உங்கள் இதயம் சீராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு சமநிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலங்களில் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான நோய்கள் அதிகளவில் தோன்றி அச்சுறுத்துவது சகஜம். இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த இதய இரத்த நாளங்களின் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதில் கொலஸ்ட்ராலின் பங்கு அதிகம்.
கொலஸ்ட்ராலின் அளவை வைத்தே இதய ஆரோக்கியத்தைக் கணித்து விடலாம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவு சமநிலையில் உள்ளதா, இதயம் ஆபத்தின்றி வேலை செய்கிறதா என்பதை அறிந்துகொள்ள உதவும் 6 அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நார்மல் ட்ரைகிளிசெரைட் அளவு: ட்ரைகிளிசெரைட் என்பது ஒரு வகையான கொழுப்பாகும். இரத்தத்தில் இது அதிகமாகும்போது இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும். 150 mg/dL என்பது ஆரோக்கியமான ட்ரைகிளிசெரைட் அளவாகும். இந்த அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும் வரை இதயத்தை நோய்கள் அண்டாது.
2. நார்மல் கொலஸ்ட்ரால் அளவு: அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் கூறியுள்ள ஆலோசனைப்படி உடலில் மொத்த கொழுப்பின் அளவு 200 mg/dL அளவுக்கு உள்ளிருக்க வேண்டும் என்பதாகும். அதில் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 mg/dL அளவுக்குக் குறைவாகவும், ஹை டென்சிடி லிப்போ புரோட்டீன் (HDL) கொழுப்பின் அளவு 60 mg/dL அளவுக்கு மேலும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட இடைவெளிகளில் இவற்றை பரிசோதனை செய்து அவற்றின் அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டால் இதயம் பாதுகாப்பாக செயல்படும்.
3. குறைந்த இரத்த அழுத்தம்: அளவுக்கு அதிகமான கொழுப்பும் உயர் இரத்த அழுத்தமும் எப்பவும் இணை பிரியாமலே இருக்கும். இவை இதயத்தில் கோளாறுகளை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே, இரத்த அழுத்தத்தின் அளவை 120/80 mmHg என்ற அளவில் வைத்துப் பராமரிப்பது மிக அவசியம். இந்த அளவு குறைந்து லோ பிளட் பிரஷர் ஆனாலும் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
4. ஆரோக்கியமான உடல் எடை: மொத்த உடல் ஆரோக்கியம் காக்க உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். BMI எனப்படும் உங்களின் பாடி மாஸ் இன்டெக்ஸ் (body mass index) 18.5விலிருந்து 24.9 வரையிலுள்ள நார்மல் அளவில் இருக்கும் வரை இதயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமாக உடல் எடையை பராமரித்து வருவது இதயத்தின் சுமை குறையவும் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும்.
5. இதய நோய் அறிகுறி இல்லாதிருத்தல்: நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், சோர்வு போன்ற அறிகுறிகள் இதயத்தில் கோளாறு இருப்பதைக் காட்டுபவை. இவை ஏதும் இல்லாவிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மிக நார்மலாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இதயமும் சீராக இயங்கும்.
6. சக்தியின் அளவு தொடர்ந்து குறைவின்றி வெளிப்படுதல்: கொலஸ்ட்ரால் அளவு சமநிலையில் இருக்கும்போது உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. கொலஸ்ட்ரால் அதிகமானால் சக்தியின் வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியில் குளறுபடி உண்டாகி உடல் சோர்வடையும் நிலை ஏற்படும்.
இதனால் உடலில் கொழுப்பின் அளவு சம நிலைப்பட்டால் இதயம் கோளாறின்றி சீராக இயங்கும் என்பது உறுதியாகிறது.