எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் நண்பர்கள், சொந்தங்கள், நமக்கு நெருக்கமானவர்கள், வேண்டியவர்கள் என்று ஒன்றாகக் கூடி அதைக் கொண்டாடுவதுதான் சந்தோஷத்தை பல மடங்காகக் கூட்டும்!
எல்லோரும் ஒன்றாக சேர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால்தான் இப்படிப்பட்ட சந்தோஷம் சாத்தியமாகும். ஒரு அபார்ட்மெண்ட்டையே எடுத்துக்கொண்டால் சிலர் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருப்பார்கள். சுலபத்தில் யாருடனும் மிங்கிள் ஆக மாட்டார்கள். ஒரு ஒட்டுதல் இல்லாமலேயே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலருக்கு தனது குடும்பத்து உறவுகள் மீதோ, சுற்றத்தார் மீதோ அட்டாச்மெண்டே இருக்காது. 'ச்சே, யாரும் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க'ன்னு ஒதுங்கி ஒதுங்கிப் போவாங்க. இது யாருடைய தப்பு என்று அவர்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் நினைப்பது போன்று அடுத்தவர்கள் மீது ஏதாவது தவறு இருந்தாலும் அதை ஏன் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் மனசுக்குள்ளயே வைத்துக்கொண்டு விரோதத்தை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? இப்படி நாம் மற்றவர்களுடன் அநாவசியமாக ஏற்படுத்திக் கொண்ட இடைவெளிகளை பண்டிகைகள்தான் குறைக்கிறது.
குடும்பத்துக்குள்ளேயும், சுற்றத்திலேயும் தெரிஞ்சோ தெரியாமலோ ஏற்படும் மனஸ்தாபங்களை கொண்டாட்டங்கள் சரி செய்து விடும். மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் ஏதாவது பிரச்னையால் பிரிந்துபோய் சிறிது நாள் கழித்து பண்டிகையை காரணமாக வைத்து சந்தித்தார்கள் என்றால், ஒருவர் முகத்தை ஒருவர் பாத்தாலே போதும், உருகிடுவார்கள்! சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வார்கள். அந்த உணர்வை, அந்த சந்தோஷத்தை அனுபவித்தால்தான் புரியும். வார்த்தைகளில் இதை ஓரளவுக்குதான் சொல்ல முடியும்! இதுபோன்று பண்டிகைகள்தான் அதுக்கான நேரம்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி என்ன வாங்குவது என்று பிளான் செய்து, பட்ஜெட் போட்டு ஒன்றாக கடைக்குப் போய் வாங்குவதில் ஆரம்பிக்கும் சந்தோஷம் பண்டிகை அல்லது விசேஷம் முடியும் வரை, ஏன் முடிந்த பின்னும் அதனால் ஏற்படற திருப்தியிலும் இருக்கும்.
ஒரு விசேஷத்தின்போது நண்பர்களை சந்திப்பது, புதுப்படத்தை சேர்ந்து அனைவரும் பார்ப்பது என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அதைக் கொண்டாடுவோம். ஆனால், சிலர் டி.வி. முன்பு உட்கார்ந்து விடுவார்கள். காலையில் ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் டி.வி.யில் உட்கார்ந்து விட்டால் அவர்களால் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவே முடியாது. டி.வி. பார்க்கவே கூடாது என்று இல்லே. அது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இருக்க வேண்டுமே தவிர, அதுவே முழுக்க முழுக்க நம்மை வசப்படுத்தி வைத்துவிடக் கூடாது. அடைத்த கதவுக்குள்ளேயே உட்காராமல் அன்று மட்டுமாவது வெளியே வர வேண்டும். வெளியில் மற்றவர்களோடு சேர்ந்து அவர்களையும் சந்தோஷப்படுத்தி கொண்டாடுவதில் எத்தனை சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கிறது என்பதை உணர வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணி செய்து அன்போட நமக்குக் கொடுத்து அனுப்புவார்கள். அதுபோல, கிறிஸ்துமஸ் அன்று கேக் வரும். தீபாவளிக்கு நாமும் அவர்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடுவது தனிப்பட்ட ஒரு சந்தோஷம் மட்டுமில்லை. இந்த சமூகத்தோட சந்தோஷத்துக்கு நாம கொடுக்கும் பங்களிப்பும்கூட. ஆகவே, பண்டிகை, விசேஷங்களில் சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்! ஒரு சொசைட்டியே சேர்ந்து ஒன்றாக ஒரு விஷயத்தை செய்யும்போது நம்முடைய பங்களிப்பும் அதில் கலந்திருக்கு.
இனிவரும் காலங்களிலாவது பண்டிகை நாட்களில் பிறருடன் பழகி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவோம்.