
வேப்பிலை என்றதும் அதன் கசப்பான தன்மையே பலருக்கும் நினைவிற்கு வரும். பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இந்த வேப்பிலை மரமாகவோ அல்லது செடியாகவோ இருப்பதைக் காண முடியும். வேப்ப மரத்தில் உள்ள காய், பழம், இலை, பூ என்று அனைத்துமே ஆரோக்கியமான பயன்களை நமக்கு தரக்கூடியது. பல வருடங்களாக வேப்பிலை ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இது சருமப் பிரச்னை, ஜுரம், வீக்கம், ஈறு பிரச்னைகள் போன்றவற்றை சுலபமாக குணமாக்கிவிடும். இந்த பதிவில் வீட்டில் வேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதன் 5 விதமான நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி காண்போம்.
1. சமையலறையில் வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்புகளில் அவ்வப்போது சிறு பூச்சிகள் வந்துவிடும். இது பெரிய தொல்லையாக இருக்கிறதா? இதை நினைத்து கவலைப்பட வேண்டாம். காய்ந்த வேப்பிலையை இரண்டு அல்லது மூன்று எடுத்து அரிசி, பருப்பு இருக்கும் பாத்திரத்தில் போட்டுவிடவும். வேப்பிலையின் வாசனை மற்றும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் பூச்சிகளை எளிதில் விரட்டியடித்துவிடும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை காய்ந்த வேப்பிலையை மாற்றிவிடுவது இன்னும் நல்ல பலனைத் தரும்.
2. வீட்டில் உள்ள அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளில் இன்னமும் நாப்தலின் உருண்டைகளைத்தான் பயன்படுத்துகிறீர்களா? இயற்கையான காய்ந்த வேப்பிலைகளை ஒரு வெள்ளை துணியில் கட்டி அதை துணிகள் இருக்கும் அலமாரியில் வைத்து விடுங்கள். இது பூச்சிகளை விரட்டும், பூசணம் பிடிப்பதைத் தடுக்கும், அதிகமாக ஈரப்பதம் இருந்தால் அதை உறிஞ்சிக்கொள்ளும், இயற்கையான நல்ல நறுமணத்துடன் வைத்துக்கொள்ளும். வெறும் வேப்பிலை மட்டும் வைக்காமல் அதனுடன் சூடத்தையும் சேர்த்துக்கொள்ளும்போது இன்னும் நல்ல நறுமணம் தரும்.
3. வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் குணங்கள் இருப்பதால், இது பாத்திரம் கழுவுவதற்கான சிறந்த டிஷ் வாஷ் கிளினராகப் பயன்படுகிறது. வீட்டிலேயே வேப்பிலை டிஷ் வாஷ் கிளினரை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் வேப்பிலை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு இதனுடன் வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, எலுமிச்சை தோல் சேர்த்துக் கொள்ளவும். நல்ல நுரை வருவதற்கு பூந்திக்கொட்டைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த டிஷ் வாஷ் உங்கள் கைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது. ஆனால், பாத்திரத்தில் இருக்கும் கறைகளை எளிதில் போக்கிவிடும்.
4. உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இயற்கையான வழி உள்ளது. செடிகளில் இருக்கும் பூச்சிகளை கொல்வதற்காக அதிகப்படியான செயற்கை உரம் போடுவது நல்லதல்ல. எனவே, வேப்பிலையை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டியதும் இறக்கி ஆற விடவும். பிறகு ஆறியதும் அதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் மீது ஸ்ப்ரே செய்யவும். செடிகளில் இருக்கும் பூச்சிகள் இதனால் அழிந்துவிடும். செடிகளும் நன்றாக துளிர்த்து வளரத் தொடங்கும்.
5. எந்தவிதமான சருமப் பிரச்னை இருந்தாலும் அதற்கு நிச்சயம் வேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், anti inflammatory குணங்கள் சருமத்தில் உள்ள ஆக்னே, சொறி, பொலிவிழந்த முகம் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவும். வேப்பிலை சிறிது எடுத்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடவும். முகம் நன்றாகப் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள Tanஐ நீக்குவதற்கு வேப்பிலை பேஸ்டுடன் தயிர், மஞ்சள் பொடி சேர்த்து கலந்து தடவவும்.