பண்டிகை நாளில் சமையலறை பதற்றமா? நேரத்தையும் மிச்சப்படுத்தி அசத்தலான சமையல் செய்ய எளிய டிப்ஸ்!

கிருஷ்ண ஜெயந்தி முதல் தீபாவளி வரை சமையல் வேலையை பாதியாகக் குறைக்கும் வேலை எளிதாக்கும் ரகசியங்கள்!
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்Gemini image
Updated on

செப்டம்பர் மாதம் வந்துவிட்டது. இனி தொடர்ச்சியாக கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி என பண்டிகைகள் வரிசை கட்டி வர ஆரம்பித்துவிடும். அதனால் பண்டிகை அன்று வீட்டில் சமையல் வேலைகள் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் பண்டிகை கால சமையலை பதட்டமில்லாமல் விரைந்து முடிக்கும் யோசனைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

முன்கூட்டியே திட்டமிடுதல் (Menu Planning)

ஒவ்வொரு பண்டிகைக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே என்னென்ன உணவுகள் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கு தேவையான மளிகை பொருட்கள், நெய், எண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் பதட்டம் இல்லாமல் சமைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

காய்கறி தயாரிப்பு (Vegetable Preparation)

பண்டிகை தினத்தில் சமைக்க கூடிய சாம்பாருக்கும், கூட்டு பொரியலுக்கும் தேவையான காய்கறிகளை முன் தினம் இரவே கழுவி நறுக்கி காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சமைக்கலாம். மேலும் தேங்காயையும் துருவி ஃப்ரிட்ஜில் வைப்பதோடு, இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைத்துக்கொள்வது சமையலை எளிதாக்கி சமையல் செய்யும் நேரத்தை குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
சமையல் டிப்ஸ்

மசாலா மற்றும் மாவுகள் (Masalas & Batters)

சாம்பார் பொடி, ரசப்பொடி, பாயாசம் மிக்ஸ் மற்றும் பிரியாணி மசாலா போன்றவற்றை பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வறுத்து அரைத்து தயாராக வைத்தால் பண்டிகை நாள் சமையல் வேலை எளிதாக இருக்கும். பலகார வகைகளான முறுக்கு, அதிரசத்திற்கு தேவையான அரிசி மாவு, உளுந்து மாவை 2 நாட்களுக்கு முன்பு தயாரித்தால் பக்குவமான மாவின் காரணமாக பலகாரங்களும் சுவையாக இருக்கும். பண்டிகை நேர பதற்றத்தையும் தவிர்க்கலாம்.

சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்Gemini image

பண்டிகை நாளில் செய்யவேண்டியது

ஒரு அடுப்பில் சாதத்தை வைத்து மற்றொரு அடுப்பில் பருப்பை வேகவைக்கும்போது அதனுடன் காய் கறிகளையும் சேர்த்து குக்கரில் வேகவைத்தால் காய்கறிகளை தனியாக வேகவைக்கும் நேரம் மிச்சப்படும். குழம்பு, குருமா தயாரிக்கும்போது சாதாரண தண்ணீருக்கு பதில் சுடு தண்ணீர் ஊற்றி சமைத்தால் சீக்கிரம் கொதித்து விரைவில் சமையலை முடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பாத்திரம் கழுவும் நேரம் பாதியாக குறைய வேண்டுமா? இதோ எளிய இரட்டை வாளி முறை!
சமையல் டிப்ஸ்

பிற உதவிகள்

சமையல் முடிக்கும் வரை பாத்திரங்களை சிங்கில் அப்படியே போட்டு வைக்காமல் அவ்வப்போது கழுவுவதன் மூலம் வேலை சுலபமாக முடியும். சமையல் மேடையில் சிதறும் குப்பைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவதோடு, நவீன உபகரணங்களான மிக்ஸி, குக்கர் காய்கறி நறுக்கி போன்றவற்றை சமயோசிதமாக சரியான முறையில் பயன்படுத்தினால் சமையல் வேலை இது ஒரு வேலையா? என்று கூறும் அளவிற்கு பண்டிகை காலங்களில் எளிதில் முடித்து சிறப்பாக பண்டிகையை கொண்டாடலாம்.

பண்டிகைகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவதற்கு மேற்கூறிய எளிய வழிமுறைகளை கையாண்டால் பண்டிகையன்று ஏற்படும் பதட்டத்தை தவிர்ப்பதோடு சமையலை சுவையாகவும் விரைவாகவும் செய்து முடித்து கடவுளை மனதார வழிபடலாம்.

பண்டிகை நாட்களில் மணி கணக்கில் சமையலறையிலேயே முடங்காமல், முன்கூட்டியே காய்கறிகள் நறுக்குவது, மசாலா பொடிகள் அரைத்து வைப்பது போன்ற எளிய திட்டமிடல் சமையல் டிப்ஸ் மூலம் பதற்றமின்றி ருசியாகச் சமைத்து பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்.

logo
Kalki Online
kalkionline.com