத்திருப்பார்கள் பெரியவர்கள். இப்போது அவைகள் பிராண்டட் பாக்கெட்டுகளில் பல்பொருள் அங்காடிகள் முதற்கொண்டு அருகில் இருக்கும் பெட்டிக்கடைகள் வரை கிடைக்கின்றன.

விளம்பரத்தின் பங்கு:

டி. வி. விளம்பரத்தில் காட்டப்படும் பல வித வண்ண துரித உணவு வகைகள் குழந்தைகளை மிகவும் ஈர்த்து அவற்றை விரும்பி உண்ண ஆரம்பித்து கிட்டத்தட்ட  அதற்கு அடிமையாகி விட்டனர். பல பெரியவர்களும் கூடத்தான். அவர்கள் விரும்பி உண்ணும் நூடில்ஸ் வகைகளில் கலக்கப்படும் நிறக்கலவைகளும், அஜினமேட் போன்ற சுவையூட்டிகளும், மீண்டும் மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. நாளிதழ்களில் வார இறுதி நாட்களில் இரண்டு கிலோ பிரியாணி வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற விளம்பரங்கள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. மக்களும் இலவசத்திற்கு ஆசைப்பட்டு அடிக்கடி, ஏன் வாரவாரம் கூட பக்கெட் பிரியாணி(?!) சாப்பிடுகின்றனர். நம் முன்னோர்கள் பறவைகளைப்போல அதிகாலையில் விழித்து, அவை கூடடையும் அந்தி மாலை நேரத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு உறங்கச்செல்லும் வழக்கம் வைத்திருந்தனர். தற்போது நிறைய பெருநகரங்களில் விடிய விடிய பிரியாணி கடைகள் திறந்திருப்பதும், அங்கே வாலிபர்கள் கூட்டம் அலை மோதுவதும் கண்கூடு. அவற்றைக் காணும்போது வேதனையே எழுகிறது.

துரித உணவு உண்பதால் ஏற்படும் நோய்கள்:

சிக்கு உண்பது போய் ருசிக்கும், ஆசைக்கும் உண்ணும் காலமாகி விட்டது.

மாயாபஜார் படத்து ரங்காராவ் போல இஷ்டப்பட்டதை நினைத்த நேரத்தில் உண்கிறோம். அடிக்கடி பொரித்த இறைச்சி வகைகள், ஃபிரன்ச் ஃபிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து உண்கிறோம். துரித உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், கெட்ட கொழுப்பு, அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் பழைய கெட்டுப்போன இறைச்சி வகைகளையும் உணவகங்கள் விற்பனை செய்யத் தவறுவதில்லை.

இவற்றை உண்பதால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இருதயநோய், இளவயதில் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை தாக்குகின்றன. ஏழு எட்டு வயது சிறுவர் சிறுமிகள் கூட அதீத உடல் பருமனோடு இருக்கின்றனர். ஒன்பது பத்து வயதிலேயே பூப்படைதல், பி.ஸி.ஓ டி, கருத்தரித்தலில் சிக்கல்கள் என நீள்கிறது பட்டியல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com